எடுபடாத பிரேமலதா விஜயகாந்த் பேச்சு! கடலூரில் திமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக நிர்வாகிகள்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ள நிலையில், தற்போது பல இடங்களில் தேமுதிக நிர்வாகிகள் லோக்கல் அண்டர்ஸ்டேன்டிங் மூலம் திமுகவுடன் கரம் கோர்த்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தேமுதிகவுக்கு திமுக கூட்டணியில் 3-வது வார்டு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கூட்டணி விவகாரத்தில் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் ஒரு மாதத்திற்கு முன்பே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டதே தலைமை மீதான அக்கட்சி நிர்வாகிகளின் கோபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. திமுக, அதிமுகவில் யாருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுப்பது எனத் தெரியாமல் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் திணறி வருகிறார்கள். காரணம் ஒரு வார்டுக்கு 10 முதல் 15 பேர் வரை சீட் கேட்டு விருப்பமனு கொடுத்திருப்பது தான். ஆனால் தேமுதிகவிலோ எல்லாம் தலைகீழாக உள்ளது. தேர்தலில் வேட்பாளராக நிறுத்த ஆளை தேடி பிடிக்க வேண்டிய நிலை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தனித்துப் போட்டி
இந்தச் சூழலில் தேமுதிக தனித்து போட்டி என அறிவித்துவிட்டு பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இருக்க, மாவட்டங்களிலோ லோக்கல் அண்டர்ஸ்டேன்டிங் மூலம் அரசியலில் கரையேற காய் நகர்த்த தொடங்கிவிட்டனர் தேமுதிக நிர்வாகிகள். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக மாவட்ட அவைத்தலைவரே கலந்துகொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாகவும் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

தேமுதிகவுக்கு 1 வார்டு
இதனிடையே சிதம்பரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 25 வார்டுகளில் திமுக போட்டியிடுகிறது. எஞ்சிய 8 வார்டுகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் 3-வது வார்டு தேமுதிகவுக்கு திமுக கூட்டணியில் தரப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், அமமுகவுடன் தேமுதிக லோக்கல் அண்டர்ஸ்டேன்டிங் அடிப்படையில் கூட்டணி அமைத்துள்ளது.

பிரேமலதா விஜயகாந்த்
இதன் மூலம் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தின் பேச்சை கேட்க, அக்கட்சி நிர்வாகிகள் பலரும் தயாராக இல்லை என்பது தெரிய வருகிறது. தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள் என்பதால் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications