கருணாநிதி சமாதியில் கோவில் கோபுரம்! அநியாயத்திற்கு ஒரு அளவே இல்லையா? சேகர்பாபுவை விளாசிய அண்ணாமலை!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில் இன்று இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையை முன்னிட்டு கலைஞர் சமாதியில் அமைச்சர் சேகர்பாபு மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் சமாதியில் கோவில் போன்று அலங்கரித்து இந்து மக்களின் நம்பிக்கையை புண்படுத்தி உள்ளதாக விமர்சித்துள்ளார் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. துறை சார் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று தமிழக பட்ஜெட்டின் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை நடைபெறுகிறது.
இதில் அத்துறை தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளிக்கிறார். இந்த நிலையில் மானிய கோரிக்கையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, பேரறிஞர் அண்ணா ஆகியோரின் நினைவிடங்களில் அமைச்சர் சேகர்பாபு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதில் கலைஞர் சமாதியில் கோபுரம் போல் அமைக்கப்பட்டு அதில் தமிழக அரசின் சின்னமும் இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரும் இடம் பெற்று இருந்தது. இந்த நிலையில் இந்துக்களின் மனதை சேகர்பாபு புண்படுத்தி விட்டதாக சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்திருக்கிறது. திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமல.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," திமுக அமைச்சர்களிடையே, முதலமைச்சர் குடும்பத்துக்கு யார் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என்ற போட்டியில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து, தொழில் போட்டியில் வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள்.
கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தனது தொழில் போட்டிக்கு, இந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மறைந்த தனது தலைவர் மீது அத்தனை பாசம் என்றால், அமைச்சர் சேகர்பாபு, தனது வீட்டு பூஜையறையில் அவரது புகைப்படத்தை வைத்து வணங்கட்டும். நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்." என கூறியுள்ளார்.
பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில்,"அநியாயத்திற்கு ஒரு அளவே இல்லையா? திராவிட மாடல் அரசின் அராஜகத்திற்கு எல்லையே இல்லையா? கருணாநிதியின் சமாதியில் கோவில் கோபுரத்தை வரைந்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. ஒட்டு மொத்த ஹிந்துக்களை இழிவுபடுத்தும் செயல் இது. முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உடனடியாக இந்த செயலை கண்டிப்பதோடு, சமாதியின் மீது உள்ள கோபுரத்தை அகற்ற உத்தரவிட வேண்டும். ஹிந்து விரோத திமுக அரசே, ஆலயத்தை விட்டு வெளியேறு. இந்த நாள் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சமாதி கட்ட துவங்கிய நாளாகட்டும்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications