"ஆட்சியில் பங்கு" காங்கிரஸ் தொண்டர்கள் உணர்வே அதுதான்.. ராகுலிடம் சொல்ல போகிறேன்.. மாணிக்கம் தாகூர்!
மதுரை: காங்கிரஸ் கட்சி மீண்டும் தனது உரிமையை விட்டுக் கொடுக்க கூடாது என்று அக்கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மதவெறி கும்பலை தோற்கடிக்க வேண்டும் என்று கூறியுள்ள மாணிக்கம் தாகூர், அத்துடன் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று சொல்வதற்காக டெல்லி புறப்பட்டுள்ளேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அதற்கேற்ப பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது விஜய் தரப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 70 சீட்கள் ஒதுக்கப்படும் என்றும், வென்றால் ஆட்சியில் பங்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவிடம் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சி கோரி வருகிறது. தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரும் ஆட்சியில் பங்கு என்பதை வலியுறுத்தி வருகிறார்.
இவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூரும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை கையில் எடுத்தார். தொடர்ச்சியாக அவரின் எக்ஸ் பக்கத்தில் ஆட்சியில் பங்கு என்ற பேசியதோடு மட்டுமல்லாமல், விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கும் ஆதரவாக பதிவிட்டார். இன்னொரு புறம் மொழிப் போரை மையமாக வைத்து உருவாகி ரிலீஸாகி இருக்கும் பராசக்தி படத்தையும் காட்டமாக விமர்சித்தார்.
இதனால் மாணிக்கம் தாகூர் மற்றும் திமுகவினர் மத்தியில் சோசியல் மீடியாவில் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக தேர்தல் தொடர்பாகவும் பேசப்பட உள்ளது.
இதில் பங்கேற்க மாணிக்கம் தாகூர் டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், இன்று காலை மதுரையில் இருந்து புறப்பட்டு புதுடெல்லி செல்கிறேன். எனக்காக அல்ல.. என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்காரர்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதற்காக .. அகில இந்திய காங்கிரஸ் தலைவரிடமும்..
இந்தியாவின் எதிர்காலம் இன்றைய எதிர்கட்சி தலைவரிடமும் கருத்து சொல்ல .. நம் உரிமையை மீண்டும் விட்டு கொடுத்து விட கூடாது என்று சொல்ல.. மதவெறி கும்பல் தோற்கடிக்க வேண்டும் அத்தோடு நம் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று சொல்ல. நட்புக்கு தோள் கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications