நாட்டிற்கான செயல்திட்டத்தை ஆர்எஸ்எஸ்தான் இயற்றுகிறதா? பாரதம் பெயர் விவகாரத்தில் கனிமொழி எம்பி கேள்வி
சென்னை: பாரத குடியரசுத் தலைவர் என்று ஜி20 மாநாட்டின் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், இது பல்வேறு விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. திமுக எம்பி கனிமொழியும் இந்த விவகாரம் குறித்து விமர்சித்துள்ளார்.
எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தியா கூட்டணி என்கிற பெயரில்தான் அனைத்து கூட்டங்களையும் எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகள் இந்த 'இந்தியா' எனும் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் நாட்டின் பெயரை இந்தியா என்பதிலிருந்து பாரதம் என்று மாற்ற மத்திய அரசு முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கேற்றாற்போல பாஜக தலைவர்கள் பலர், "இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். பாரதம்தான் நமது உண்மையான பெயர்" என்று கூறி வருகின்றனர். அதேபோல ஆர்எஸ்எஸ் தலைவர்களும் பாரதம் எனும் பெயருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். இந்த சலசலப்புகள் ஒருபுறம் இருக்கையில் மறுபுறம் மற்றொரு பஞ்சாயத்து வெடித்து கிளம்பியிருக்கிறது. அதாவது இந்த மாதம் 9,10 தேதிகளில் டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 20 நாட்களின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கான அழைப்பிதழ்கள் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் 'பாரதத்தின்' குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக 'இந்திய' குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இம்முறை பாரதம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது, ஏற்கெனவே இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வரும் கருத்தியலுக்கு வலு சேர்ப்பதை போல இந்த நடவடிக்கை இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் 1ன் படி, 'இந்தியாவாக இருந்த பாரதம் மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்' என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது இந்த மாநிலங்களின் ஒன்றியம் கூட தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது" என்று ட்வீட் செய்து விமர்சித்திருந்தார். அதேபோல தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் விமர்சித்துள்ளார்.
அதாவது, "ஆன்டி இந்தியன் என்று அடுத்தவர்களை சொல்லியே பழக்கப்பட்டவர்கள், இப்பொழுது தாங்களே ஆன்டி இந்தியன் ஆகிப்போனார்கள்" என்று விமர்சித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திமுக எம்பி கனிமொழியும் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளார். அதாவது, "பாரத குடியரசுத் தலைவர் என்ற பெயரில் அழைப்பிதழ்கள் வந்து இதுவரை நாங்கள் பார்த்ததில்லை. அழைப்பிதழ்கள் எப்போதும் 'இந்திய குடியரசுத் தலைவர்' அல்லது 'இந்திய பிரதமர்' என்று தான் அச்சிடப்படும்.
இப்போது ஏன் இதைச் செய்தார்கள்? இதற்கான உள்நோக்கம் என்ன? இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன? இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என சமீபத்தில்தான் ஆர்எஸ்எஸ் தலைவர் கூறியிருந்தார். தற்போது இந்த அழைப்பிதழை பார்க்கும்போது பல கேள்விகள் எழுகிறது. ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான செயல்திட்டத்தை ஆர்எஸ்எஸ் தான் இயற்றுகிறதா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications