சிறையில் இருந்து வெளியே வந்ததும் செந்தில் பாலாஜி தோளில் முதலில் விழுந்தது மாலை இல்லை! என்ன பாருங்க
சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதாகிப் பல மாதங்கள் சிறையில் இருந்தவர் செந்தில் பாலாஜி. அவருக்கு இன்று தான் ஜாமீன் கிடைத்த நிலையில், புழல் சிறையில் இருந்து அவர் விடுதலையானார். அங்குத் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ஒரு சுவாரசிய நிகழ்வு நடந்தது அது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த 2021ம் ஆண்டு திமுக வென்று ஆட்சியை அமைத்த போது அமைக்கப்பட்ட அமைச்சரவையில் செந்தில் பாலாஜிக்கு முக்கிய துறைகளான மது விலக்கு மற்றும் மின்சார துறை ஒதுக்கப்பட்டது.

திமுக ஆட்சியில் பவர்புல்லான அமைச்சர்களில் ஒருவராக வலம் வந்த செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அவர் கைதானார்.
செந்தில் பாலாஜி: அதாவது முன்பு ஜெயலலிதா ஆட்சியில் அதிமுக சார்பில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் அவர் அரசு வேலை வழங்க லஞ்சம் பெற்றதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் வருமான வரித்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தது.
அதன்படியே கடந்தாண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. அதிகாலை தொடங்கிய இந்த ரெய்டு நள்ளிரவை வரை நீட்டித்தது. நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்த செந்தில் பாலாஜி முதலில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. இருப்பினும், ஒரு கட்டத்தில் அவர் அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். இருப்பினும், அதன் பிறகும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

திரண்ட தொண்டர்கள்: சுமார் 15 மாதங்கள் சிறையில் இருந்த அவருக்குப் பல முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. இந்தச் சூழலில் சுப்ரீம் கோர்ட் அவருக்கு இன்று ஜாமீன் வழங்கியது. இன்று மாலை அவர் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறையில் இருந்து விடுதலையான செந்தில் பாலாஜியை வரவேற்க திமுக தொண்டர்கள் பெருந்திரளாகத் திரண்டதால் டிராபிக் பாதிப்பும் கூட ஏற்பட்டது.
இன்று மாலை சிறையில் இருந்து வெளியே வந்த அவர் முதலில் அங்கிருந்த திமுக வழக்கறிஞர் அணியுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அதன் பிறகு தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தான் ஒரு சுவாரசிய சம்பவம் நடந்தது.
கழுத்தில் விழுந்த கட்சி துண்டு: பொதுவாகக் கைதாகி சிறையில் உள்ள அரசியல்வாதிகள் விடுதலையானால் அவர்களுக்கு மிகப் பெரிய மாலை அணிவித்துத் தான் வரவேற்பு அளிப்பார்கள். ஆனால், சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி கழுத்தில் முதலில் மாலை வந்து விழவில்லை. திமுக கட்சி துண்டு போட்டுத் தான் வரவேற்றார்கள்.
இந்த துண்டை அவர் காரில் ஏறிக் கிளம்பும் வரை கடைசி வரை கழற்றவே இல்லை. திமுக தொண்டர்கள் பலரும் பொதுவாகவே எல்லா நிகழ்ச்சிகளில் கட்சி துண்டுடன் தான் வருவார்கள். அந்த துண்டையே திமுகவினர் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கும் போட்டுள்ளனர் என்று நெட்டிசன்கள் குறிப்பிட்டனர்.
சிறையில் இருந்து விடுதலையான செந்தில் பாலாஜி, தன் மீது பதியப்பட்டது பொய் வழக்கு என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பதியப்பட்ட வழக்கு என்றும் குறிப்பிட்டார். மேலும், வழக்கை சட்டப்படி சந்தித்து விடுதலையாவேன் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications