2016, 2021ல் நடந்தது என்ன.. கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்க திமுக தாமதம் செய்கிறதா?
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்க திமுக தலைமை தாமதம் செய்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்களான கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் நேரடியாக திமுகவை சாடியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 சட்டசபைத் தேர்தல்களில் திமுக தலைமை எப்போது கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவை அமைத்தது என்பதை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரம் மாதம் நடக்கும் என்று சில தரப்பு பேசத் தொடங்கி இருக்கிறது. சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்டதால், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையை அனைத்து கட்சிகளும் தொடங்கியுள்ளன. ஏற்கனவே அதிமுக தலைமை கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துவிட்டது. இன்னும் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியும் வருகிறது.

விரைவில் தேமுதிக மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையலாம் என்று கருதப்படுகிறது. இதன்பின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த சில நாட்களில், எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள், எந்த தொகுதிகள் என்ற முடிவுகள் பேச்சுவார்த்தை மூலமாக இறுதி செய்யப்படும். இதனை அதிமுக முன்கூட்டியே முடிக்க திட்டமிட்டுள்ளது.
மறுபக்கம் திமுக கூட்டணி இணக்கமாக இருந்தாலும், இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சி தரப்பில் டிசம்பர் மாதத்திலேயே கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது. அவர்களும் மரியாதை நிமித்தமாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். இதையடுத்து 2 மாதங்களாகியும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்கவில்லை.
இதனால் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுவதற்கு திமுக தலைமையே காரணம் என்றும், கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைப்பதற்கு தாமதம் செய்து வருவதாகவும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரன் குற்றம்சாட்டி இருக்கிறார். அதேபோல் திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைப்பதற்காக 2 மாதங்களாக காத்திருப்பதாக மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில் 2016 மற்றும் 2021 ஆகிய சட்டசபைத் தேர்தலின் போது திமுக தலைமை எப்போது கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைத்தது என்பது விவாதமாகி இருக்கிறது. 2016 சட்டசபைத் தேர்தலின் போது திமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவை மார்ச் 12-ம் தேதி அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது சட்டசபைத் தேர்தல் மே 16ஆம் தேதி நடந்தது.
அதேபோல் 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடந்தது. அப்போது திமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு பிப்ரவரி 26ஆம் தேதி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவின் பாணி என்பது தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த பின் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்கும் என்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications