இந்த வாட்டி பெருங்களத்தூர் இல்லை.. சிங்கபெருமாள் கோவில்..10 கிமீ ஸ்தம்பித்த சென்னை திருச்சி சாலை
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். இதன் காரணமாக சென்னை ஜிஎஸ்டி சாலையில் ஒரு மணி நேரமாக கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து ஊர்ந்தபடி செல்வதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.. இதையடுத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்..

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை ஞாயிறு அன்று கொண்டாடப்பட உள்ளது. இன்னும் ஒரு நாளே தீபாவளி பண்டிகைக்கு உள்ளதால் லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 2734 பேருந்துகள் மூலம் ஒரு லட்சத்து 36ஆயிரத்து 700 பேர் வெளியூருக்கு பயணம் செய்துள்ளார்கள்.
அதே நேரத்தில் இன்றும் நாளையும் வெளியூர் செல்ல 2 லட்சத்து 23ஆயிரத்து 613 பேர் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். இது தவிர ஆம்னி பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கை சேர்ந்தால் பல லட்சமாக இருக்கும்.

சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பலரும் இன்றுதான் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறார்கள். சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், திருச்சி என தென் மாவட்டங்களுக்கு செல்வோரும், மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு செல்வோரும், பெருங்களத்தூர் வழியாக செங்கல்பட்டை பரனூரை கடந்து தான் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது.
மேற்கு மாவட்டத்தினர் ஸ்ரீபெரும்புதூர், வேலூர் வழியாக போக முடியும் என்றாலும் கள்ளக்குறிச்சி வழியாக செல்வதே எளிதானது, தூரம் குறைவு ஆகும். ஒட்டுமொத்தமாக சென்னைவாசிகள் பலர் பயணிப்பதால் தாம்பரம் முதல் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை ஜிஎஸ்டி சாலையில் சிங்கபெருமாள் கோவில் முதல் செங்கல்பட்டு வரையிலும், சுமார் 10 கிமீ தூரம் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்கின்றன. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிங்கபெருமாள் கோவில் பகுதியில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. சொந்த வாகனங்களில் ஏராளமானோர் செல்வதால் ஜிஎஸ்டி சாலை மொத்தமும் ஸ்தம்பித்து போய் இருந்தது.
இதனிடையே சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள கடும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்வதற்காக, போக்குவரத்து போலீஸார் மற்றும் காவல்துறையினர் களம் இறங்கி உள்ளனர். பல்வேறு இடங்களில் போலீசார் வாகன நெரிசலை சீர் செய்து வருகிறார்கள். இன்று ஒரே நாளில் ஆம்னி பேருந்து, கார்கள், இருசக்கர வாகனங்கள், அரசு பேருந்துகள் என பல வாகனங்கள் ஜிஎஸ்டி சாலையில் செல்வதால், திருச்சி சாலையில் உளுந்தூர் பேட்டை வரையிலுமே வாகன நெருக்கம் அதிகமாக இருக்கும். உளுந்தூர் பேட்டையில் இருந்து சேலம் சாலையில் வாகனங்கள் பாதி சென்றுவிடும் என்பதால் அதன் பிறகே ஓரளவு வாகன நெருக்கம் குறைவாக வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications