மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு 1,000 கனஅடியாக குறைப்பு.. டெல்டாவில் பாசனம் நடக்குமா?
திருவாரூர்: சம்பா-தாளடி பயிர் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நீர் திறப்பு தற்போது 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக டெல்டாவில் பாசனம் நடக்குமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் மாதம் தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால், இந்த ஆண்டு கர்நாடகா போதிய அளவுக்கு நீரை கொடுக்காததால், ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.

செப்.1ம் தேதியன்று.. அதாவது 81 நாட்கள் தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டது. தொடக்கத்தில் 3,000 கனஅடியும், அதன் பின்னர் 7,000 கனஅடியும், செப்.7ம் தேதி முதல் 12,000 கனஅடியும், செப்டம்பர் இறுதி வரை உச்சக்கட்டமாக 12,400 கனஅடியும் நீர் திறக்கப்பட்டது. மொத்தமாக 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி 45 நாட்கள் கெடு நிறைவடைந்திருப்பதால், தற்போது தண்ணீர் திறப்பு 1,000 கனடியாக குறைக்கப்பட்டிருக்கிறது.
அக்டோபர் முதல் வாரம் வரை, டெல்டாவின் கடைமடை பகுதிக்கு தண்ணீர் போகவில்லை. அதேபோல டெல்டாவின் மற்ற பகுதிகளுக்கு தண்ணீர் சென்றாலும்.. ஆற்றில் மட்டுமே தண்ணீர் சென்றது. வாய்க்கால், வரப்புகளில் தண்ணீர் ஏறாத நிலை இருந்தது. ஆழ்துளை கிணறு வசதி கொண்டவர்கள் மட்டும் குறுவை சாகுபடி செய்தனர். மற்றபடி திருவாரூர், நாகை, மயிலாடுதுறை பகுதிகளில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மேட்டூர் நீர் சம்பா-தாளடி சாகுபடிக்கு கை கொடுக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். டெல்டாவில் பரவலாக மழை பெய்ததால் தற்போது நீர் நிலைகள் முழுவதுமாக நிரம்பியிருக்கின்றன. ஆனால், மேட்டூரிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வந்தால்தான் சாகுபடி நடக்கும். பருவமழையை மட்டும் நம்பி இறங்க முடியாது.
இந்த ஆண்டு சூப்பர் எல்-நினோ என்று சொல்கிறார்கள். வழக்கமாக எல்-நினோ காலங்களில் வடகிழக்கு பருவமழை பலமாக இருக்கும். ஆனால், இந்த முறை மழையின் தீவிரம் எப்படி இருக்கும் என கணிக்க முடியாது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். திடீரென மழை மொத்தமாக கொட்டலாம். ஒன்றிரண்டு மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து.. மற்ற நாட்களில் மழை பெய்யாமால் போகலாம். இதை நம்பி எப்படி விவசாயத்தில் இறங்குவது? என விவசாயிகள் கேள்வி கேட்கிறார்கள்.
கர்நாடகாவிலிருந்து தினமும் 3,000 கனஅடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவை கர்நாடகா ஏற்பதாக தெரியவில்லை. எனவே கர்நாடகாவிடமிருந்து தமிழ்நாடு அரசு, காவிரி நீரில் உரிய பங்கை பெற்று.. அதை டெல்டாவுக்கு விநியோகிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
