பதட்டத்தில் பிதற்றும் முதல்வர்.. ஸ்டாலினுக்கு மூன்று கேள்விகளை எழுப்பிய அண்ணாமலை
சென்னை: முதல்வர் ஸ்டாலின் பதட்டத்தில் பிதற்றுகிறார். திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், முதல்வரிடம் மூன்று கேள்விகளை கேட்டும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு இன்று தொடங்கியது. இதில், தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி மறுக்கப்படுகிறது என்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பினார். மேலும், புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுப்பதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் இந்தி திணிக்கப்படுவதாக தமிழக அரசு தவறாக பரப்புரை மேற்கொண்டு வருகிறது. தமிழக மாணவர்களை திமுக அரசு வஞ்சிக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தையும் பாழ்படுத்துகிறது என்று தெரிவித்தார்.
இதனால், நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதிலை ஏற்க மறுத்து திமுகவினர் முழக்கம் எழுப்பத் தொடங்கினர். மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டதையடுத்து, அவை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அநாகரீகமானவர்கள் என்ற வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்த பேச்சுக்கு முதல்வர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்!. தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?.
தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் நரேந்திர மோடி இதனை ஏற்கிறாரா?. NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?. பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!!. நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.
தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள். முதல் கேள்வி: திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார்.
இரண்டாவது கேள்வி: மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்?. உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் CBSE மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா?.
மூன்றாவது கேள்வி: யார் அந்த சூப்பர் முதல்வர்?. ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்துவிட்டது முக ஸ்டாலின் அவர்களே. இனியும் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications