Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேமுதிக சும்மா இருக்காது போலயே.. காங்கிரஸ் முடிவிற்காக காத்திருக்கிறதா? திமுகவிற்கு இது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே நிலவும் பனிப்போரை, தேமுதிக (தேசிய முற்போக்கு திராவிட கழகம்) தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் துடிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த ஊகங்கள் எழுந்துள்ளன.

DMDK Premalatha

காங்கிரஸின் பிடிவாதமும், திமுகவின் கணக்கும்

கடந்த சில வாரங்களாகவே அறிவாலயத்திற்கும், சத்தியமூர்த்தி பவனுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணங்களாக இரண்டு விஷயங்கள் முன்வைக்கப்படுகின்றன:

கூட்டு ஆட்சி கோரிக்கை: இம்முறை அமைச்சரவையில் தங்களுக்குப் பங்கு வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைமை ரகசியமாக அழுத்தம் கொடுத்து வருகிறது.

அதிக தொகுதிகள்: கடந்த முறையை விட அதிக தொகுதிகளை (சுமார் 40) காங்கிரஸ் எதிர்பார்ப்பது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவோ, எதிர்வரும் தேர்தலில் குறைந்தபட்சம் 170 தொகுதிகளில் தனித்து போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. இதனால் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.

காங்கிரஸ் திமுக மோதல்

டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மேலிடக் கூட்டம் மிக முக்கியமான கட்டத்தை எட்டியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக-காங்கிரஸ் இடையிலான பத்தாண்டு கால உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. திமுகவுடன் கூட்டணியைத் தொடர்வதா அல்லது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கைகோர்ப்பதா என்பது குறித்து விவாதிக்க, காங்கிரஸ் மேலிடம் டெல்லியில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தது.

காங்கிரஸ் குரலே மாறிவிட்டது

டெல்லியில் நடந்த காங்கிரஸ் தலைவர்கள் மீட்டிங்கிற்கு பின் அப்படியே காங்கிரஸ் குரலே மாறி உள்ளது. பெரிதாக திமுகவை அட்டாக் செய்து பேசாமல் இருந்த இப்போது விரக்தியில் பேச தொடங்கி உள்ளது. செல்வப்பெருந்தகை மீட்டிங்கிற்கு பின் பேசுகையில், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கடைசி நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததால் நிறைய பிரச்சனை வந்தது. நிறைய தர்மசங்கடம் ஏற்பட்டது. இன்னொரு பக்கம் கூட்டணி சரியாக அமைக்க முடியாமல் போனது.

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். காங்கிரஸ் தலைவர்கள்.. ராகுல் காந்தி உட்பட இங்கே வர ரெடியாக இருக்கிறார்கள். ஆனால் திமுக ரெடியா? நாங்கள் ரெடி.. அவர்கள் ரெடியா? சரியான நேரத்தில் கூட்டணி அமைத்தால்தான் பணிகளை செய்ய முடியும். பேச்சுவார்த்தை குழு அமைக்காததால் திமுக மீது எல்லோருக்கும் வருத்தம்தான் உள்ளது என்று கூறி உள்ளார்.

தேமுதிகவின் 'வெயிட்டிங்' கேம்: பின்னணி என்ன?

பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, இதுவரை எந்தக் கூட்டணியிலும் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொள்ளவில்லை. இதற்குப் பின்னால் ஒரு நுட்பமான அரசியல் கணக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது:

காங்கிரஸ் வெளியேறினால் கொண்டாட்டம்: ஒருவேளை தொகுதிப் பங்கீடு ஒத்து வராமல் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறினால், அந்த இடங்களை நிரப்ப திமுகவுக்கு ஒரு வலுவான கட்சி தேவைப்படும். அந்தச் சூழலில், தேமுதிக தங்களுக்கு அதிக தொகுதிகளைக் (சுமார் 15-20 இடங்கள்) கேட்டுப் பெற முடியும் என நம்புகிறது.

அதிகரிக்கும் பேரம் பேசும் சக்தி: திமுக - காங்கிரஸ் இடையே இழுபறி நீடிக்கும் வரை, தேமுதிகவின் முக்கியத்துவம் குறையாது. "நாங்கள் வரும் கூட்டணியே வெற்றி பெறும்" என்று பிரேமலதா கூறி வருவது திமுகவுக்கு மறைமுகமாக விடப்படும் தூதாகவே பார்க்கப்படுகிறது.

"காங்கிரஸ் வெளியேறினால் ஏற்படும் வெற்றிடத்தை தேமுதிகவை வைத்து நிரப்ப திமுகவும் ஒருபுறம் யோசித்து வருகிறது. இதனால்தான் தேமுதிக தற்போது வரை மெதுவான போக்கைக் கடைப்பிடிக்கிறது," என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

தற்போதைய நிலவரம்

தற்போதைய தகவல்களின்படி, திமுக தரப்பில் தேமுதிகவுக்கு 7 முதல் 9 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், காங்கிரஸின் நிலைப்பாட்டைப் பொறுத்து இந்த எண்ணிக்கையை இரட்டை இலக்கத்திற்கு உயர்த்த தேமுதிக காய் நகர்த்தி வருகிறது.

அதேநேரம், அதிமுக தரப்பிலும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தைகள் ரகசியமாக நடந்து வருகின்றன. எனினும், ஆளுங்கட்சியுடன் இணைவதே தேர்தல் செலவுகள் மற்றும் வெற்றி வாய்ப்புக்குச் சாதகமாக இருக்கும் என தேமுதிகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கருதுகின்றனர்.

அடுத்து என்ன?

பிப்ரவரி இறுதிக்குள் திமுக தனது தொகுதிப் பங்கீட்டுக் குழுவை அறிவிக்க உள்ளது. அப்போது காங்கிரஸ் எடுக்கும் முடிவைப் பொறுத்தே தேமுதிகவின் அடுத்தகட்டப் பயணம் அமையும். முரசு சத்தம் அறிவாலயத்தில் கேட்குமா அல்லது மீண்டும் ராயப்பேட்டையை நோக்கித் திரும்புமா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+