மதிமுக இடத்தில் தேமுதிக.. கூட்டணியை விரிவாக்கம் செய்யும் ஸ்டாலின்.. அதிமுகவுக்கும் செக்!
சென்னை: 2026 சட்டசபைத் தேர்தலில் மதிமுகவின் இடத்தில் தேமுதிகவை கொண்டு வர திமுக தலைமை ஆலோசித்திருப்பதாக பார்க்கப்படுகிறது. இன்று காலை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். இதனால் தேமுதிக முதல்முறையாக திமுக கூட்டணிக்குள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
2026 சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும் நிலையில், முக்கியக் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்னொரு பக்கம் திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.

அதேபோல் உடம்பிறப்பே வா என்ற பிரச்சாரம் மூலமாக கட்சி நிர்வாகிகளிடையே இருக்கும் சிக்கல்களையும் திமுக தீர்த்து வருகிறது. பாமக தலைவர் அன்புமணி உரிமை மீட்புப் பயணத்தை தொடங்கிவிட்ட நிலையில், அடுத்ததாக தேமுதிக மற்றும் தவெக உள்ளிட்ட கட்சிகளும் மக்களை சந்திக்க உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை முதல்வர் ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தார்.
கடந்த சில வாரங்களாகவே தேமுதிக எந்தக் கூட்டணியில் இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தாமல் இருந்து வருகிறது. ஜனவரி மாதம் நடக்கும் மாநாட்டிலேயே தேமுதிகவின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று அக்கட்சியினர் கூறி வருகின்றனர். அதேபோல் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் விமர்சிப்பதை பிரேமலதா விஜயகாந்த் நிறுத்திக் கொண்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தேமுதிக பொருளாளர் சுதீஷ் காங்கிரஸ் கட்சியின் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்று, திமுக நிர்வாகிகளுடன் நெருக்கம் காட்டினார். இதனால் முதல்முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறலாம் என்ற பேச்சுகள் தொடங்கியுள்ளன. அதேபோல் திமுக கூட்டணியில் ஏற்கனவே பல்வேறு கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணைந்திருக்கிறது. இம்முறை மநீம கட்சிக்கும் சில தொகுதிகளை ஒதுக்க வேண்டிய நெருக்கடி திமுகவுக்கு உள்ளது. ஏற்கனவே விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருகின்றன. மதிமுக தரப்பிலும் கூடுதல் தொகுதிகள் கேட்டு துரை வைகோ ஆவேசமாக பேசி வருகிறார்.
இதனிடையே மதிமுக - திமுக இடையிலான உறவில் சிக்கல் இருந்து வருகிறது. துரை வைகோ பாஜகவுடன் மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதன்பின்னரே மதிமுகவின் சில நிர்வாகிகள் திமுகவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஸ்டாலினை அவரின் வீட்டில் சென்று சந்தித்ததன் மூலமாக, திமுகவின் கணக்கு என்ன என்பது குறித்து புரிந்து கொள்ள முடிகிறது. மதிமுகவின் இடத்தை தேமுதிகவை வைத்து நிரப்ப திமுக தலைமை முடிவு எடுத்திருப்பதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தேமுதிகவை சேர்ப்பதன் மூலமாக அந்தக் கட்சி சில தொகுதிகளை மட்டுமே கொடுத்து அமைதிப்படுத்தவும் முடியும் என்று திமுக தலைமை கணக்கிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications