"சாத்தானின் பிள்ளைகள்.. புதுசு புதுசா நடிகர்கள் டெல்லி போறாங்க”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு!
சென்னை: "திமுக என்பது சாத்தானின் குழந்தைகளாக மாறிவிட்டது. புதிது புதிதாக பல சாத்தானின் குழந்தைகள் தவெகவின் வெற்றியை சீர்குலைக்க முயல்கின்றனர். எந்த நடிகர் பொங்கலுக்கு டெல்லி சென்றிருந்தார் என்றெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்." என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞர் அணி சார்பில் காயிதே மில்லத் வழியில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா பங்கேற்றார்.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவின் வெற்றி தமிழகத்தில் இருந்து உருவாகும் எனவும், இதை தடுக்கும் நோக்கில்தான் சில நடிகர்கள் டெல்லிக்கு சென்று முகாமிட்டுள்ளதாகவும் யார் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது எனவும் பேசினார்.
ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "60 ஆண்டுகாலமாக கூட்டணியில் இருந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு திமுக உண்மையாக இல்லை. எத்தனை தேர்தல்கள் வந்தாலும் நூறாண்டுகள் ஆனாலும் பாஜகவுடன் தவெக கூட்டணி அமைக்காது. உறவும் கிடையாது. பாஜக எதிர்ப்பு காரணமாக நாங்கள் சிறை செல்ல நேரிடலாம்.
தவெகவின் வருங்கால வெற்றியை தடுத்து சீர்குலைக்கும் நோக்கத்தில் எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் ஒன்றும் நடக்காது. டெல்லியில் முகாமிட்டுள்ள நடிகரால் தவெக கூட்டணியின் வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. யார் வேண்டுமானாலும் வரட்டும், எங்கிருந்து வேண்டுமானாலும் வரட்டும், திமுக நமக்கு போரடித்துவிட்டது.
திமுக என்பது சாத்தானின் குழந்தைகளாக மாறிவிட்டது. புதிது புதிதாக பல சாத்தானின் குழந்தைகள் தவெகவின் வெற்றியை சீர்குலைக்க முயல்கின்றனர். எந்த நடிகர் பொங்கலுக்கு டெல்லி சென்றிருந்தார் என்றெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். வரக்கூடிய தேர்தல்களுக்காக பூத் லெவலில் திட்டங்களை தீட்டி வேலைகளை செய்துகொண்டிருக்கிறோம்.
தற்போது பாஜகவை எதிர்ப்பதாக கூறிவரும் திமுகதான் 1999 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியமைக்க முக்கிய காரணமாக இருந்தது. அப்போதைய சூழலில் பாஜகவிற்கு கருணாநிதி ஆதரவளிக்காமல் இருந்திருந்தால் பாஜக ஆட்சி நீடித்திருக்காது.
காங்கிரஸ், விசிக, ஐ.யு.எம்.எல், கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லையென்றால் சேப்பாக்கத்தில் திமுக தோற்றிருக்கும். கூட்டணி இல்லையென்றால் திமுக எதிர்க்கட்சியாகக் கூட வந்திருக்காது. 30 தொகுதிகளில் 10,000 ஓட்டுக்கு கீழ் வெற்றி பெற்றுள்ளது திமுக. இந்த ஓட்டுக்கள் கூட்டணி கட்சியின் ஓட்டுகள்.
2026 தேர்தலை விட மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக 5,830 வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளது. அதேபோல், தாராபுரத்தில் 7,003 வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளது. இந்த விவரங்களை மறைத்துவிட்டு, இரண்டாம் கட்டத் தலைவர்களை வைத்து திமுக மக்களை ஏமாற்றுகிறது.
தேர்தலுக்கு பிறகு கூட்டணி கட்சிகள் ஒரு முடிவு எடுத்தபிறகு திமுக அவர்களை எப்படி திட்டினார்கள் என்று உங்களுக்கே தெரியும். 2029ல் பிரதமர் யார் என்பதை மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணிதான் முடிவு செய்யும்" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications
