வெறும் சீட்டுக்காக கூட்டு வைத்தால் வேட்டு தான்.. தேமுதிகவின் 'பரிதாப' நிலை!
சென்னை: வெறும் தொகுதிகளின் எண்ணிக்கைக்காக கூட்டணி வைத்தால், என்ன நிலைமை ஏற்படும் என்பதை தேமுதிகவை பார்த்து மற்ற கட்சிகள் உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தேமுதிகவிடம் எப்போதும் ஒரு பிரச்சனை உண்டு. இதை பிரச்சனை என்பதை விட, ஒரு வித குழப்ப மனநிலை என்று கூறலாம்.
2006 சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்ட தேமுதிகவில், விஜயகாந்த் மட்டும் வெற்றிப் பெற்றாலும், கணிசமான வாக்கு வங்கியை சம்பாதித்தது.

கடைசி வரை பேச்சுவார்த்தை
ஆனால், 2011 தேர்தலில், ஆரம்பம் முதலேயே தனித்துப் போட்டி என்று கூறி வந்த தேமுதிக, யாரும் எதிர்பார்க்காத விதமாக, அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. 41 இடங்களில் போட்டியிட்டு, 29ல் வெற்றிப் பெற்று எதிர்க்கட்சித் தலைவரானார் கேப்டன் எனும் விஜயகாந்த். இவர்களுடைய பாலிசியே கடைசி வரை பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே இருப்பது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

ஆர்ப்பரிப்பு மோட்
ஆம்! 2011 தேர்தலில், அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே கிங்கா?, கிங் மேக்கரா? தனித்து போட்டி போன்ற வாக்கியங்களை அள்ளி வீசி தொண்டர்களை ஒருவித ஆர்ப்பரிப்பு மோடிலேயே வைத்திருந்தது தேமுதிக. தொண்டர்களும், 'நம்ம கேப்டன் எப்போதும் கிங்கு தான்' என்று முழங்க, சரி தேமுதிக தனித்து நிற்க போகிறது போல என்று அனைவரும் எதிர்பார்த்தால், அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் விஜயகாந்த்.

2016 தேர்தல்
இதில், 2016 தேர்தல் தான் உச்சக்கட்டம். ஜெயலலிதாவுடன் சட்டமன்றத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று நிலைக்கு வந்தது மட்டும் தான் அதிமுக எடுத்த முடிவு. மற்றபடி ஒருபக்கம் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது, மறுபக்கம் தனது தலைமையில் இதர சில கட்சிகளை இணைத்து தனித்து நிற்க ஆலோசித்து வந்தது. அதேசமயம், மக்கள் நலக் கூட்டணியுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த கட்சியுடன் கூட்டணியா?, அந்த கட்சியுடன் கூட்டணியா?, அவர்களுடன் கூட்டணியா?, இவர்களுடன் கூட்டணியா? என்று அவர்களைச் சுற்றி அவ்வளவு கேள்விகள் எழுந்தன. ஏனெனில், அவர்கள் அவ்வளவு பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

உச்சியில் இருந்து பாதாளம்
ஒருக்கட்டத்தில், திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக, கருணாநிதியே 'பழம் நழுவி பாலில் விழும்' என்று நம்பிக்கையுடன் கூற, ஊடகங்களோ 'ரைட்டு.. திமுக கூட்டணி தான் போல' என்று நினைக்க, மற்றோரு ட்விஸ்ட்டாக மக்கள் நலக் கூட்டணியில் பிரதான கட்சியாக இணைந்தது தேமுதிக. முடிவு என்னவென்று தமிழகத்திற்கே தெரியும். ஊட்டி மலை உச்சியில் இருந்த வாக்கு வங்கி, மேட்டுப்பாளையத்தில் வந்து விழுந்தது.

வெளியே தெரியாது
ஒரு கட்சி மற்றொரு கட்சியுடன் கூட்டணி வைக்கிறது என்றால், குறைந்தபட்சம் ஒரு பெர்சன்ட்டாவது கொள்கை ஒத்துப் போகணும். ஏதாவது ஒரு புள்ளியிலாவது கொள்கை ரீதியில் இணைய வேண்டும். அப்போது தான் கூட்டணிக்குள் ஒரு மனக்கசப்பு வந்தால் கூட, அது பெரிதாக வெளியே தெரியாது. ஆனால், இங்கு தேமுதிக இவை அனைத்திற்கும் நேர்மாறாக தான் இதுவரை செயல்பட்டிருக்கிறது.

தேமுதிக பரிதாப நிலை
2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தொடங்கி, 2019 மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது வரை, எந்த தருணத்திலாவது, 'இந்த கொள்கைக்காக நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம்' என்று சொல்லக் கேட்டிருப்போமா? கடைசி வரை, 'நீங்கள் எவ்வளவு சீட் கொடுப்பீங்க, நீங்க எவ்வளவு சீட் கொடுப்பீங்க?' என்று சீட் பஞ்சாயத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து கூட்டணி ஏற்படுத்தியது தேமுதிக. விளைவு, இன்று வாக்கு வங்கியும் குறைந்து, கூட்டணி வைத்த கட்சிகளும் மதிக்காமல் போகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

சாபம் விட்ட சுதீஷ்
இன்று விரும்பிய நம்பர்ஸ் கிடைக்காத காரணத்தினால், தங்கள் கோபத்தை, ஆக்ரோஷத்தை கொப்பளிக்கின்றனர் சுதீஷும், விஜய பிரபாகரனும். அதிலும், சுதீஷ் சாபம் எல்லாம் விடுகிறார். கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதற்காக சாபமா விடுவார்கள்? திமுக கூட்டணியில் இல்லாத மனக்கசப்பா?, விரிசலா? ஆனால், விசிகவோ, மதிமுகவோ, காங்கிரஸோ.. திமுக மீதான அதிருப்தியை அமைதியாக வெளிப்படுத்தினார்களே தவிர, கூட்டணியில் தொடர்ந்து பயணம் செய்கிறார்கள்.

உணரும் வாய்ப்பு
தேமுதிக, கூட்டணியில் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது அவர்களது தனிப்பட்ட விருப்பம். அதற்காக தனிமனித தாக்குதல், சாபம் இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலையா? ஓரளவுக்காவது கொள்கை ரீதியில் கூட்டணி வைக்காமல் வெறும் சீட்டுக்காக கூட்டு வைத்தால், இதுதான் நிலைமை என்பது தேமுதிக வாயிலாக இன்று அனைத்து கட்சிகளும் உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.












Click it and Unblock the Notifications