ஹேஷ்டேக் மோதல்களால் மக்களின் நிஜ பிரச்சனைகள் மறைக்கப்படுகிறதா? எங்கே போகிறது தமிழக அரசியல் களம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், மாநில உரிமைகள் பறிக்கப்படுவது ஆகிய முக்கியமான பிரச்சனைகளுக்கு மத்தியில் சமூக வலைதளத்தில் திமுக - பாஜக ஹேஷ்டேக் யுத்தம் நடத்தி வருவது விவாதப்பொருளாகி உள்ளது. திமுக - பாஜகவின் வார்த்தை மோதலால் மக்கள் பிரச்சனைகள் மறைக்கப்படுகிறதா எனும் கேள்வி சாமானியர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் மட்டுமே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. நாள்தோறும் களத்திலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் கட்சித் தலைவர்களும், அரசியல் கட்சிகளின் அபிமானிகளும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

DMK BJP NTK

பாஜக - திமுக இடையே வெடித்த விவாதம்

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அமல்படுத்தவில்லை என்றால் கல்வி நிதி கிடையாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய விவகாரம் தமிழ்நாட்டில் பூதாகரமான நிலையில் மொழி தொடர்பான விவாதம் சூடுபிடித்துள்ளது. மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் திமுக, பாஜகவினர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் பிரதமர் மோடியை விமர்சித்து பார்க்கட்டும் என கூறினார். பிரதமர் மோடியை கெட் அவுட் என கூற தைரியம் இருக்கிறதா உதயநிதிக்கு? என கேள்வி எழுப்பினார்.

ஹேஷ்டேக் அரசியல்

இதையடுத்து திமுக சார்பில் எக்ஸ் வலைதளத்தில் #GetOutModi என்ற ஹேஷ்டேக் திமுகவினரால் டிரெண்டிங் செய்யப்பட்டது. பிரதமர் மோடியை கெட் அவுட் என கூற தைரியம் இருக்கிறதா உதயநிதிக்கு? என்று அண்ணாமலை சவால் விடுத்த நிலையில், இந்த ஹேஸ்டேக் டிரெண்டிங் செய்யப்பட்டது.

திமுக, பாஜக இடையே வார்த்தை போர் முற்றிய நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, Get Out Stalin என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்யப்போவதாகவும், யாருடைய ஹேஷ்டேக் அதிகம் பகிரப்படுகிறது என பார்ப்போம் என்றும் சவால் விடுத்திருந்தார்.

இரு தரப்பினரும் 'கெட் அவுட்' என தொடங்கும் ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வருகின்றனர். எக்ஸ் வலைதளத்தில் 'கெட் அவுட் மோடி' என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பாஜகவை திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதற்கு பதிலடியாக 'கெட் அவுட் ஸ்டாலின்' என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, திமுகவை பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்குகள் உலக அளவில் ட்ரெண்ட் ஆகின.

முக்கிய பிரச்சனைகள் இருட்டடிப்பு?

பாஜக - திமுக இடையேயான இந்த ஹேஷ்டேக் யுத்தத்தால் பல முக்கியமான பிரச்சனைகள் மறைக்கப்படுவதாக, நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மக்கள் நலனுக்கான முக்கியமான பிரச்சனைகள் இந்த ஹேஷ்டேக் அரசியல் காரணமாக காணாமல் போய்விடுவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக 14 நாட்களைக் கடந்து உள்ளிருப்பு போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக முதலீட்டாளர்கள் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இது பொருளாதார அளவுகோலில் தமிழ்நாட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். ஆனால், இதை தீர்ப்பதில் அரசு கவனம் செலுத்தவில்லை என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல, பெண்கள் பாதுகாப்பு விஷயத்திலும் தமிழக அரசு கோட்டை விட்டு வருவதாக விமர்சிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக அவ்வப்போது பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி இருந்தது. அதன்பிறகும் இதுபோன்ற கொடுமைகள் முடிவுக்கு வந்தபாடில்லை.

DMK BJP NTK

மடைமாற்றப்படுகிறதா?

அதேபோல மாநில உரிமைகளை மத்திய அரசு பறித்து வருவது முக்கியமான விஷயமாக உள்ளது. கல்வி நிதியை விடுவிக்காதது, மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் நிதி ஒதுக்குவோம் என மத்திய அமைச்சரே கூறுவது உள்ளிட்ட விவகாரங்கள் மாநில அரசுக்கு சவால் விடுப்பதாக இருந்து வருகின்றன.

ஆனால், இந்த விவகாரங்களுக்கு மத்தியில், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் பற்றிப் பேசியது, அண்ணாமலை, அறிவாலயத்தில் ஒவ்வொரு செங்கலையும் உருவுவேன் எனப் பேசியதும், அதற்கு திமுகவினரின் பதிலடிகளும், ஹேஷ்டேக் டிரெண்டிங்கும் தான் பெரியளவில் பேசப்பட்டு வருகின்றன.

பாதை மாறும் தமிழக அரசியல் களம்

அதிமுக, விஜய்யின் தவெக ஆகிய கட்சிகள் மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசி வரும் நிலையில், திமுகவும், பாஜகவும் போடும் சண்டை தான் லைம்-லைட்டில் இருந்து வருகிறது. அண்மைக்காலமாக, மக்கள் பிரச்சனைகளை விடுத்து, பதிலடி அரசியல் தான் தமிழக அரசியல் களத்தை ஆக்கிரமித்து வருகிறது.

தமிழ்நாடு, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களை விட பல்வேறு துறைகளிலும் முன்னேறி இருப்பதற்கும், கல்வியறிவில் சிறந்து விளங்குவதற்கும் முக்கியமான காரணமாகச் சொல்லப்படுவது தமிழர்களின் அரசியல் விழிப்புணர்வு தான். இன்றைக்கு அது மேலோட்டமான ஹேஷ்டேக் அரசியல் விவாதமாக உருப்பெற்றிருப்பது அவலகரமானது. வெற்று வார்த்தை மோதல்களில் இருந்து விடுபட்டு, தமிழக அரசியல் களம் பண்பட்ட பாதைக்கு திரும்பட்டும்!

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+