“சாதாரண சட்டம்கூட ஆளுநருக்குத் தெரியவில்லை” - சல்லி சல்லியாக நொறுக்கிய திமுக வழக்கறிஞர்
சென்னை: ஆளுநர் V/s திமுக சர்ச்சை ஓய்வதைப் போன்று தெரியவில்லை. ஆளுநர் 'திராவிட கொள்கை'களைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அது ஒரு காலாவதியான கோட்பாடு என்று கூறி வருகிறார்.
இதனிடையே இரு நாள்கள் முன்னதாக ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைவைத்து ஆளுநர் ரவி தரப்பில் அடுக்கடுக்கான அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், 'ஆளுநர் மாளிகையை அரசியல் கட்சி அலுவலகம் போல் மாற்றியுள்ளார்கள்' என்று பதிலடி தந்திருக்கிறார்.
ஆளுநர் தன்னுடைய புகார் மீது எஃப்ஐஆர் பதியப்படவில்லை என்று சொல்வது உண்மையா? குற்றச் செயலில் ஈடுபட்டவரை விசாரிக்காமல் உடனடியாக சிறையில் அடைத்துவிட்டதாக ஆளுநர் சொல்கிறாரே அது உண்மையா? எனப் பல கேள்விகளுக்கு திமுக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரையிடம் பதில் கேட்டோம்.
அவர் முறையாகச் சட்டம் படித்தவர் என்பதால் இந்தப் பிரச்சினையைச் சல்லி சல்லியாக நொறுக்கிவிட்டார்.

"இந்தப் பெட்ரோல் குண்டை ஆங்கிலத்தில் Molotov cocktail என்பர். ஒரு பாட்டிலில் பெட்ரோலைப் பிடித்து அதன் வாய்த் துவாரத்தை ஒரு துணியால் அடைத்து, தீ வைத்துத் தூக்கி எரிந்தால் அது போய் விழுந்து வெடிக்கும்.
இதில் தீ சரியாக வைக்கவில்லை என்றால் அது வெடிக்காது. போய் வீழ்ந்ததும் அணைந்துபோகும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஆளுநர் மாளிகை முன் எரியப்பட்டது பெட்டோல் குண்டு அல்ல. பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் மட்டும்தான். அது வெடிக்கவே இல்லை. அதை முதலில் மக்களுக்கு விளக்கிவிட வேண்டும்.
இதில் தமிழகக் காவல்துறை மிகத் துரிதமாகச் செயல்பட்டு, அந்த நபரைக் கண்டுபிடித்து கைது செய்துவிட்டார்கள். அந்தளவுக்குச் சட்டம் சரியாக நிலைநாட்டப்பட்டுள்ளது. அதைவிட்டுவிட்டு, 'அய்யய்யோ அவனைக் கைது பண்ணிவிட்டார்களே. அதை வைத்து அரசியல் செய்ய முடியவில்லையே' என்று ஆதங்கப்படுவதை நம்மால் உணர முடிகிறது.

இதே சம்பவத்தில் காவல்துறை குற்றச்செயலில் ஈடுபட்டவரைக் கைது செய்யவில்லை என்றால் இவர்கள் என்ன சொல்லி இருப்பார்கள். 'தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஊடுருவல். ஆகவே ஆபத்து இருக்கிறது' என்று பீதியைக் கிளப்பிவிடுவதைப் போலப் பேசி இருப்பார்கள்.
இதில் நான் குறிப்பிட நினைப்பது என்னவென்றால், ஆளுநர் இங்கே அவதூற்றைக் கிளப்புகிறார். பொய் செய்தியைப் பரப்புகிறார். தமிழ்நாட்டில் அபரிமிதமான வளர்ச்சி இருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சிறப்பான ஆட்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்தியாவில் செல்வாக்கு மிக்கத் தலைவராக அவர் உயர்ந்திருக்கிறார். குறிப்பாக பாஜகவுக்கு எதிராக 'இந்தியா' என்ற கூட்டணியைக் கட்டமைப்பதில் மிகப்பெரிய பங்கைச் செய்திருக்கிறார்.
சாதிவாரி கணக்கெடுப்பை திமுக வலியுறுத்தியது. அதை இன்று ராகுல் பேசுகிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டில் உள்ள குறைகளை அகற்ற வேண்டும் என்று அவர் பேசுகிறார். அந்தச் சமூகநீதியை முதன்முதலாகப் பற்றவைத்தது திமுகதான்.
அந்தக் குரல் இன்று இந்தியா முழுவதும் ஒலிக்கிறது. அதை எல்லாம் கேட்டால் பாஜகவுக்கு ஆத்திரம் வருமா? வராதா? அதற்காகத்தான் திமுகவுக்கு எதிராகப் பல வேலைகளைச் செய்கிறார்கள்.
ஆளுநர் முதலில் என்ன சொன்னார் எனப் பார்ப்போம். 'நான் புகார் அளித்தேன். அது பதிவு செய்யப்படவில்லை' என்கிறார். சட்டம் படிக்கின்ற மாணவனுக்குக் கூட தெரிந்த தகவலைச் சொல்கிறேன். ஒரு சம்பவம் தொடர்பாக ஒரு எஃப்.ஐ.ஆர் தான் போடமுடியும். அந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது தெரியாமல் ஒரே சம்பவம் குறித்து மற்றொருவர் புகார் அளித்தால், அதை காவல்துறையினர் வாங்கிக் கொள்வார்கள். அவர்களைச் சாட்சியாக வழக்கில் சேர்த்துக்கொள்வார்கள். இதுதான் சட்ட நடைமுறை.

ஆளுநர் என்ன சொன்னார். புகாரைப் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார். இது எவ்வளவு அபத்தமான அறிக்கை. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு இந்தச் சாதாரண சட்டப் பிரிவுகூட தெரியாதா?
அடுத்து என்ன சொன்னார் ஆளுநர். குற்றச் செயலில் ஈடுபட்டவரை உடனடியாக சிறையில் அடைத்துவிட்டார்கள் என்கிறார். சட்டப்படி ஒருவர் குற்றச்செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் சிறையில் அடைக்கவேண்டும். அதைத்தான் காவல்துறையினர் செய்துள்ளனர். அது எப்படி தவறாகும்?
குற்றச்செயலில் ஈடுபட்டவரிடம் என்ன விசாரணை செய்தார்கள் என்பதை காவல்துறை வெளியில் சொல்லக்கூடாது. சிறையில்தான் அடைப்பார்கள். விசாரணையைப் பற்றித் தெரிவிக்கமாட்டார்கள். ஆளுநர் சொல்கிறார், விசாரணையே செய்யாமல் சிறையில் அடைத்துவிட்டார்கள் என்கிறார். விசாரணை செய்யாமல் எப்படி சிறையில் ஒருவரை அடைக்கமுடியும்?
ஆக, ஆளுநர் சொன்ன இந்த இரண்டு கருத்துகளுமே பொய்.
விசாரணையில் முதல் 15 நாள்கள் எப்போது வேண்டுமானாலும் காவல்துறை குற்றச்செயலில் ஈடுபட்டவரை வெளியில் எடுத்து விசாரிக்கலாம். அதற்குச் சட்டத்தில் இடம் இருக்கிறது.
காவல்துறை முதலில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா எனச் சுற்றுவட்டாரத்தில் கள ஆய்வு செய்தபிறகு அந்த நபரை வெளியில் எடுத்து விசாரிப்பார்கள். என்னக் காரணம் என அறியாமல் குற்றச்செயலில் ஈடுபட்டவரை மட்டும் விசாரிப்பதில் என்ன பலன் இருக்கும்?
இதில் என்னத் தவற்றை ஆளுநர் கண்டுபிடித்தார்?
நம் டிஜிபி இந்தச் சம்பவம் குறித்துத் தெளிவான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ஆளுநர் எப்படி எல்லாம் பொய் சொல்கிறார் என்பதை அவரே புட்டு புட்டு வைத்திருக்கிறார்.
அந்தக் கருக்கா வினோத் என்பவரை இதற்கு முன்னால் பாஜகவினர்தான் சிறையிலிருந்து வெளியில் எடுத்திருக்கிறார்கள் என்பதை மிகத் தெளிவாக திமுக ஐடி விங் ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தி உள்ளது. குறிப்பாக முத்தமிழ்ச் செல்வம் என்ற வழக்கறிஞர் தஞ்சாவூர் பாஜகவில் பொறுப்பில் இருக்கிறார் என்பதை வெளியுலகத்திற்கு நிரூபித்தார்கள். அந்த நபரின் பேட்டியைக்கூட சில தொலைக்காட்சிகள் வெளியிட்டன.
அதற்குச் சரியான பதிலைச் சொல்லமுடியாமல் பாஜக, உடனே திமுகவினர் மீதே பொய்யான ஒரு குற்றச்சாட்டை சமூக வலைத்தளங்களில் பரப்பிவிட்ட தொடங்கியது. ஆனால், அதை மக்கள் ஏற்கவில்லை.
கடந்த 2 ஆண்டுகளில் பாஜக நிர்வாகிகள் எத்தனைப் பேர் தங்களது வீட்டிலேயே பெட்ரோல் குண்டை வீசி இருக்கிறார்கள் என ஒரு லிஸ்ட் போடுவோமா? ஆளுநர் மாளிகையில் குண்டு வீச்சு என்று ஒரு செய்தி. அதைப் போன்று பாஜகவினரே தங்கள் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிக் கொண்டார்கள் என்று ஒரு செய்தி. இந்த இரண்டையும் நீங்களே ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
எதற்கு எடுத்தாலும் பாஜக சட்டம் ஒழுங்கு பற்றிப் பேசுகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த ரவுடி கூட்டத்தையும் கட்சியில் சேர்த்துவைத்துக் கொண்டு பாஜக சட்டம் ஒழுங்குபற்றி பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது சொல்லுங்கள்?" என்கிறார் சரவணன்.












Click it and Unblock the Notifications