வில்லிவாக்கத்திற்கு வந்தார் விஜயகாந்த்... கையெடுத்து கும்பிட்டார் - தொண்டர்கள் உற்சாகம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரண்டாவது நாளாக இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். வில்லிவாக்கத்திற்கு வந்த விஜயகாந்தை பார்த்த தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பிரசார வேனுக்குள் அமர்ந்து அவர் கையெடுத்து கும்பிட்டு வாக்கு கேட்ட உடன் தொண்டர்கள் உற்சாக விசிலடித்தனர்.
Recommended Video

நீங்க வந்தா மட்டும் போதும் என்று சிவாஜி படத்தில் ரஜினி வசனம் பேசுவார். சரியாக பேச முடியாத சூழ்நிலையிலும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்க களமிறங்கியுள்ளார் விஜயகாந்த்.
விஜயகாந்த் எந்த குறிப்பையும் எழுதி வைத்துக்கொள்ளாமல் இயல்பாக பேசக்கூடியவர். கடந்த 2006 சட்டசபை தேர்தலில் தன்னந்தனியாக போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றவர்.

விஜயகாந்த் வெற்றி
2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்று எதிர்கட்சித்தலைவர் அந்தஸ்தை பெற்றார். தேர்தல் பிரசார களத்தில் அனல் பறக்க பேசுவார் விஜயகாந்த். கடந்த 2016ஆம் ஆண்டு முதலே அவருக்கு உடல்ரீதியாக ஏற்பட்ட பாதிப்பு பேசும் திறனையும் பாதித்து விட்டது. பேச்சுப்பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கூறினாலும் அவரால் இயல்பாக இன்னமும் பேச முடியவில்லை.

அமமுக உடன் தேமுதிக கூட்டணி
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக டிடிவி தினகரன் கட்சியான அமமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தேமுதிகவிற்கு 60 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது அமமுக. உடல் நல பாதிப்பு காரணமாகவே இந்த சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடவில்லை. விருதாச்சலம் தொகுதியில் பிரேமலதா போட்டியிடுகிறார்.

விஜயபிரபாகரன்
விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பல தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். பிரேமலதாவின் சகோதரர் சுதீசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவரால் பிரசாரத்திற்கு வர முடியவில்லை.

பிரசாரம் தொடங்கிய விஜயகாந்த்
இந்த சூழ்நிலையில் தன்னை நம்பி தேர்தலில் நிற்கும் தேமுதிக வேட்பாளர்களுக்காக தலைவர் விஜயகாந்த் வாக்கு சேகரிக்க களமிறங்கி விட்டார். முதல்நாளான நேற்று ஈசான்ய மூலை எனப்படும் கும்மிடிப்பூண்டி தொகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார் விஜயகாந்த்.

தொண்டர்கள் உற்சாகம்
விஜயகாந்த் வருகிறார் என்றாலே தொண்டர்களுக்கு உற்சாகம்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரசார வேனில் விஜயகாந்த் நிற்பதைப் பார்த்த உடன் உற்சாகத்தில் தொண்டர்கள் விசிலடித்து வரவேற்பு கொடுத்தனர். கையெடுத்து கும்பிட்டு வேட்பாளர் கே.எம்.டில்லிக்கு வாக்கு கேட்டார் விஜயகாந்த்.

வில்லிவாக்கத்தில் விஜயகாந்த்
இன்றைய தினம் மாலையில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சுபமங்களம் டில்லிபாபுவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பிரசார வேனில் அமர்ந்த படியே கையெடுத்து கும்பிட்டு முரசு சின்னத்திற்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார். சினிமாவில் கம்பீரமாக பேசிய விஜயகாந்த், சட்டசபையில் கர்ஜித்த விஜயகாந்த் இன்றைக்கு பேச முடியாத சூழ்நிலையிலும் பிரசாரத்திற்கு வந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றாலும் அவரது வருகையே தேமுதிக தொண்டர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications