குடிநீருக்காக போராட போகும் திமுக.. மழைக்காக போராட போகும் அதிமுக.. நாளைக்கு செம்ம மாஸ் இருக்கு
சென்னை: தமிழகத்தில் மழையை கொண்டுவர கட்சி பிரமுகர்கள் அனைவரும் மழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்தவேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். குடிநீருக்காக திமுக நாளை போராட்டம் நடத்த உள்ள நிலையில் அதிமுக அதற்கு போட்டியாக நாளை மழைக்காக யாகம் வளர்க்க முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிநீருக்காக மக்கள் பல இடங்களில் தவித்து வருகிறார்கள். குறிப்பாக சென்னையில் குடிநீர் பஞ்சம் இதுவரை இல்லாத அளவாக உள்ளது. மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்க நினைத்தாலும் கிடைப்பதில்லை. போர்களிலும் தண்ணீர் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

இதனிடையே குடிநீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் எடுத்துவர முடிவு செய்துள்ளது. இதேபோல் மற்ற ஊர்களில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே கட்சி தொண்டர்களையும் மழைக்காக இணைந்து செயல்படும்படி புதிய உத்தரவை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதிமுக தலைமை இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள கோயில்களில் மழை வேண்டி யாகம் நடத்த வேண்டும். இந்த யாகங்களில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோயில்களில் நாளை நடைபெறும் யாகத்தில் முதல்வர் பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் பங்கேற்க உள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.குடிநீர் பிரச்சனைக்காக திமுக நாளை மாவட்டம் தோறும் போராட்டம் நடத்தவுள்ள நிலையில், அதற்கு போட்டியாக மழைக்காக யாகம் வளர்க்க அதிமுக தலைமை அறிவித்து இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications