மறுமணம் செய்யும் பெண்களுக்கு நிதியுதவி! 1975லேயே கருணாநிதி செய்த சம்பவம்.. பகிரும் நெட்டிசன்கள்
சென்னை: ஜார்க்கண்ட் மாநிலத்தில் விதவைகள் மறுமணம் செய்துகொண்டால் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதி அமல்படுத்திவிட்டார் என்று திமுகவினர் வரலாற்றை நினைவு கூர்ந்து, சோஷியல் மீடியாக்களில் அதனை ஷேர் செய்து வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசியல் சலசலப்புகளுக்கு இடையே, அம்மாநில அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பு பெரும் கவனம் பெற்றிருக்கிறது. அதாவது மறுமணம் செய்துகொள்ளும் விதவை பெண்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பேசிய, அம்மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சமூக நலத்துறையின் செயலாளர் மனோஜ் குமார்,
“நம் சமூகத்தில் விதவைகள், கண்ணியமான வாழ்க்கையை நடத்தப்படுவதில்லை. கணவனை இழந்த இவர்கள் கண்ணியமாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை ஜார்க்கண்ட் அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. மறுமணம் செய்துகொண்ட பெண்கள், தங்கள் திருமணப் பதிவு சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம். திருமணமான ஒரு வருடத்திற்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இவர்களது வங்கிக் கணக்கில் ரூ.2 லட்சம் செலுத்தப்படும்” என்று கூறியிருந்தார்.
தற்போது தமிழ்நாட்டில் டாக்டர் தருமாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் அமலில் இருக்கிறது. இதில் இரண்டு திட்டம் இருக்கிறது முதல் திட்டத்தில், ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதில் ரூ.15,000, மின்னணுப் பரிமாற்ற சேவை மூலமாகவும் ரூ.10,000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும். 23.05.2016 முதல் தாலி செய்வதற்காக ஒரு சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயமும் வழங்கப்படும். இந்த திட்டம் மூலம் பயன்பெற கல்வித் தகுதி அவசியமில்லை.
அதேபோல, இரண்டாவது திட்டத்தில் ரூ.50,000 வழங்கப்படுகிறது. இதில் ரூ.30,000, மின்னணுப் பரிமாற்ற சேவை மூலமாகவும் ரூ.20,000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படும். 23.05.2016 முதல் தாலி செய்வதற்காக ஒரு சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயமும் வழங்கப்படும். இதற்கு பட்டதாரிகள், கல்லூரியிலோ தொலைதூரக் கல்வி மூலமோ அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக் கழகங்களிலோ படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பட்டயப் படிப்பு ( Diploma) தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த திடத்தில் பலன் பெற வருமான வரம்பு கிடையாது.
வயது வரம்பை பொறுத்த அளவில், மணமகளின் குறைந்தபட்ச வயது 20-ஆக இருக்க வேண்டும். மணமகனின் வயது 40-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மணமகனுக்கு இதுவே முதல் திருமணமாக இருக்க வேண்டும். மறுமணம் செய்த நாளிலிருந்து ஆறு மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விதவைச் சான்று, மறுமணம் செய்ததற்கான திருமண அழைப்பிதழ், மணமகன், மணமகள் இருவரின் வயதுச் சான்று, திட்டம் 2ன் கீழ் பயன்பெற இருந்தால், பட்டப் படிப்பு/பட்டயப் படிப்பு தேர்ச்சிச் சான்று ஆகியவை அவசியம். இவற்றை இணைந்து மாவட்டச் சமூகநல அலுவலர்கள் அல்லது சமூகநல விரிவாக்க அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு 15 நாட்களுக்குள் பரிசீலிக்கப்படும்.
தற்போது இந்த திட்டங்களில் பலன்கள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் வித்திட்டது முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். 1975ம் ஆண்டில் மறுமணம் செய்தால் ரூ.5000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அவர் திட்டத்தை விதவை மறுமணம் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த வரலாற்று தகவலை தற்போது திமுகவினர் சோஷியல் மீடியாக்களில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications