தேமுதிக கூட்டணிக்குள் வந்தால் 31 தொகுதிகள் கூடுதலா கிடைக்கும்.. திமுக சர்வேயில் கிடைத்த டேட்டா!
சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றால் கூடுதலாக 31 இடங்கள் கிடைக்கும் என்று திமுகவின் சர்வே முடிவுகளில் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியை திமுக மேற்கொண்டதாகவும், இதன் பின்னணியில் சபரீசன் மற்றும் அமைச்சர் எ.வ.வேலு பணியாற்றியதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
தேமுதிக தொடங்கப்பட்டு 21 ஆண்டு கால அரசியல் வரலாற்றில், முதல்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. எத்தனையோ முறை ஸ்டாலின் நேரில் சென்று விஜயகாந்த்தை சந்தித்த போதும் அமையாத கூட்டணி, இம்முறை இயல்பாகவே அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு பின் கட்டமைப்பு ரீதியாக தேமுதிக பலமாக உள்ளது.

சுமார் 37 ஆயிரம் பூத் கமிட்டி அமைப்புகளை தேமுதிக பாதுகாத்து வைத்திருக்கிறது. இதனால் தேமுதிகவின் வருகை கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் திமுகவுக்கு பலன் அளிக்கும் என்று கருதப்படுகிறது. இதனிடையே இந்தக் கூட்டணி அமைந்தது எப்படி என்ற கேள்விகள் பலருக்கும் எழுந்துள்ளன.
இதற்கு அதிமுக மீதான அதிருப்தியே காரணம் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த மாநிலங்களவை தேர்தலின் போதே ஒரு சீட் தேமுதிகவுக்கு கொடுப்பதாக எடப்பாடி பழனிசாமி உறுதி கொடுத்திருந்தார். ஆனால் லோக்சபா தேர்தலில் அடைந்த தோல்வி காரணமாக 2 சீட்டையும் அதிமுகவினருக்கு கொடுத்தார். இது பிரேமலதா விஜயகாந்த்க்கு அதிருப்தியை கொடுத்தது.
இதன் காரணமாக மட்டுமே திமுக கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தையை நடத்தவில்லை. திமுகவுக்கு தேர்தல் பணிகளை மேற்கொண்டு வரும் பென் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சர்வே பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த முறை விஜய் வருகை காரணமாக சின்ன சின்ன டேட்டாவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அந்த வகையில் திமுக நடத்திய சர்வேயில் கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றால் கூடுதால் 31 இடங்கள் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதன்பின்னரே தேமுதிகவை திமுக கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியை சபரீசன் மேற்கொண்டிருக்கிறார். தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்ய சபா சீட் உறுதி என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக சபரீசன் மற்றும் அமைச்சர் எ.வ.வேலு இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் அண்ணா அறிவாலயம் வந்து கூட்டணியில் இணைய ஒப்புக் கொண்டிருக்கிறார். திமுகவுடன் கூட்டணி அமைத்தது தேமுதிக நிர்வாகிகள் மத்தியில் உற்சாகம் அளித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications