அமித்ஷாவை பார்த்தால் திமுகவுக்கு ஏன் ஷாக்?.. பாஜகவைப் பார்த்தால் சிரிப்புதான் வருது - கலாய்த்த ராசா
சென்னை: திமுகவைப் பார்த்து ஷாக் அடித்துதான் பாஜகவினர் இங்கு வருகிறார்கள். பாஜகவினரின் பிளவுவாதமும், மத அரசியலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. எங்களுக்கு என்ன பயம். பாஜகவினரைப் பார்க்கும்போது சிரிப்பாகத்தான் வருகிறது என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆ.ராசா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சர் என்பதை மறந்து அமித் ஷா மதுரையில் பேசியிருக்கிறார். அவரது பேச்சு அப்பட்டமான பொய், அருவருப்பான வஞ்சகம், பிளவு நோக்கம் கொண்ட சூதுரை. இந்த மூன்றை தவிர அவருடைய பேச்சில் வேறு எதுவும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு மாநிலத்திற்கு வருகிறபோது அவருடைய தகுதி, பொறுப்பு, கடமை பற்றி சிறுதும் கவலைப்படாமல் அவதூறுகளை அள்ளி வீசுவதும், அந்த மாநிலத்தில் மாற்றுக் கட்சி ஆட்சி இருந்தால் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறுவதும், மதவாத பிரச்சனைகளை வேண்டுமென்ற உண்டாக்கி, சட்டம்-ஒழுங்கு பிரச்னையைத் தூண்டும் வகையில் பேசி அதன் மூலம் அரசியல் ஆதாயத்தை காணலாமா கிடைக்குமா என்பது போன்ற பேச்சு அவரது பேச்சில் வெளிப்பட்டிருக்கிறது.
இது, கூட்டாட்சி தத்துவத்திற்கு நல்லதல்ல. அவருடைய பேச்சை நாங்கள் ஒவ்வொரு வரியாக ஆதாரம் காட்ட முடியும். இதுமாதிரியான அரசியல் போக்கை அவர் இத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது. தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசின் நிதி கிடைக்காவிட்டாலும், மாநில நிதியில் இருந்து எடுத்து வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
திமுகவைப் பார்த்து ஷாக் அடித்துதான் பாஜகவினர் இங்கு வருகிறார்கள். பாஜகவினரின் பிளவுவாதமும், மத அரசியலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. எல்லா தேர்தலிலும் தமிழக மக்கள் முதல்வரின் பின்னால் இருக்கிறார்கள். இதனை புரிந்து கொள்ள முடியாமல், ஜீரணிக்க முடியாமல் தான் பாஜகவினர் இங்கு வந்து பேசுகிறார்கள். எங்களுக்கு என்ன பயம்? பாஜகவினரைப் பார்க்கும்போது சிரிப்பாகத்தான் வருகிறது.
எம்பி தேர்தலின்போது பிரதமர் மோடி 5 முறை வந்தார். ஏன் தமிழ்நாட்டைப் பார்த்து பயந்தார். சுதந்திர இந்தியாவில் இதுபோன்று பிரதமர் 5 முறை ஒரு மாநிலத்திற்கு வந்து பார்த்திருக்கிறீர்களா. எத்தனை முறை மோடி வந்தாரோ, அவ்வளவு வாக்கு வித்தியாசம் நீலகிரியில் எங்களுக்கு அதிகரித்தது. மோடியும், அமித் ஷாவும் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வர வேண்டும். அவர்கள் வந்தால்தான் திமுகவிற்கான வாக்குகளும், எங்களுடைய இலக்குகளும் அதிகரிக்கும்.
தேர்தல் வாக்குறுதிகள் 98.5 சதவீதம் நிறைவேற்றி விட்டோம். இதுதொடர்பான விவாதத்திற்கு நான் கூப்பிடுகிறேன். விவாதிக்க அமித் ஷா தயாரா.. டெல்லியிலா, சென்னையிலா, புவனேஸ்வரத்திலா எங்கு வேண்டுமானாலும் விவாதிக்கலாம். ஆனால், ஹிந்தியில் மட்டும் பேசாதீர்கள். மதுரை எய்ம்ஸுக்கு கொடுக்க வேண்டிய நிதிக்கே காத்திருக்கிறோமே.
அமித் ஷாவையும், மோடியையும் பார்த்து நாங்கள் பயப்படவில்லை. அவர்கள் சாதாரணமான ஆள்கள். அவர்களுக்கு பின்னால் இருக்கிற ஒரு அரசியல் சித்தாந்தம் எல்லா இடங்களிலும் படையெடுத்து ஜெயிக்கிறது. ஆனால் இங்கு ஏன் ஜெயிக்க முடியவில்லை? ஏனென்றால் எங்களிடம் இங்கு மாற்று சித்தாந்தம் உள்ளது.
திராவிட இயக்க சித்தாந்தம் இருக்கும்வரை அவர்களால் இங்கு காலூன்ற முடியாது. நாங்கள் டெல்லி அல்ல, நாங்கள் ஹரியானாவோ மகாராஷ்டிரமோ அல்ல, நாங்கள் தமிழ்நாடு, நாங்கள் திராவிடம், அவர்கள் இங்கு வர முடியாது. தென் மாநிலங்களின் ஆதரவு இன்றி அவர்களால் இப்போது நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற முடியும் என்பதற்காகத்தான் தொகுதி மறுசீரமைப்பைக் கொண்டு வருகிறார்கள். அதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் முறியடித்துள்ளார்.
அரசியல் உள்நோக்கத்திற்காகவே மதுரையில் முருகன் மாநாடு நடத்துகிறார்கள். இந்து மத ஒற்றுமைக்காகவோ, முருகனுக்காகவோ இவர்கள் மாநாடு நடத்தவில்லை. மதவாதத்தை ஏற்படுத்த வேண்டும். பிளவுவாதத்தை ஏற்படுத்த வேண்டும். கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரிவினையை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications