முரண்டு பிடிக்கும் காங்.,! இறங்க மறுக்கும் திமுக! கூட்டணி என்னவாகும்? கார்த்தி சிதம்பரம் கூறிய தகவல்
கோவை: தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்நிலையில் தான் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் மாறி மாறி விமர்சனம் செய்து வந்தனர். முதல்வர் ஸ்டாலினை, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் சந்தித்து கபேசி உள்ளார். இருப்பினும் கூட்டணியில் இழுபறி நீடித்து வரும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு எப்போது நடக்கும் என்பது பற்றி கார்த்தி சிதம்பரம் எம்பி முக்கிய விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் பங்கு வேண்டும். கடந்த முறையை விட அதிக தொககுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தியது.

இதனை திமுக ஏற்கவில்லை. இதுதொடர்பாக இருகட்சி தலைவர்கள் இடையே கருத்தது மோதல் ஏற்பட்டது. முதல்வர் முக ஸ்டாலின் அளித்த பேட்டியில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்று அறிவித்தார். இதனை விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணக்கம் தாகூர் விமர்சனம் செய்தார்.
திமுக – காங்., கூட்டணி
இதனால் இருதரப்பினர் இடையேயான மோதல் வலுத்தது. மேலும் கூட்டணி நீடிக்குமா? இல்லையா? என்ற கேள்விகள் எழுந்தன. இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி பற்றி வெளியில் கருத்து கூறக்கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டது.
இதனால் கருத்து மோதல் முடிவுக்கு வந்தது. இருப்பினும் காங்கிரஸ் கட்சி மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறது. ஆனால் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை.
கூட்டணி பேச்சில் தாமதம்
இதற்கிடையே தான் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைக்கு தேதி குறித்த நிலையில் இன்னும் காங்கிரஸ் கட்சியை அழைக்கவில்லை. இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து கழற்றிவிட திமுக முடிவு செய்துள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஸ்டாலின் – கேசி வேணுகோபால் சந்திப்பு
அதோடு தமிழகத்தில், திமுக-காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி உள்ளது. இதையடுத்து தான் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். காங்கிரஸ் - திமுக இடையேயான மோதலலுக்கு நடுவே பேச்சுவார்த்தை நடத்தினார்.
காங்கிரஸ் பிடிவாதம்
அப்படி இருந்தும் இருகட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக தொடங்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் தரப்பில் 40+ தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் கேட்பதும் தான் காரணம் என கூறப்படுகிறது.
ஆனால் திமுகவோ அதனை விரும்பவில்லை. 25 முதல் 28 தொகுதிகள் + ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்க மட்டுமே திமுக நினைப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலவரம் பெரும் கேள்விக்குறியாக்கி உள்ளது.
கார்த்தி சிதம்பரம்
இந்நிலையில் தான் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கோவையில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது; "தமிழ்நாடு விவகாரத்தில், முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் தான் கூட்டணியை வழிநடத்துகிறார். நாங்கள் அவருடன் இருக்கிறோம். காங்கிரஸ் உயர்மட்டக் குழு திமுகவுடன் பேசியுள்ளது. தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து ஒன்று அல்லது இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளில் முடிவுக்கு வருவோம். முதலமைச்சர் ஸ்டாலின் நல்லதொரு பெரிய கூட்டணியை உருவாக்கியுள்ளார். எனவே, நாம் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் உள்ளது" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications