இனி அசைவ உணவு சமைக்கவே கூடாது.. கேரளா புது ஆளுநர் உத்தரவால் சர்ச்சை
திருவனந்தபுரம்: கேரளாவின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆளுநராக நேற்று பொறுப்பேற்ற நிலையில் ஆளுநர் மாளிகையில் இனி அசைவ உணவுகள் சமைக்க கூடாது. சைவ உணவுகள் மட்டுமே சமைக்க வேண்டும் என்று கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கேரளா ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இருந்தார். இவர் தான் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும் பதவி வகித்து வந்தார். சமீபத்தில் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழகத்தின் ஆளுநராக மாற்றப்பட்டார்.
கேரளாவில் புதியவர் நியமனம் செய்யப்பட்டார். அதன்படி கேரளாவின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் நியமிக்கப்பட்டார். இவர் நேற்று கேரளாவின் 29வது ஆளுநராக பொறுப்பேற்றார்.
முதல் நாளான நேற்றே அவர் சர்ச்சையிலும் சிக்கினார். இதற்கு முக்கிய காரணம் அவர் போட்ட உத்தரவு தான். கேரளா ஆளுநர் மாளிகையின் (லோக்பவன்) சமையலறையில் இனி அசைவ உணவுகள் தயார் செய்யக்கூடாது. சைவ உணவுகள் மட்டுமே தயார் செய்து பரிமாறப்பட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்தூருக்கு அசைவம் சாப்பிடும் பழக்கம் கிடையாது. சைவம் மட்டுமே சாப்பிடும் வழக்கம் கொண்டவர்.இதனால் அவர் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளையில் ஆளுநர் மாளிகையில் பணியில் இருக்கும் ஊழியர்கள் உணவு கட்டுப்பாடு கிடையாது. அவர்கள் தங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடலாம். அதற்கு ஆளுநர் ஓம்பிரகாஷ் மாத்தூர் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆளுநர் மாளிகை சமையலறையை எடுத்து கொண்டால் ஆளுநர் மற்றும் அவரது குடும்பம், சில பணியாளர்களுக்கு மட்டுமே சமைக்க பயன்படுத்தப்படும். பிற ஊழியர்கள் வெளியே இருந்து தான் உணவு கொண்டு வருவார்கள். அப்படி வெளியே இருந்து உணவு கொண்டு வரும் ஊழியர்களுக்கு எந்த உணவு கட்டுப்பாடும் கிடையாது என்று சொல்லப்பட்டுள்ளது.
ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்தூரில் இந்த உத்தரவு சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் வேணுகோபால் கூறுகையில், ''ஆளுநர் மாளிகையில் சைவ உணவு மட்டுமே சமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். கேரளா என்பது கடற்கரைகள் நிறைந்த மாநிலம். மீன்கள் அதிகம் உள்ளது. அதேபோல் பொதுமக்கள் சைவம், அசைவம் என்று இரு உணவுகளையும் சாப்பிடும் வழக்கம் கொண்டவர்கள்.
கேரள மக்கள் நன்றாக பழகிப்போன உணவு பழக்க வழக்கங்களை கட்டுப்படுத்த முயற்சிப்பதையோ, இனி அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று உத்தரவிடுவதையோ ஒருபோதும் ஏற்க முடியாது. இது சங் பரிவாரின் கொள்கைகளை திணிக்கும் முதல் முயற்சியாகும். இதனால் இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்'' என கொந்தளித்துள்ளார்.
அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எம்வி கோவிந்தன் கூறுகையில், ''ஆளுநர் மாளிகையில் சைவ உணவு மட்டும் தான் என்று சொல்வது அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும். இதன் பின்னணியில் சங்பரிவாரின் கொள்கை உள்ளது. இதை கைவிட வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
