2005 முதல் 2026 வரை.. தேமுதிக அமைத்த மெகா கூட்டணி வரலாறு.. திமுகவுடன் பிரேமலதா கைகோர்த்தது எப்படி?
சென்னை: 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை மதுரையில் பிரம்மாண்டமாக தொடங்கினார் விஜயகாந்த். அதே வேகத்தில் 2006 சட்டசபைத் தேர்தலில் தனித்து களமிறங்கிய விஜயகாந்த் கட்சி, சுமார் 8.4 சதவிகித வாக்குகளை பெற்றது. அப்போது விருத்தாசலத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமே வென்றார்.
இதன்பின் 2009 லோக்சபா தேர்தலிலும் தேமுதிக தனித்தே களம் கண்டது. அப்போது ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை என்றாலும், 10.3 சதவிகித வாக்குகளை பெற்றது. இதன்பின் 2011ஆம் ஆண்டு அதிமுக தலைமையிலான கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்டார். அப்போது 29 தொகுதிகளில் தேமுதிக வென்றதோடு, எதிர்க்கட்சியாகவும் அமர்ந்தது. எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் இருக்கையில் அமர்ந்தார்.

தேமுதிக கூட்டணி
அப்போது தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் 7.9ஆக சரிந்தது. ராமதாஸ்-க்கு கூட கிடைக்காத அங்கீகாரம் விஜயகாந்திற்கு விரைவாகவே கிடைத்தது. ஆனால் அந்த தேர்தலுக்கு பின் தேமுதிக சரியத் தொடங்கியது. 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தார். அப்போதும் தேமுதிக 14 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெல்லவில்லை.
கருணாநிதி விடுத்த அழைப்பு
அப்போது தேமுதிக வாக்கு சதவிகிதம் 5.1ஆக சரிந்தது. பின்னர் 2016 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி உருவாகியது. மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுடன் 3வது அணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.
மக்கள் நலக் கூட்டணி
அதில் 104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்தும் தோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் 2.41ஆக குறைந்தது. பின்னர் 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து 4 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, ஒன்றிலும் வெல்லவில்லை.
விஜயகாந்த் மறைவு
இம்முறை வாக்கு சதவிகிதம் 2.19ஆக குறைந்தது. இதன்பின் 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது அமமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து 60 தொகுதிகளில் போட்டியிட்டது. அப்போதும் மீண்டும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததோடு, வாக்கு சதவிகிதம் 0.43ஆக குறைந்தது. இதன்பின் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் காலமானார்.
அதிமுக பக்கம் சென்ற தேமுதிக
இதனால் தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் பொறுப்புக்கு வந்தார். பின் நடந்த லோக்சபா தேர்தலில் தேமுதிக அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் விருதுநகர் தொகுதியில் களமிறங்கிய விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இம்முறையில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தாலும், வாக்கு சதவிகிதம் 2.59ஆக அதிகரித்தது.
திமுக கொடுத்த அழைப்புகள்
இதனால் 2026 சட்டசபைத் தேர்தலில் பிரேமலதா விஜயகாந்தின் கூட்டணி முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2011, 2016, 2019 ஆகிய 3 தேர்தல்களிலும் திமுக தரப்பில் தேமுதிகவுக்கு கூட்டணி அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த 3 முறையும் விஜயகாந்த் திமுக கூட்டணியில் இணையவில்லை. ஆனால் கருணாநிதி மறைந்த போது விஜயகாந்த் வெளியிட்ட இரங்கல் வீடியோ திமுகவினரையும் உலுக்கிவிட்டது.
பிரேமலதா விஜயகாந்த் திட்டம்
இதனால் திமுகவினருக்கு விஜயகாந்த் மீது எப்போதும் ஒரு சாப்ட் கார்னர் இருந்தது. இப்படியான சூழலில் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக தேமுதிகவுக்கு ஒரு எம்எல்ஏ, ஒரு எம்பி கூட இல்லாத சூழலில், இம்முறை சட்டசபையில் தேமுதிக நிர்வாகிகளை அமர்த்திட வேண்டும் என்பதில் பிரேமலதா விஜயகாந்த் பிடிவாதமாக உள்ளார்.
யாருக்கு பலம்?
இதன் காரணமாகவே பிரேமலதா விஜயகாந்த் திமுகவுடன் கைகோர்த்திருப்பதாக பார்க்கப்படுகிறது. வட மாவட்டங்கள், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் தேமுதிகவுக்கு கணிசமான வாக்குகள் உள்ளது. இதனால் திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவால், இந்தக் கூட்டணியின் பலம் அடுத்தக் கட்டத்திற்கு உயர்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.











Click it and Unblock the Notifications