காங்கிரஸ்காரனுக்கு மரியாதையே தரல.. திமுகவால் எங்களுக்கு ரொம்ப அவமானம்.. மாணிக்கம் தாகூர் புகார்
சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியில் கூட்டணி அரசு நடைபெறுகிறது. திமுக அதன் பழைய கூட்டணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. இந்நிலையில் திமுக ஆட்யில் எங்களுக்கு மரியாதை கிடைக்கவில்லை. தவெக ஆட்சியில் அது கிடைக்கிறது என்று மாணிக்கம் தாகூர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மக்களுக்கு நல்லது செய்வதற்காக தான் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டோம். மரியாதையும் கேட்டோம். இதெல்லாமே போன ஆட்சியில் கிடைக்கவில்லை. அவையெல்லாம் இப்போது கிடைத்துவிட்டது. அதனால் மக்களுக்கு நல்லது செய்ய முடிகிறது. கடந்த ஆட்சியில் காங்கிரஸ் காரனுக்கு உரிய மரியாதை இல்லாமல் இருந்தது.

திமுக ஆட்சியில் அவமானம்
அந்த அவமானங்களை எல்லாம் சொல்லித்தானே ஆட்சியில் பங்கு கேட்டோம். ஆட்சியில் பங்கு என்பதை தமிழகம் ஏற்று கொள்ளாது என்றனர். இப்போது தமிழகம் ஏற்றுவிட்டது தானே. எங்கள் கட்சி சார்பில் மழை நிவாரண மையம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னைக்கான உதவி எண்களை அறிவித்துள்ளோம். இதேபோல மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கான உதவி எண்களை அந்தந்த மாவட்ட தலைவர்கள் அறிவிக்கவுள்ளனர்.
மழைகாலம் முடியும் வரை இந்த நிவாரண மையங்கள் இயங்கும். மழை, புயல் எதுவாக இருந்தாலும் வரும் முன் காப்பது நல்லது. அதற்காகவே காங்கிரஸ் தயார் நிலையில் உள்ளது. அரசை போல காங்கிரஸ் தோழர்கள் உள்ளனர் என்பதை சொல்வதற்கான முயற்சி இது. எங்களை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி மற்றும் நன்கொடையாளர்கள் பங்களிப்பில் செயல்படுத்த போகிறோம். வேறு யாரிடமும் நிதி கேட்க போவதில்லை. யார் என்ன பங்களிப்பு கொடுக்கிறார்கள் என்பதை சொல்வோம்.
அண்ணாமலை ஆர்எஸ்எஸ் முகமூடி
நிவாரண பொருட்கள் வந்து கொண்டே இருக்கின்றன. நாளை மறுநாள் (25 ஆம் தேதி) சென்னையில் மிகப்பெரிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயல் அடிக்கும் என்றும் சொல்லியுள்ளனர். வந்தவுடன் செய்வதில் பயனில்லை என்பதால் இப்போதே செய்கிறோம். எஸ்ஐஆர் விவகாரத்தில் முன்பு காங்கிரஸ் தூங்கி கொண்டிருந்ததா என அண்ணாமலை கேட்கிறார். இப்போது அண்ணாமலை ரொம்ப பேசுகிறார்.
தவறு நடந்தபோது அவர் தூங்கி கொண்டிருந்தாரா. தவறுக்கு துணை சென்றாரா. அண்ணாமலை இன்றும் ஆர்எஸ்எஸ் முகமூடி தான். அவர் சொல்வதை கேட்டு கொண்டே இருக்க வேண்டாம். தமிழகத்தில் தீயசக்தி போல வளர்ந்து கொண்டிருக்கிறது. கட்சி வேறாக இருக்கிறது. ஆனால் பாஜக குரலாகவே ஒலிக்கிறார். பாஜக அரசியல் தமிழகத்தில் எடுபடவில்லை. அதனால் புதிய பேனரில் வருகிறார்கள். போலிகளை கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications
