சைரன் வச்ச காரு.. சட்டசபைக்கு 20 பேரு! பிரேமலதா பேச்சால் பதற்றமான பாஜக! எடப்பாடியே ஆடிப் போயிட்டாரு!
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் மெல்ல மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும், இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் கூட்டணி அரசியலில் தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன. இந்தச் சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிகவை இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் சிக்கலாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு தேமுதிகவின் டிமாண்ட் தான் காரணம் என்கின்றனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே உறுதியாக இடம்பிடித்துள்ளன. தற்போது தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மட்டுமே மீதமுள்ளது.
'ஆட்சியில் பங்கு' என்ற கோரிக்கை சில கூட்டணிக் கட்சிகளிடமிருந்து எழுந்தாலும், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் திமுக தலைமையிடம்தான் உள்ளது. மறுபுறம், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, தமாகா, இந்திய ஜனநாயக கட்சி போன்ற கட்சிகள் உள்ளன.

தேமுதிக என்டிஏ கூட்டணி
அதிமுக-பாஜக-பாமக-அமமுக கூட்டணி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியானாலும், கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக மட்டும் இதுவரை தங்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தாமல் இருந்து வருகிறது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகும், தேமுதிகவுக்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதாக பாஜக மேலிடம் கருதுகிறது. அதனால்தான், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இடம் பெற வேண்டும் என பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக மேலிடத் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரேமலதா
இதையடுத்து, தேமுதிகவை கூட்டணியில் இணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி தேமுதிக தனது கூட்டணி முடிவை அறிவிக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்திருந்தார். ஆனால், அன்றைய தினம் கடலூரில் நடைபெற்ற மாநாட்டில் கூட்டணி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதன் பின்னர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தரப்பினருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பிரேமலதா கோரிக்கைகள்
அந்த பேச்சுவார்த்தையில், சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும், ராஜ்யசபா எம்பி பதவி வழங்க வேண்டும் என்றும் தேமுதிக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், பாஜக மேலிடத்தில் பேசி, மத்திய அமைச்சர் பதவியும் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையும் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலளித்த அதிமுக தரப்பு, 10 தொகுதிகள் வழங்க முடியும் என்றும், தேர்தலுக்குப் பிறகு ராஜ்யசபா சீட் குறித்து பரிசீலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் பதவி
ஆனால், அதிமுகவுக்கே இதுவரை மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படாத நிலையில், தேமுதிகவுக்காக பாஜகவிடம் சிபாரிசு செய்ய முடியாது என்றும், வேண்டுமானால் பாஜக தரப்புடன் நேரடியாக பேச்சு நடத்திக்கொள்ளலாம் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தை அதிமுக தலைமை, பாஜக மேலிடத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. இதையடுத்து, டெல்லியில் இருந்தபடியே தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியுஷ் கோயல், தொலைபேசி மூலம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுடன் பேசியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி
அந்த உரையாடலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றும், விரைவில் சென்னை வந்து நேரில் சந்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் தேமுதிக தரப்பு முன்வைத்த கோரிக்கைகள் தான் பாஜக வட்டாரங்களை அதிர்ச்சியடைய வைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த லோக்சபா தேர்தலில் நுாலிழையில் தோல்வியடைந்த விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி
இதைக் கேட்ட பியூஷ் கோயல், முதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலை எதிர் கொள்ளுங்கள் என்றும், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, எதிர்பார்ப்புகள் குறித்து பேசலாம் என்றும் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால், அந்த விளக்கத்திற்கும் தேமுதிக தரப்பில் இருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால், தேமுதிகவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் உள்ளது என்கின்றனர் பாஜகவினர்.












Click it and Unblock the Notifications