சென்னை பாடியில் தேமுதிக பிரமுகர் கொலை.. மகனை பள்ளியில் விட்டு விட்டு வரும்போது பயங்கரம்
சென்னை: சென்னையில் பாடி தேமுதிக பிரமுகர் ஒருவர் பயங்கர ஆயுதங்களால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
பாடி முல்லை நகரை சேர்ந்தவர் பாண்டியன் (45). தேமுதிக பிரமுகரான இவர் பொறியாளர் பிரிவில் பதவியில் உள்ளார். முன்பு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வில்லிவாக்கம் தி நகர் தொகுதியில் இவர் போட்டியிட்டார்.
கட்டட காண்டிராக்டரான பாண்டியன் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் இன்று காலை அண்ணாநகரில் உள்ள பள்ளியில் படிக்கும் தனது மகனை இரு சக்கர வாகனத்தில் கொண்டு வந்து விட்டு விட்டு வீடு திரும்பினார்.

கும்பல்
அப்போது பாடி குமரன்நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அருகில் தனது வாகனத்தில் பாண்டியன் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் திடீரென 6 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து வழி மறித்தது.

தப்பியோடிய கொலையாளிகள்
அவர்களின் கையில் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டியன் அங்கிருந்து தப்ப முயன்றார். எனினும் அந்த 6 பேரும் அவரை சுற்றி வளைத்தனர். பின்னர் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பயங்கரமாக வெட்டினர். இதனால் ரத்த வெள்ளத்தில் பாண்டியன் சுருண்டு விழுந்து அதே இடத்தில் பலியானவுடன் அவர்கள் தப்பி சென்றனர்.

முன்விரோதம்
பாண்டியனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை விற்பனை செய்தது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்த வீட்டை விற்றதில் பாண்டியன் சிலருக்கு புரோக்கர் கமிஷனும் பாக்கியிருந்ததாக கூறப்படுகிறது.

செல்போனில் பேச்சு
இந்த முன் விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்று இரவு பாண்டியனை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் பேசியுள்ளனர்.

சிசிடிவி கேமராக்கள்
அப்போது இரு தரப்புக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அந்த கும்பல்தான் பாண்டியனை கொலை செய்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது. பாண்டியனின் செல்போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications