Election Special: இது கருணாநிதி காலத்து திமுக இல்லை! குமுறும் உடன்பிறப்புகள்! கேட்டுக்கொள்ளுமா தலைமை
சென்னை: திமுகவில் தற்போது களமிறக்கப்பட்டுள்ள பல்வேறு தேர்தல் வியூகக் குழுக்களின் ஆதிக்கம், கட்சித் தலைமையைத் திசைதிருப்புவதோடு, அடிமட்டத் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கடும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திமுக தலைவருக்கும், மாவட்ட செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் இடையேயான ஒரு பிணைப்பு, முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் இருந்தது. ஆனால் அது இப்போது அறுந்துபோயுள்ளது. இயந்திரத்தனமாக வேலை நடப்பதாக திமுக நிர்வாகிகள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

ஒருமித்த கருத்தில்லை
எதிர்வரும் தேர்தலைச் சந்திக்க திமுக தலைமை, பல தனியார் தேர்தல் ஆலோசனைக் குழுக்களைச் சார்ந்து இயங்கி வருகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் இது குறித்துக் கூறுகையில், "முன்பு தேர்தலுக்காக மட்டும் வேலை செய்த இந்தத் தனியார் குழுக்கள், இப்போது வேட்பாளர் தேர்வு, கட்சிப் பதவிகள் என அனைத்திலும் தலையிடுகின்றன. இதனால் காலம் காலமாக உழைத்த நிர்வாகிகளின் குரல் எடுபடாமல் போகிறது" என வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
நிர்வாகிகளுடன் இணக்கம் தேவை
உதாரணத்திற்கு ஒரு சம்பவம்.. பெங்களூரைச் சேர்ந்த திமுக மூத்த நிர்வாகி ஒருவர். கருணாநிதி காலத்தில் பெங்களூர் வரும்போதெல்லாம் செல்வி வீட்டுக்கு அழைத்து அவரிடம் 1 மணி நேரம் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். ஆனால், தற்போது அவர் திமுகவின் இளம் தலைவர் ஒருவரை பார்க்க சென்னை சென்றபோது, பகல் நேரத்தில் கூட பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டாராம். எனவே சந்திப்பே நிகழ்த்தாமல் ரயில் ஏறி அவர் பெங்களூர் திரும்பிவிட்டார் என்கிறார்கள்.
நிர்வாகிகளிடையே குழப்பம்
தற்போது கட்சிக்குள் பல குழுக்கள் வெவ்வேறு பணிகளைச் செய்து வருகின்றன. ஒரு குழு ஒரு தகவலைச் சொன்னால், மற்றொரு குழு அதற்கு முரணான தகவலைத் தருகிறது.
- வேட்பாளர் பட்டியலைத் தயாரிப்பதில் பல தரப்பினர் நேரடியாகத் தலையிடுவதால், யாரிடம் பேசுவது என்று தெரியாமல் நிர்வாகிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
- இந்தக் குழுக்களுக்கு இடையே நிலவும் "யார் பெரியவர்?" என்ற போட்டியால், தலைமையிடமும் தவறான தகவல்கள் கொண்டு சேர்க்கப்படுகின்றன.
- உதாரணமாக, சமீபத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் ஒரு நகரச் செயலரை முதல்வர் ஸ்டாலின் மாற்றிக் குறிப்பிட்டது, வாரிசே இல்லாத ஒரு நிர்வாகியின் மகனைப் பற்றி கண்டித்து ஸ்டாலின் பேசியது போன்ற குளறுபடிகள் இந்தத் தவறான தகவல்களால்தான் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
சமீபகாலமாக முன்னெடுக்கப்பட்ட திமுகவின் பல அரசியல் முழக்கங்கள் (Slogans) மக்களிடையே பெரிய அளவில் எடுபடவில்லை என்ற பேச்சும் கட்சிக்குள் எழுந்துள்ளது. இதை ஈடுகட்ட திமுக அடுத்தடுத்து மாநாடுகள் நடத்த தொடங்கிவிட்டது. ஸ்லோகன் அரசியல் எல்லாம் மோடி தலைமையிலான பாஜக ஸ்டைல். மாநாடும், திண்ணை பிரச்சாரமும்தான் தமிழ்நாட்டு ஸ்டைல் என்பதை திமுக கொஞ்சம் லேட்டாக புரிந்து கொண்டுள்ளது.
உதயநிதியைச் சுற்றியுள்ள குழு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எனத் தனியாக ஒரு ஆலோசனைக் குழு செயல்பட்டு வருகிறது. மற்ற குழுக்களுக்கும் இதற்கும் இடையே தொடர்பு கிடையாது. கட்சியின் பொதுவான பிரசாரத் திட்டங்களுக்கும், இந்தத் தனிக்குழுவின் திட்டங்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், பிரசார வியூகங்கள் வகுப்பதில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில், அனுபவம் வாய்ந்த கட்சி நிர்வாகிகளை விட, இந்தத் தனியார் ஆலோசனைக் குழுக்களுக்கே தலைமை அதிக முக்கியத்துவம் அளிப்பது "திமுகவினரை" அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் குழப்பங்கள் நீடித்தால், அது தேர்தலில் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் என மூத்த நிர்வாகிகள் எச்சரிக்கின்றனர். இதை திமுக தலைமை கேட்டுக்கொள்ளுமா, உடனே நிர்வாகிகளுடன் நேரடி தொடர்பை அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்புகள் திமுகவினரிடம் நிலவுவதை கவனிக்க முடிகிறது.












Click it and Unblock the Notifications