ஆதிக்க போர்களை கண்டு வளர்ந்த சிங்கம் அடங்காது.. உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகி வாழ்த்து!
சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, கலகத் தலைவன் உதயநிதி ஸ்டாலின்! என்ற தலைப்பில், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பயணம் மற்றும் சாதனைகள் பற்றி திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் இசை எழுதியுள்ள கட்டுரை உங்களுக்காக..
2018 ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று பேருந்து கட்டண உயர்வை கண்டித்து ஆயிரக்கணக்கான திமுகவினர் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். கட்டம் சரியில்லை, களம் சரியில்லை என்று திமுகவை எள்ளி நகையாடிக்கொண்டு சில ஒரு ஓட்டு கட்சிகள் ஆரூடம் சொல்லிக்கொண்டிருந்த காலம் அது. தொண்டர்களுடன் ஒரு தோழனாக கையில் கழகக்கொடியேந்தி போராட்ட பதாகைகளை காட்டி ஒருவர் குரலெழுப்பிக்கொண்டிருக்கிறார். கழக உடன்பிறப்புகளும் திடீர் உற்சாகத்துடன் மேலும் உக்கிரமாக குரலெழுப்புகிறார்கள். இவரது குரலுடன் தொண்டர்களது குரலும் சேர்ந்து போராட்டத்தின் வெற்றிக்குரலாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. தாம்பரமே மலைத்துப்போகிறது. தொலைக்காட்சி பார்த்து விவரம் அறியும் அரசு விழித்துக்கொள்கிறது. உடனே கைதுகள் தொடக்கம். காவல்துறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது. கைதான தொண்டர்களை நேரில் சந்திக்க வந்த ஒருவரைக்கண்டு ஒட்டுமொத்த ஊடகங்களும் தன்னுடைய புருவத்தை உயர்த்தி ஆச்சர்யத்துடன் அவரை அணுகுகிறார்கள். நீங்கள் "எப்போது அரசியலுக்கு வருகிறீர்கள்" என்று எப்போதும் வருகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தவரை கேட்பது போல கேட்டார்கள்.

எந்தவொரு பதற்றமும் இல்லாமல் தனக்கே உரிய பாணியில் அவர் பதிலளித்தார், "நான் எதற்கு அரசியலில் குதிக்கவேண்டும்!! நான் பிறந்ததிலிருந்தே அரசியலில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்!! ". அன்று யாரும் உணரவில்லை வரலாற்றின் ஆதிக்க போர்களை கண்டு வளர்ந்த சிங்கமொன்று அடங்காது தன் அடையாளத்தை எங்கும் பதிக்க தன்னுடைய ஆட்டத்தை துவங்கிவிட்டது என்று!! வாரிசு அரசியல், குறுநில மன்னர்கள், ரவுடிசம் என்று தொடர் குற்றச்சாட்டுகளை சந்தித்துவந்த நிலையில் இவரது அரசியல் சதுரங்க நகர்வு மேலும் திமுகவை பலவீனப்படுத்தும் என்றே அனைத்து So Called Political Analystகளால் கணிக்கப்பட்டது. சலனமில்லாமல் தன் மீது வைக்கப்பட்ட கேள்விக்கணைகளை சிரிப்புடன் கடந்துவந்தார்.
2019 நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகிற நிலையில் எல்லாரும் ஏகோபித்து வரவேற்கும் அளவிற்கு தேர்தல் பரப்புரைக்கு தலைமைதாங்கி கழகத்தை மக்களிடம் கொண்டுசேர்க்க பணிக்கப்படுகிறார். இவர் என்ன செய்துவிடப்போகிறார், எந்த அரசியல் புரிதலும் இருக்காது, ராஜா வீட்டு கன்றுக்குட்டி என்று நகைத்த எல்லாருடைய முகத்திலும் கரியை பூசியது இவரது களப்பணி.
2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் இவர் வெளிப்படுத்திய தாக்கம் ஒட்டுமொத்தமாக ஆதிக்க சக்திகளை களையெடுக்கத்தொடங்கியது. விளைவாக 39 தொகுதிகளில் வென்று அசுரபலத்துடன் திமுக பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டை தூக்கி நிறுத்தியது. மக்களின் தொண்டனாய் உடன்பிறப்புகளின் தோழனாய் ஏகோபித்த ஆதரவுடன் இளைஞரணி செயலாளராக பதவியேற்றதும் அரசியலில் இவரது திட்டம் எந்த சோழிகளுக்கும் கட்டத்திற்கும் அடங்காது என்பது எல்லாரும் வெளிச்சமானது. பல்வேறு எதிர்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் எல்லோரும் சேர்ந்து வாஞ்சையோடு நெஞ்சில் வருடிக்கொண்டு மனதிலிருந்து ஆர்ப்பரித்த அந்த பெயர்தான் "உதயநிதி ஸ்டாலின்"!!

அவர் வந்தவுடனே இளைஞர்களுக்கான வாய்ப்பை பறித்துவிட்டார், குடும்ப ஆட்சியின் மறுவெளிப்பாடு, உழைக்காமல் பொறுப்பை அடைந்துவிட்டார் என்று இவரைக்குறித்து பல்வேறு பூடகமான வரலாற்று புனைவுகள் துவக்கப்பட்டன. ஆனால் இன்றும் சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு தொகுதியின் பாரம்பரிய வாக்காளர்கள் கழக பொறுப்பில் இல்லாதபோதே சிறு பிள்ளை வயதிலிருந்து துண்டுசீட்டுகளுடன் புன்சிரிப்புடன் என் தாத்தாவிற்கு ஓட்டு போடுங்க !! என் அப்பாவிற்கு ஓட்டு போடுங்க என்று உரிமையாக இவர் வாக்கு கேட்டு வீடு வீடாக வந்ததை நினைவுகூர்ந்து சிலாகிக்கிறார்கள்.
தனது சிறுவயதிலே மதிப்பிற்குரிய முரசொலிமாறன் அவர்கள், நடப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதிமாறன் போன்றவர்களுக்காக கழக முன்னோடிகளுடன் கைகோர்த்து வாக்கு சேகரித்ததில் துவங்கியது அவரது பொது வாழ்வு. தனது குடும்பத்தினர் தலைமையில் இருந்தாலும் கழகத்தையே குடும்பமாய் கருதி கழகக் கூட்டங்களில் மக்களுடன் மக்களாய் ஒரு கடைக்கோடி தொண்டனாய் கலைஞரது பேச்சை கேட்டு தலைவர் தளபதி அவர்களது உழைப்பை கண்டு வளர்ந்தபோதே இவரது அரசியல் வாழ்க்கை எழுதப்பட்டதாகிவிட்டது !! யாருக்கு அரசியலில் ஈடுபட உரிமை இல்லை? முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சிறையிலிருந்தபோது சென்று பார்த்த தளபதிபோல தளபதியார் சிறை கண்டபோது கருவிலிருந்தே களம் கண்டவர் இவர். பிறந்தபிறகு அல்ல பிறக்கும் முன்னரே அரசியல் இவருடன் கைகோர்த்துக்கொண்டது. போராட்டங்களும், கொள்கை முழக்கங்களும் இவருக்கு தாலாட்டுகளாக மாறின.
2016 சட்டமன்ற தேர்தல் திமுகவிற்கு எதிர்காலத்தை கணிப்பதாகவே கருதப்பட்டது. ஒருபுறம் வயது முதிர்ச்சி காரணமாக கலைஞர் தேர்தல் பரப்புரைகளில் முழுமையாக ஈடுபடாமல் இதுவே தனது இறுதி தேர்தலாக இருக்குமென்று கழகத்தினர் நெஞ்சில் ஈட்டியாய் தைத்துவிட தொண்டர்களது விடிவெள்ளியாக செயல்தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் நமக்கு நாமே பரப்புரையை துவங்கி மாநிலம் முழக்க நடைபயணமாக மேற்கொண்டு மக்களை சந்தித்து வந்தார். இன்றுவரை தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் மிகமுக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய பரப்புரை என்றே அதனை கருதலாம். அந்த அளவிற்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றாலும் தேர்தல் களம் சற்று கடினமானதாகவே இருந்தது . முத்தமிழறிஞர் கலைஞர் களத்தில் இல்லை, மக்களிடம் எந்தவொரு விளம்பரமும் தேடாமல் சத்தமின்றி இந்நேரத்தில் தனது பங்களிப்பு கழகத்திற்கு தேவை என்று காலமுணர்ந்து உதயநிதி களத்தில் இறங்கினார். குறிப்பாக அன்பில் மகேஷ் அவர்களுக்காக வாக்கு சேகரித்து இமாலய வெற்றியை தேடிக்கொடுத்தார்.
திரைமறைவில் ஒரு இளைஞர் படை உருவாகிக்கொண்டிருந்ததை எதிரிகள் கணிக்கவில்லை என்பதை பின்னரே உணர்ந்துகொண்டனர். மிகப்பெரிய வெற்றியை பெறமுடியாவிட்டாலும் அடுத்த தலைமுறை திமுக எழுச்சி பெறத்தொடங்கிவிட்டதை அனைவரும் உணர்ந்துகொண்டனர்.
2019 தேர்தலுக்கு பிறகு அதிகரித்த இவரது களப்பணியின் தீவிரம் 2020 ஒக்கி புயலின்போது மேலும் சுழன்று வீசத்தொடங்கியது. இயற்கையின் கோரமுகம் புயல் வடிவில் மக்களை வாட்டியபோது புன்சிரிப்புடன் களமிறங்கி மாநிலம் முழுவதும் பயணித்து மக்களின் தேவையறிந்து தனது நற்பணி மன்றத்தை களமிறக்கி நிழல் அரசாங்கத்தையே உருவாக்கி நிவாரண உதவிகளை மேற்கொண்டுவந்தார். தனது பிறந்தநாளை அரசியல்படுத்தாமல் புயல் மற்றும் டெங்குவால் பாதிக்கப்பட்டோருக்கு இயன்ற உதவிகளை உடனடியாக Udhayanidhi Stalin Welfare Association - USWA நற்பணி மன்றங்கள் மூலம் செய்யுங்கள் என்று உரிமையாக இவர் கட்டளையிட்டதும் திரண்ட இளைஞர் படைக்கு காலம் கட்டியம் கூறும். நடிகராக பார்த்து பழக்கப்பட்ட மக்கள், தலைவனாக பார்க்க தொடங்கினார்கள். அரசியலில் நடித்து ஆடுபவர் இவரல்ல, கொள்கைதாங்கி அடித்து ஆடுபவர் என்பதற்கு ஆதாரமாக ஜீலை 4, 2019 அன்று இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பின் இவரது முதல் அறிக்கையே கட்டியம் கூறியது.

நாங்கள் நடந்துகொண்டே இருப்போம்; எங்கள் கால்கள் நடையை நிறுத்தா. நாங்கள் எழுதிக் கொண்டே இருப்போம்; எங்கள் கைகள் எழுதுவதை நிறுத்தா. நாங்கள் பேசிக்கொண்டே இருப்போம்; எங்களுடைய உதடுகளும் நாவுகளும் பேசுவதை நிறுத்தா. காரணம், நாங்கள் ஆழமான கொள்கைக்குச் சொந்தக்காரர்கள். நாங்கள் பெரியாரின் தொண்டர்கள். அறிஞர் அண்ணாவின் தம்பிமார்கள். அந்தத் தொண்டர் படையிலேதான், அந்தத் தம்பிமார்களின் வரிசையிலேதான், இன்று இளைஞரணியும் சேர்ந்திருக்கிறது''
என்று கலைஞர் பொன்னெழுத்துக்கள் பதிக்கப்பட்டிருந்தது.
வாரிசு என்பதாலேயே பதவிகளும் பட்டங்களும் வாசல் தேடிவருவதில்லை. நடிகர் என்பதால் மட்டுமே மக்களின் மனங்களில் தலைவனாக யாரும் உயர்ந்ததில்லை. தனது தெளிவான அரசியல் பார்வையுடனும் தீர்க்கமான களப்பணியுடனும் சரியான அரசியல் நோக்குடன் மக்கள் மன்றத்தில் களமிறங்கியவர்களே அரியணையை அலங்கரித்திருக்கிறார்கள். வெற்றிக்கனியை ருசித்திருக்கிறார்கள். இவரொன்றும் MGR போல கைது நடக்கும் என்று தெரிந்த போராட்டங்களில் கலந்துகொள்ளாமல் பின்வாங்கியதில்லை. கைதோ, தடியடியோ உடன்பிறப்புகளுடன் சமரசம் செய்யாத சமரனாகவே களம்கண்டார்.
Go Back Modi போராட்டத்தில் கருப்புச்சட்டையுடன் கலைஞர் அவர்களிடம் வாழ்த்துப்பெற்று களம் கண்டதை உலகமறியும். சிறைவாசத்தை உயிர்சுவாசமாக கொண்டு களமிறங்கும் போராளிகளின் இன்றைய கலங்கரை விளக்கம் இவர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மனிதசங்கிலி போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி அதில் வெற்றிபெறும்வரை ஓயாமல் போராடினார். தாக்குதலை எதிரிகளின் கோட்டையிலேயே துவங்குகிறேன் என்று ஆர்.கே. நகரில் திரளான உடன்பிறப்புகளுடன் அதிமுக ஆட்சியில் டெண்டர் ஊழல்களுக்கெதிரான போராட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது திருவுடல் போதிய பாதுகாப்பின்மையால் சரியும்போது தாங்கிப்பிடித்தது போல இன்று கழகத்தை சீர்தூக்கி நிறுத்தி செம்மைப்படுத்திக்கொண்டிருக்கிறார் எங்கள் இளைய தளபதி.
வெகுமக்களுக்கான களப்போராட்டங்களும் புதிய தலைமுறைக்கான இணையவழி போராட்டங்களும் என புதியதொரு புரட்சியை இன்று கழகத்தில் உருவாக்கிக்கொண்டிருக்கிறார். சமூக அமைப்புகளுக்கும் பொது மக்களுக்கும் மரக்கன்று வழங்குவது, ரத்த தான முகாம்கள், தையல் இயந்திரங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உதவிகள், மாணவர்களுக்கு நோட்டுகள் புத்தகங்கள், கல்வி செலவினங்களை ஏற்றுக்கொள்வது என்று தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு வருகிறவர் எல்லா தளங்களிலும் தனக்கான கற்பிதங்களை கற்றுக்கொள்பவராகத்தானே பார்க்கப்படவேண்டும்? அதிகார மையங்களுக்கு அருகே இருப்பதாலேயே நிழல் அதிகார மையமாய் மாறிவிடாமல் பரமசிவன் கழுத்திலிருந்தாலும் நந்தனாய் களத்தில் போரிட்டே அதிகாரத்தை அடைந்திருக்கிறார் என்று கூறுவதில் தவறொன்றுமில்லை.

வெளிநாட்டு கட்டமைப்புகளை வெட்டியெடுத்து வளர்ச்சி என்றும் எங்கள் மாடல் என்றும் சில கட்சிகள் பிதற்றிக்கொண்டிருக்கையில் திராவிட மாடலெனும் சமூகநீதி கூர்வாள் ஏந்தி AIIMS செங்கல்லை தூக்கிக்கொண்டு மாநிலம் முழுக்க பயணித்து மக்களை திரட்டி அடிமை ஆட்சியை தூக்கியெறிந்து காட்டியது இவரது உழைப்புக்கு சாட்சியமில்லையா?
வெற்றிபெற்றவுடன் மக்களை சந்திக்க மறந்துவிடும் அரசியல் சந்தர்ப்பவாதிகளைப் போலல்ல. இன்றுவரை நவீன கட்டமைப்புகளை தனது தொகுதிக்கு கொண்டுவருவதில் நூறு சதவிகித உழைப்பை செலுத்திவருகிறார்.
சட்டமன்ற உறுப்பினராக இவரது சாதனைகளில் சிறு துளிகள்.
● திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்காகவே 14 விதமான குறைகள் கட்டமைப்புகளுடன் உதய் அண்ணா என்ற App அறிமுகப்படுத்தப்பட்டு நேரடியாக சட்டமன்ற உறுப்பினரே 48 மணிநேரத்திற்குள் குறைகளை களையும் அளவிற்கு வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது. 9176991768 என்ற எண்ணிற்கு அழைத்தும் பதிவு செய்யலாம்.
● போர்க்கால அடிப்படையில் மழை நீர் வடிகால் பணி ஆய்வை தெரிந்து கொள்ள பொறியாளர்களுடன் மேற்பார்வை செய்துவருகிறார்.
● இந்தியாவிற்கே முன்னோடியாக மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலத்தை போக்கும் சமூகநீதிப்பார்வையில் Robotic sewer-cleaner மற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடிய நவீன கருவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
● தொகுதி முழுக்க இலவச wi5 வசதி.
● லேடி வில்லிங்டன் பள்ளி, திருவல்லிக்கேணி அரசு உயர்நிலை பள்ளி, மதரசா பள்ளிகளில் Virtual Reality LABs வசதி அமைக்கப்பட்டுள்ளது
● 600க்கும் மேற்பட்ட பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கு சொந்த செலவில் கல்விக்கட்டணம் உள்ளிட்ட உதவிகள் செய்துள்ளார்.
● தொகுதி அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டியில் போடப்படும் புகார்கள் அன்று மாலை 6 மணிக்குள் நடவடிக்கை துவங்கப்பட்டு மக்களிடம் நேரடியாக சந்திப்புகள் நடத்தப்படுகின்றன.
● தொகுதியிலுள்ள 28 குப்பங்கள் முழுவதிலும் நவீன RUM மின்மாற்றிகள் பொருத்தப்பட்டுள்ளது
● 100கும் மேற்பட்ட பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது
● 121 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது
● 20க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் புதுப்பிக்கப்பட்டு மாணவிகள் நலன்கருதி தமிழ்நாட்டிலேயே முன்னோடியாக Napkin vending machine வைக்கப்பட்டுள்ளது.
● ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் குறைகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு சட்டமன்ற உறுப்பினரின் பரிந்துரைக்கடிதத்துடன் உடனடியாக உரிய அலுவலகங்களுக்கு குறை சார்ந்த மனுக்கள் அனுப்பப்படுகின்றன.
● சேப்பாக்கம் தொகுதியில் உதய் சார்பில் YMCA & நியூ காலேஜ் வளாகங்களில் இதுவரை 2 முறை job fair நடத்தப்பட்டுள்ளது
● வேலைவாய்ப்பு கேட்டுவருபவர்களின் தகுதிக்கேற்ப பணிகள் வழங்கவேண்டி அவர்களது சுயவிவரங்கள் வேலைவாய்ப்பு மைய மண்டல ஆணையரின் அலுவலகத்திற்கே அனுப்பி வைக்கப்படுகிறது
● 47 பொதுக் கழிவறைகள் புதுப்பிக்கப்படவுள்ளது
● மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகள் நலன்கருதி கடற்கரையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
மிகமுக்கியமாக சுயமரியாதை, சமத்துவம், அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சி எனும் திராவிட பேரியக்க சித்தாந்தங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசேர்க்கும் கொள்கைத் தூதுவனாக திராவிட மாடல் பயிற்சி பாசறையை இன்று தமிழ்நாடெங்கும் நடத்திகொண்டுவருகிறார். பெரியாரின் போர்முரசாய் இவர் நடத்தும் பாசறைகள் ஆதிக்க சக்திகளை கதிகலங்கவைத்துள்ளன. இவரது விடாமுயற்சியில் இன்று இந்த தலைமுறையே விழித்துக்கொண்டிருக்கிறது!! அரசியல் வெற்றிடம் இருக்கிறது என்று சொல்லிவந்தவர்களின் அதிகார ஆசைக்கு இவரது வளர்ச்சி வாய்க்கரிசி போட்டுள்ளது!!
இப்போது சின்னவர் என்று அழைக்கப்படுகிறார் என்று பலருக்கு வயிற்றெரிச்சல். அரசியல் அனுபவத்தில் சின்னவர், வயதில் சின்னவர், கள அரசியலில் சின்னவர் என்பதால் குடும்பத்தில் ஒருவராக உரிமையாக சின்னவர் என்று உடன்பிறப்புகள் அழைப்பதில் எங்களுக்கு குறையில்லை. தொண்டர்களை ஏவலாட்களாக நடத்தும் கட்சிக்காரர்களுக்கு மட்டுமே கண்களை உறுத்தும்.
எங்கள் தலைமுறை அரசியலின் தூதுவராக எங்கள் கொள்கைகளின் காவலராக எங்கள் அடையாளத்தின் அடிநாதமாக இன்று உதித்திருக்கிறார் மதிப்பிற்குரிய இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். பெருமையுடன் முரசறைவோம் இவர் எங்கள் அடுத்த தலைமுறைக்கான சித்தாந்த போர்வாளென!! உரிமையுடன் உரக்க சொல்வோம் எங்கள் மனங்கள் நிறைந்த மக்கள் தலைவரென!! இன்று பிறந்தநாள் காணும் எங்கள் இளைய தளபதி சின்னவர் அவர்களுக்கு ஒரு உடன்பிறப்பாய் உரிமையுடன் கூறுகிறேன்!! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா!!












Click it and Unblock the Notifications