தக் லைஃப் பிரச்சனைக்கு இடையே.. கமல் ஹாசன் மனதை குளிர வைத்த ஸ்டாலின்.. அந்த ஒரு வார்த்தைதான்!
சென்னை: கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாவதில் பிரச்சனை நிலவும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மனதை குளிர வைக்கும் சம்பவம் ஒன்று நடந்து உள்ளது. சினிமா பிரச்சனைக்கு இடையே திமுக செய்த செயல் ஒன்று கமல்ஹாசன் மனதை குளிர வைத்துள்ளதாம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுக்கு வாக்குக் கொடுத்தபடி, ராஜ்யசபா சீட் ஒன்றை அக்கட்சிக்கு ஒதுக்கினார் முதல்வர் ஸ்டாலின். இதனையடுத்து தனது கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரிடம் ஆலோசனை நடத்தினார் கமல். அப்போது, நம் கட்சியுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி, திமுக ஜெனிவூனாக நடந்துகொண்டிருக்கிறது.

இந்த ஒரு சீட்டில் நான் தான் போட்டி யிட வேண்டும் என்பதில்லை; நம் கட்சியில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் தானே? என்று கமல் கேட்டுள்ளார். அதற்கு, ஆமாம் ; போட்டியிடலாம் தவறில்லை. ஆனா, உங்களுக்காகத்தானே திமுக ஒதுக்கியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள் முக்கியஸ்தர்கள். அதன் பிறகு அந்த ஆலோசனை அடுத்தக்கட்டத்துக்கு நகரவில்லை.
கமல் கிளம்பி போய்விட்டார். கமலின் அந்த கேள்வி, மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் இருவர், கமல் போட்டியிடாமல் நம்மில் யாருக்கேனும் ஒருவருக்கு கொடுக்க நினைக்கிறாரோ என்று எதிர்பார்ப்பில் பேசிக்கொண்டனர். ஓ.கே. பார்க்கலாம் என்ற அளவில் கனவு காண ஆரம்பித்திருக்கிறார்கள் அந்த நிர்வாகிகள்.
இந்த நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், துணைத் தலைவர்கள் மௌரியா, தங்கவேலு உள்ளிட்டவர்களை அழைத்துக் கொண்டு அறிவாலயத்திற்கு கடந்த 30 - ந்தேதி சென்ற கமல், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அந்த சந்திப்பில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரை முருகன், எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோர் இருந்தனர். மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு சீட் ஒதுக்கியதற்கு ஸ்டாலினுக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொண்டார் கமல்ஹாசன்.
பொதுமன்றத்தில் ஒலித்த உங்களின் குரல், முதன்முறையாக பார்லிமெண்டில் ஒலிக்கப்போகிறது. தமிழுக்கும் தமிழ் நாட்டிற்குமான உங்கள் குரல் டெல்லியை மிரள வைக்க வேண்டும் என ஸ்டாலினும் துரைமுருகனும் சொல்லியிருக்கிறார்கள். அப்போது, எனக்கு பதிலாக கட்சியின் சீனியர் ஒருவரை அனுப்பி வைக்கலாமா? கட்சியை பலப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமையுமே! என்று கேட்க நினைத்திருந்த கமல்ஹாசன், உங்கள் குரல் இனி பார்லிமெண்டில் ஒலிக்கும் என்று ஸ்டாலின் சொன்னதால், பார்லிமெண்டுக்குள் நான் போக வேண்டும் என்பதற்காகத் தான் சீட் கொடுக்கப்பட்டதை நேரடியாகவே ஸ்டாலின் சொல்லியிருக்கிறார் என்று உணர்ந்து அதைக் கேட்காமல் திரும்பிவிட்டாராம். இதனை சீனியர்களிடம் சொல்லி சிலாகித்துள்ளார் கமல்ஹாசன்.
சீட் கொடுக்கப்பட்ட பின்னணி
கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 2 லோக்சபா சீட்டும், 1 ராஜ்யசபா சீட்டும் பெற்றுவிட வேண்டும் என திட்டமிட்டு காய்களை நகர்த்திய கமலுக்கு, 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கி அவரை சம்மதிக்கவைத்துவிட்டது திமுக.
கடந்த லோக்சபா தேர்தல் சமயத்தில், ஒரு லோக்சபா சீட் தருகிறோம் ; உதயசூரியன் சின்னத்தில் நில்லுங்கள் என கமலிடம் ஆரம்பத்திலிருந்தே சொல்லப்பட்டது. அதை அவர் ஏற்கவில்லை. தனிச் சின்னத்தில் தான் நிற்போம் என ஒற்றை காலில் நின்றார்.
கமலின் கோரிக்கை
இந்த பிடிவாதத்தில், தலைமைக்கு (திமுக) உடன்பாடில்லை. இதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல், 'அப்படின்னா எந்த தொகுதியை எதிர்பார்க்கிறீர்கள்' என கமலிடமே கேட்கப்பட்டது. அவரோ, தென்சென்னை, கோவை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 5 தொகுதிகளில் ஒன்றை ஒதுக்குங்கள் என கேட்டார். இதில் தென்சென்னை மட்டும் திமுகவிடமும், மற்றதெல்லாம் திமுக கூட்டணி கட்சிகளிடமும் சிட்டிங் தொகுதியாக இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யக்கூடாது என்பது திமுகவின் நிலைப்பாடு.
லோக்சபா தான் முக்கியம்னா எங்க சின்னத்தில் நில்லுங்க; நீங்க விரும்பும் தொகுதியை ஒதுக்கிடுறோம். இல்லைன்னா, தேனி தொகுதியை ( காங்கிரஸ் தோற்றத் தொகுதி ) ஒதுக்குகிறோம். ஓ.கே.வா? ' என கேட்க, கமல் அதை மறுத்துவிட்டார். இப்படியே இருந்த நிலையில்தான், தொகுதி கிடைக்காததால் ராஜ்யசபா ஓ.கே. வா ? அது உங்களின் தனித்தன்மையை பாதிக்காது என சென்டிமெண்டாக எங்க தலைமை பேசியது. வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்டார் கமல் என்று அப்போது திமுக வட்டாரங்கள் சொன்னது. இதெல்லாம் லோக்சபா தேர்தல் சமயத்தில் கடந்த வருடம் நடந்தது.












Click it and Unblock the Notifications