எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் : சட்டபேரவையில் கோரிக்கை
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதியின் பெயரை சூட்ட சட்டசபையில் திமுக உறுப்பினர் பரந்தாமன் கோரிக்கை விடுத்திருந்தார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்கள் தொகுதி குறித்த கோரிக்கைகளை அனுப்பி வருகிறார்கள். அந்த வகையில் திமுக எம்எல்ஏ பரந்தாமன் இன்று ஒரு கோரிக்கையை வைத்திருந்தார்.
அதில் அவர் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு டாக்டர் எம்.ஜி. ராமசந்திரன் ரயில் நிலையம் என கடந்த அதிமுக ஆட்சியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் கிளாம்பாக்கத்தில் அதிமுக- பாஜக கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் மக்களவைத் தேர்தல் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அதில் பிரதமர் கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில்தான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என அறிவித்திருந்தார்.
மேலும் திரையுலகில் மட்டுமல்ல மக்களின் இதயங்களையும் வென்றவர் எம்ஜிஆர். இலங்கை சென்றிருந்த போது எம்ஜிஆர் பிறந்த இடத்தை பார்வையிட்டேன் என்றும் மோடி தெரிவித்திருந்தார். இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
பின்னர் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அப்போதைய தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இந்த பெயர் மிக நீளமாக இருப்பதாகவும் டிக்கெட் கேட்கும் போது பெயரை சொல்லி முடிப்பதற்குள் ரயிலே கிளம்பிவிடும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
எழும்பூர் ரயில் நிலையமானது 1905 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. 116 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னக ரயில்வே என்ற பெயருடன் இயங்கி வந்தது. இங்கு நாளொன்றுக்கு 3 லட்சம் பயணிகள் வருகை தருகிறார்கள். இங்கு 11 நடைமேடைகள் உள்ளன. ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட இந்த கட்டடம் ரயில்வே துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.












Click it and Unblock the Notifications