உங்க விருந்தே வேண்டாம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பை புறக்கணித்த பெரும்பாலான கட்சிகள்!
சென்னை: தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் கூண்டோடு புறக்கணித்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதனிடையே இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் முக்கியமான ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது.
நீட் தேர்வு விலக்கு மசோதாவை கிடப்பில் வைத்துள்ளதால் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள் ஆளுநரின் அழைப்பை நிராகரித்துள்ளன.

தேநீர் விருந்து
சித்திரை 1-ம் நாளை முன்னிட்டு ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் இன்று மாலை தேநீர் விருந்து நடைபெறுகிறது. இந்த விருந்தில் பங்கேற்குமாறு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல் ஆளாக பிரகடனம் செய்தது.

அரசியல் கட்சிகள்
அதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, திமுக, தவாக, காங்கிரஸ், என வரிசையாக விருந்து புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. இதற்கு காரணம் தமிழக சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா மீது ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததும், அதனை அவர் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்காததுமே ஆகும்.

அதிமுக பங்கேற்பு
இதனிடையே யார் பங்கேற்றாலும் பங்கேற்காவிட்டாலும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக கலந்துகொள்ளும் என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இதேபோல் பாஜகவும் இந்த விருந்தில் பங்கேற்கிறது. விருந்தை புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை ஒரு சேர தமிழக அரசியக் கட்சிகள் ஆளுநருக்கு வெளிப்படுத்தியிருப்பது டெல்லி வரை கவனம் ஈர்த்திருக்கிறது.

அமைச்சர் வருத்தம்
நீட் விலக்கு மசோதா பற்றி ஆளுநர் ரவி எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என்றும் இதேபோல் கூட்டுறவு சங்கத் திருத்த மசோதா உள்ளிட்ட இன்னும் பல மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பது உள்ளபடியே தங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிப்பதாக இன்று காலை ஆளுநரை சந்தித்த பிறகு அமைச்சர் தங்க தென்னரசு தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications