“தமிழகத்தில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் போதும்” பீகார் தேர்தல் முடிவால்.. உடன்பிறப்புகள் கொந்தளிப்பு
சென்னை: பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. எனவே தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு, திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் மட்டும் ஒதுக்கினால் போதும் என திமுகவினர் கூற தொடங்கியுள்ளனர்.
பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதற்கு இரண்டு கட்டங்களாக நவ.6 மற்றும் நவ.11ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த 2020 தேர்தலை விட அதிக அளவில் மக்கள் இந்த தேர்தலில் வாக்களித்திருந்தனர். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

பொதுவாக அதிக அளவில் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் எனில், அங்கு ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம். எனவே ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், ரிசல்ட்டை எதிர்பார்த்து மிகுந்த ஆர்வத்தோடு இருந்தன. இப்படி இருக்கையில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதல் களத்தில் என்டிஏ கூட்டணி தனது பிடியை வலுப்படுத்த தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை 25-30 ரவுண்டுகளாக இருக்கும். தற்போது வாக்கு எண்ணிக்கை 10வது ரவுண்டை தாண்டியிருக்கிறது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் என்டிஏ கூட்டணி முன்னிலையில் இருக்கிறது.
பாஜக - 91
ஐக்கிய ஜனதா தளம் - 81
ராம் விலாஸ் பஸ்வானின் LJPRV கட்சி - 21
இந்துஸ்தான் அவாம் மோர்சா - 5
ராஷ்டிரிய லோக் மோர்சா - 4
என என்டிஏ கூட்டணி கட்சிகள் முன்னிலையில் இருக்கின்றன. மகாபந்தன் கூட்டணியை பொறுத்தவரை,
ஆர்ஜேடி - 26
காங்கிரஸ் - 4
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல் - 4
சிபிஎம் - 1
ஆகிய தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது. இந்த விவரம் மதியம் 1 மணி நிலவரத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல வாக்கு சதவிகிதத்தை பொறுத்த அளவில் ஆர்ஜேடி 22.92% பெற்றிருக்கிறது. பீகாரில் அதிக வாக்குகள் பெற்ற கட்சி இதுதான். அதேபோல பாஜக 21.11% வாக்குகளை பெற்றிருக்கிறது. 18.98% வாக்குகளுடன் ஐக்கிய ஜனதா தளம் 3வது இடத்தில் இருக்கிறது. குறிப்பாக காங்கிரஸ் வெறும் 8.16% மட்டுமே வாக்குகளை பெற்றிருக்கிறது. ஓவைசியின் AIMIM கட்சி 5 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. அதாவது காங்கிரஸை விட ஒரு சீட் முன்னிலையில் இருக்கிறது.
இப்படி காங்கிரஸ் அடையாளம் தெரியாமல் சுருங்கி போயிருப்பதால், அக்கட்சிக்கு கூட்டணியில் 10 சீட்டுக்கு மேல் ஒதுக்க வேண்டாம் என்று உடன்பிறப்புகள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்திருந்தது. அதாவது காங்கிரஸுக்கு உரிய மரியாதை கொடுப்பவர்தான்.. தமிழகத்தின் முதல்வராக வர முடியும் என்று காங்கிரஸ் அழுத்தமாக கூறியிருந்தது. "காங்கிரசுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டால் மட்டுமே முதல்வர் பதவி சாத்தியமாகும். இல்லையென்றால், முன்னாள் முதல்வராகவே திருப்தி அடைய நேரிடும். காங்கிரசுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டால் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பிரச்சாரம் செய்வார்கள். கட்சிக்கு மரியாதை கிடைத்தால் மட்டுமே வெற்றிக்கு அனைவரும் உழைப்போம்" என்று விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியிருந்தார்.
ஆனால் விருதுநகரில் காமராஜரின் சொந்த ஊரில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை என்பது தனிக்கதை. மட்டுமல்லாது கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 25 இடம் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. அதில் 18 இடங்களில்தான் காங்கிரஸ் வென்றது. இது 72% ஆகும். இருப்பினும் இந்த முறை கூடுதல் தொகுதிகளை காங்கிரஸ் பெற திட்டமிட்டிருந்தது. அதில் உறுதியாகவும் இருந்தது. இந்நிலையில் காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்குவது வேஸ்ட் என்றும் குறைந்தபட்சம் 10 தொகுதிகள், அதிகபட்சமாக கடந்த முறை ஒதுக்கிய தொகுதியை கொடுத்து முடித்துக்கொள்ளலாம் என்றும் உடன்பிறப்புக்கள் மத்தியில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications