முதலமைச்சரா இருந்தவருக்கு இது கூட தெரியாதா? எடப்பாடிக்கு சரமாரியாக 'பதிலடி’ கொடுத்த அமைச்சர் ரகுபதி!
சென்னை: திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுக்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை கோரினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. வெள்ளை அறிக்கை கேட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரை ஆற்றினார். இந்த நிகழ்வு நிறைவு பெற்ற பின்னர் தலைமை செயலக வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கூறினார்.

திமுக அரசு பொறுப்பேற்ற 33 மாதங்களில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. அதனை செயல்படுத்தும் போதெல்லாம் பிரச்சனை வருகிறது. உடனே ஒரு குழு அமைத்து விடுகிறார்கள். அப்படியாக திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 52 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் எத்தனை குழு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது, அதன் பெயரில் அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளன என வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார்கள். அதன் மூலம் இதுவரை எத்தனை நிறுவனங்கள், எத்தனை கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளன. அதன் மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் என விரிவான வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய கோரினேன். தமிழகம் 1 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என கூறுகிறார்கள். அதற்கு என்ன யுக்தி இவர்கள் கையாள போகிறார்கள் என்ற விவரத்தை கேட்டேன் அதற்கும் பதில் இல்லை.
மிகஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் கடுமையான வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்டன. அதனால், பலர் தங்கள் உடமைகளை இழக்கும் சூழல் உருவானது. அந்த சமயத்தில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள நிவாரண பணிகள் என்னென்ன? அதற்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு? தென் தமிழகத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட சேதம் என்ன? அதனை சரி செய்ய ஒதுக்கிய நிதி விவரம் குறித்தும் கேட்டேன் அதற்கும் பதில் இல்லை என குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை விடுத்துள்ளார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பதிலுரையைக் கொஞ்சமாவது கவனித்திருந்தால் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சிக்கான உத்திகள் என்னென்ன என்பது எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரிந்திருக்கும் என ரகுபதி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவாதத்தில் காற்றோடு கத்திச்சண்டை போட்டவருக்குக் கைதட்டல்கள் கிடைக்குமா என்று எண்ணியே எடப்பாடி பழனிசாமி வெளியே சென்று பேசியுள்ளார். திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகள் எல்லாம் அரசின் செயல்பாட்டை, நிதிநிலையை மேம்படுத்த அமைக்கப்பட்டவை. அவை நிர்வாகம் தொடர்புடையவை. அதனை பொதுப் பார்வைக்கு வைக்க வேண்டியதில்லை என்பது முதலமைச்சராக இருந்தவருக்குத் தெரியாதா? என ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், நீட் போன்ற விவகாரங்கள் குறித்து அமைக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகள் எல்லாம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. புயல் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மாதத்திற்குள்ளாகவே செலவு விவரத்தை எப்படித் தர முடியும்? பாதிக்கப்பட்ட சாலைகள் உட்பட பல பணிகள் தொடர் செலவினமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது செலவு எவ்வளவு? என்று கேட்கிறாரே முதலமைச்சராக இருந்த ஒருவர்.. என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications