கோவையில் 8 தொகுதிகள்.. செந்தில் பாலாஜியை வைத்து திமுக போடும் கணக்கு.. துணையாக நிற்கும் மகேந்திரன்!
சென்னை: அண்மையில் மேற்கு மண்டலத்தில் இருந்து அதிமுகவின் தோல்வி தொடங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருந்தார். இதன் பின்னணி குறித்து விசாரித்த போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவது தெரிய வந்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ளது. இதன் காரணமாக திமுக மற்றும் அதிமுக தரப்பில் தேர்தல் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு மேற்கு மண்டலம் மிகப்பெரிய சாதகமாக அமைந்தது. கோவையில் ஒரு தொகுதியில் கூட திமுகவால் வெல்ல முடியவில்லை. ஈரோடு மாவட்டத்தில் ஒரேயொரு தொகுதியில் மட்டுமே திமுக வென்றது.

இதனால் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் மேற்கு மண்டலத்திற்கு திமுக கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தது. அதற்கான பலனும் கிடைத்த நிலையில், சட்டசபைத் தேர்தலில் கட்டாயம் கூடுதல் இடங்களில் வெல்ல வேண்டும் என்று ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார். அதற்கேற்ப உடல்நிலை சீரான உடன் ஸ்டாலின், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது ஸ்டாலின், அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும் என்று கூறியது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. இதன் பின்னணி குறித்து விசாரித்த போது, திமுகவின் செயல்பாடுகள் குறித்து தெரிய வந்திருக்கிறது. அதாவது கோவை மாவட்டத்தின் பொறுப்பை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் திமுக ஒப்படைத்திருக்கிறது.
அமைச்சர் பொறுப்பு இல்லாததால், முழுக்க முழுக்க தேர்தல் பணிகளை செந்தில் பாலாஜி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. கோவை மாவட்டத்தில் கொங்கு வெள்ளாளர், நாயுடு, அருந்ததியினர், சிறுபான்மையினர் என்று பல்வேறு தரப்பினர் இருக்கின்றனர். இந்த தரப்புக்கு கட்சிக்குள் உரிய பிரதிநிதித்துவத்தை செந்தில் பாலாஜி கொண்டு வந்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல் ஒவ்வொரு மாதமும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை அழைத்து வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். இதனால் கோவை 8 தொகுதிகளில் திமுக வலுவாக இருப்பதாக திமுக மேலிடம் கணித்திருக்கிறது. தொண்டாமுத்தூர், கோவை தெற்கு உள்ளிட்ட தொகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் கடந்த சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பிரித்த வாக்குகள் காரணமாக சில தொகுதிகளில் திமுகவின் வெற்றி பறிபோனது. இம்முறை மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணிக்கு வந்திருக்கிறது. மநீம கட்சியில் இருந்து திமுகவுக்கு வந்த மகேந்திரனுக்கு இம்முறை வாய்ப்பு அளிக்கவும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அவரை பொள்ளாச்சி ஜெயராமனுக்கு எதிராக களமிறக்கும் வரை திமுக திட்டமிட்டிருக்கிறது.
மகேந்திரனுக்கு கோவை தெற்கு தொகுதியை பற்றி நன்றாக தெரியும் என்பதால், அந்த தொகுதியின் தேர்தல் பொறுப்பும் அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை கமல்ஹாசனுக்காக கோவை தெற்கில் பணியாற்றியவர் இவர். இதனால் இம்முறை கோவையில் பல்வேறு தொகுதிகளை திமுக கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே ஸ்டாலின் அதிமுகவை நேரடியாகவே அட்டாக் செய்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications