அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்?
சென்னை: 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 2026ல் ஒன்றாக இருந்த மக்கள் நலக் கூட்டணி கட்சிகளால் திமுக-வுக்கு மீண்டும் சிக்கல்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திமுக தலைமையிலான கூட்டணியில் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
குறிப்பாக அந்த கூட்டணியில் தற்போது தேமுதிக இணைந்துள்ளது தமிழக அரசியலில் எதிர்பாராத ஒன்று. தேமுதிக, திமுக கூட்டணியில் இணைவதற்கான ஆலோசனைகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.

2026 தமிழக சட்டசபை தேர்தல்
இறுதியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இதனால் 2026 தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணி மேலும் விரிவடைந்துள்ளது. தேமுதிக கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தது. ஆனால் இந்த முறை அந்தக் கட்சி பல்வேறு அரசியல் அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக பாஜக மற்றும் தவெக தரப்புகளுடன் ஆலோசனைகள் நடந்ததாக கூறப்படுகிறது.
திமுக தேமுதிக கூட்டணி
எனினும் மாநிலங்களவை இடம் வழங்கும் விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்த பேச்சுவார்த்தை முன்னேறவில்லை. இதையடுத்து தேமுதிக திமுகவுடன் ஆலோசனை நடத்தத் தொடங்கியது. அதன் பின்னர் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார். தொண்டர்களின் விருப்பத்தையும், மறைந்த தலைவர் விஜயகாந்த் அவர்களின் எண்ணத்தையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பிரேமலதா ஸ்டாலின் சந்திப்பு
கூட்டணியில் இணைவதற்கு முன் தேமுதிக தரப்பில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் ஒரு மாநிலங்களவை இடத்துடன் இரட்டை இலக்க எண்ணிக்கையில் சட்டமன்றத் தொகுதிகளும் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைகளின் பின்னர் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்கும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது.
மாநிலங்களவை இடம் தேமுதிக
இந்த ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக தேமுதிக பொருளாளர் எல்கே சுதீஷ் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் தேமுதிக திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. ஆனால் இந்த முடிவு திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளில் சில அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் தற்போது காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக உள்ளிட்ட மொத்தம் 22 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
திமுக கூட்டணி கட்சிகள்
இவற்றில் பல கட்சிகள் நீண்ட காலமாக திமுக கூட்டணியில் உள்ளன. ஆனால் சமீபத்தில் சேர்ந்த தேமுதிகவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது குறித்து சில கூட்டணி கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தரப்பில் ஆரம்பத்தில் தேமுதிகவுக்கு 10 சட்டமன்றத் தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்படும் என கூறப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. பின்னர் மற்ற கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்துவதற்காக அந்த எண்ணிக்கை 6 அல்லது 7 தொகுதிகளாக குறைக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியது.
மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட்
இந்த நிலையில் மற்ற கூட்டணி கட்சிகளும் தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் திமுக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி மதிமுகவுக்கு 4 தொகுதிகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகளும் வழங்கப்படுவது குறித்து அவர்கள் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகின.
தொகுதி பங்கீடு பிரச்சனை
ஆனால் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியானதும், மற்ற கூட்டணி கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலை நீடித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் நலக் கூட்டணி
சில கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், நீண்ட காலமாக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை விட புதிதாக சேர்ந்த தேமுதிகவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலும் மீண்டும் நினைவுகூரப்படுகிறது. அந்த தேர்தலில் அதிமுக மற்றும் திமுகக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டது.
மாஜி மக்கள் நலக் கூட்டணி
அந்த கூட்டணியில் ஆரம்பத்தில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுக இடம்பெற்றிருந்தன. பின்னர் தேமுதிக மற்றும் தமாகா அந்த கூட்டணியில் இணைந்தன. அந்த அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். ஆனால் அந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கடுமையான தோல்வி காரணமாக அந்த கூட்டணி பின்னர் சிதறியது. அதன் பிறகு 2019 மக்களவைத் தேர்தலின்போது விசிக, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்தன.
திமுகவுக்கு சிக்கல்?
தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த காலத்தில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்த கட்சிகளில் தமாகாவைத் தவிர மற்ற ஐந்து கட்சிகளும் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது பார்க்கப்படுகிறது. ஆனால், கூட்டணியில் நீண்ட காலமாக இருக்கும் கட்சிகளைப் புறக்கணித்து விட்டு தேமுதிகவை திமுகவை தாங்கிப் பிடிப்பதை பிற கட்சிகள் விரும்பவில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications