விசிக + கம்யூனிஸ்டுகள் + காங்.. திமுக போட்ட "சிங்கிள்" கணக்கு.. ஸ்டாலின் அந்த முடிவை எடுத்துட்டாராமே
சென்னை: 2024 லோக்சபா தேர்தலுக்காக திமுக முக்கியமான திட்டம் ஒன்றை வகுத்து இருப்பதாக அக்கட்சி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லை. தேர்தலுக்கான பணிகளை கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும் செய்ய தொடங்கிவிட்டன. தேசிய அளவில் 26 எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன.
இவர்கள் ஒன்றாக சேர்ந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு உள்ளனர். இதனால் பாஜக தரப்பிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வலிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் தமிழ்நாடு அளவில் பாஜகவை வலுப்படுத்தும் பணியில் பாஜக தலைவர் அண்ணாமலை களமிறங்கி உள்ளார்.

இதற்காக தமிழ்நாடு முழுக்க நடைபயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டு உள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு நடைபயணம் மேற்கொண்டு உள்ளார் அண்ணாமலை. 4 நாட்களுக்கு முன் தொடங்கிய இந்த பயணம் தீவிரமாக நடந்து வருகிறது. 'என் மண் என் மக்கள் யாத்திரை' கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்கிறார்.
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் பூர்வாங்க பணிகளும் நடந்து வருகின்றன. அதேபோல் அதிமுகவும் மாபெரும் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு மதுரையில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்த எடப்பாடி திட்டமிட்டு உள்ளார். எடப்பாடி என்றால் கொங்கு மண்டல தலைவர் என்ற இமேஜ் இருக்கிறது. அதை உடைக்க எடப்பாடி நினைக்கிறாராம்.
இது போக லோக்சபா தேர்தலை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி சார்பாக மாபெரும் மாநாட்டை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. வரும் டிசம்பரில் இந்த கூட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கிள் பிளான்: இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலுக்காக சிங்கிள் பிளான் ஒன்றை திமுக களமிறக்க உள்ளதாம். அதாவது ஒற்றை இலக்க பிளான். அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்தது போல 10 தொகுதி தரப்படாது. ஒற்றை இலக்கத்தில் 8 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 1 இடங்கள் மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் இவர்களுக்கு தலா 2 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த முறை 2 இடங்கள் வழங்கப்படாது.
மாறாக ஒரே ஒரு தொகுதி மட்டுமே வழங்கப்படும். காங்கிரஸ் கட்சிக்கு திமுகவின் ராஜ்ய சபா இடங்களில் ஒன்று வழங்கப்படும். மற்றபடி 25 இடங்களில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை போட்டியிட்டதை விட லோக்சபா தேர்தலில் 25- 26 இடங்களில் போட்டியிட திமுக மேலிடம் திட்டமிட்டு உள்ளதாம்.
இதற்கான ஆய்வு பணிகளை செய்து வருகிறதாம். அதாவது கூட்டணி கட்சிகள் போட்டியிட ஏற்ற இடங்கள், திமுக போட்டியிட ஏற்ற இடங்கள், வேட்பாளர்களில் மாற்றப்பட வேண்டியவர்கள் என்று பெரிய லிஸ்டை திமுக உருவாக்க உள்ளதாம். இதற்கான சர்வே பணிகள் விரைவில் உளவுத்துறை மூலம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்தை திமுகவின் கூட்டணி கட்சிகள் எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications