'ஆதாரம் இருக்கா?' கேள்வி கேட்ட எடப்பாடி பழனிசாமி.. சட்டசபையில் திமுக எம்எல்ஏ கொடுத்த அதிரடி பதிலடி
சென்னை : கடந்த ஆட்சி காலத்தில் தங்கமும் மணியுமாக ஆக இருக்க வேண்டிய தமிழ்நாடு மின்சார வாரியம், இன்று ஈயம் பித்தளை ஆக மாறியதற்கு அதிமுக தான் காரணம் என்று திமுக எம்எல்ஏ பரந்தாமன் மறைமுகமாக குற்றம்சாட்டினார். அப்போது ''ஆதாரம் இருக்கிறதா?'' இருக்கிறதா என்று எடப்பாடி கேள்விட்ட கேட்ட நிலையில் சிஏஜி அறிக்கை பாருங்கள் என பரந்தாமன் பதிலடி கொடுத்தார்.
பட்ஜெட்டை உரைக்கு பின்னர் ஒவ்வொரு நாளும் ஒரு துறை மீது மானிய கோரிக்கை விவாதம் சட்டசபையில் நடந்து வருகிறது. இன்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை தொடர்பான விவாதம் நடந்தது.
அப்போது உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையில் செய்யப்படும் பணிகளை விளக்கினார்,.

எழும்பூர் ரயில் நிலையம்
இதனிடையே விவாதத்தின் போது பேசிய எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் (திமுக), '' சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு முத்தமிழ் அறிஞர் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்தார் (சென்டரல் ரயில் நிலையம் எம்ஜிஆர் பெயரில் உள்ளது).

மின்சாரம் விலை
தொடர்ந்து பேசிய அவர், ''கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக மின்வாரியம் அதானி குழுமத்திடமிருந்து மின்சாரத்தை ஒரு யூனிட் ஏழு ரூபாய் என்று ஏன் வாங்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பினார். மகாராஷ்டிராவில் 5 ரூபாய்க்கு வாங்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் ஏழு ரூபாய்க்கு வாங்கப்பட்டது? என்று பரந்தாமன் எம்எல்ஏ கேள்வி எழுப்பினார்.

ஈயம் பித்தளை
'மேட்ச் பிக்சிங்' என்று கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆனால் அதிமுக ஆட்சியில் மின்சாரம் கொள்முதலில் 'பர்ச்சேஸ் பிக்சிங்' நடந்துள்ளது என்று குற்றம்சாட்டினார். மேலும் கடந்த ஆட்சி காலத்தில் தங்கமும் மணியுமாக ஆக இருக்க வேண்டிய தமிழ்நாடு மின்சார வாரியம், இன்று ஈயம் பித்தளை ஆக மாறியதற்கு யார் காரணம்'' என அவர் கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிசாமி கேள்வி
அப்போது குறுக்கிட்ட எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ''ஆதாரம் இருக்கிறதா?'' என பரந்தாமனை பார்த்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பரந்தாமன் எம்எல்ஏ, ''சிஏஜி அறிக்கையின் 2013- 2018 புத்தகத்தில் பாருங்கள். அதில் ஆதாரம் இருக்கிறது'' என விளக்கம் அளித்தார். இவ்வாறு சட்டசபையில் விறுவிறுப்பாக விவாதம் நடந்தது.

எவ்வளவு கடன்
இதனிடையே உதய் திட்டத்தால் தமிழக அரசு 22815 கோடி கடனை ஏற்றுக்கொண்டாலும், மின்சார வாரியத்தின் கடன் 31.03.2021 வரை 1,34,119.94 கோடியாக உள்ளது என்று தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் கடன் 31.03.2021 வரை 25,568.73 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் கடந்த 10 ஆண்டுகளில் 7 வருடங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதன் காரணமாக 31.03.2021 வரை இழப்புகள் 6,782.35 கோடியாக அதிகரித்துள்ளதாவும், நடப்பு நிதியாண்டில் வருவாய் இழப்புகள் 1,778.17 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் மின்சார வாரிய கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,












Click it and Unblock the Notifications