"அன்று சாந்தி.. இன்று இமானே கெலிஃப்!" ஒலிம்பிக் தொடரில் வெடித்த பாலின சர்ச்சை.. கனிமொழி பரபர
சென்னை: ஒலிம்பிக் தொடரில் குத்துச்சண்டை போட்டியில் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப் பாலினம் குறித்த சர்ச்சை கிளம்பியது. இது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், பலரும் பல வித கருத்துகளைக் கூறி வருகின்றனர். இதற்கிடையே இமானே கெலிஃப் ஆதரவாக திமுக எம்பி கனிமொழி #SupportImane என்ற ஹேஷ்டேக் உடன் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இப்போது ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. அதில் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையின் பாலினம் குறித்த சர்ச்சை கிளம்பியது.

வெடித்த சர்ச்சை: அதாவது கடந்த ஆக. 1ம் தேதி அங்கு நடந்த குத்துச்சண்டை போட்டியில் அல்ஜீரியா வீராங்கனை இமானே கெலிஃப் 63 கிலோ எடைப் பிரிவில் இத்தாலியின் ஏஞ்சலா கரினியை எதிர்கொண்டார். இருப்பினும், இந்தப் போட்டியில் இருந்து வெறும் 46 நொடிகளில் ஏஞ்சலா கரினி வெளியேறினார். கெலிஃப்க்கு எதிராகப் போட்டியிட விரும்பவில்லை என்று ஏஞ்சலா கரினி கூறினார். இதுவே சர்ச்சைக்குக் காரணமாக இருந்தது.
அதன் பிறகு பலரும் இமானே கெலிஃப்பிற்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்தனர். அதாவது இமானே கெலிஃப் பெண்ணாக பிறந்தாலும் மரபணு ரீதியாக அவர் ஆண் என்று பலரும் தெரிவித்தனர். இதனால் இமானே கெலிஃப்பை பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ளவே அனுமதித்து இருக்கக்கூடாது என்று பலரும் விமர்சித்தனர்.
ஆதரவாகவும் எதிராகவும் கருத்து: அதேநேரம் ஒரு தரப்பினர் இமானே கெலிஃப்பிற்கு ஆதரவாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாகத் தமிழகத்தைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனை சாந்தி ஆசிய ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற போது இதேபோல சர்ச்சை ஏற்பட நிலையில், அதைக் குறிப்பிட்டு பலரும் இமானே கெலிஃப்பிற்கு ஆதரவான கருத்துகளைக் கூறி வருகின்றனர்.
கனிமொழி ட்வீட்: இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் #SupportImane என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டுள்ளார். அதில் அவர்,"தலை நிமிர்ந்து நிற்கும் பெண்களின் பெண்மை எப்போதுமே கேள்விக்குறியாகவே இருக்கும். அப்போது நமது தடகள வீராங்கனை சாந்தி, இப்போது இமானே கெலிஃப்.. உங்களின் வலிமையும் உறுதியும் எங்கள் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது" எனக் கூறியிருக்கிறார்.
ஒலிம்பிக் போட்டியில் இமானே கெலிஃப் இப்போது அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கிறார். இந்தச் சூழலில் ஒரு பக்கம் அவருக்கு எதிரான கருத்துகள் அதிகரித்துள்ள நிலையில், மறுபுறம் அவருக்கு ஆதரவாகவும் பலரும் கருத்துகளைக் கூறி வருகின்றனர். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் விளக்கமளித்திருந்தது. அதாவது, உரிய விதிகளைப் பின்பற்றியே இமானேவுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
சாந்தி: தமிழகத்தைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனை தான் சாந்தி.. இவர் தடகளத்தில் இந்தியாவிற்காகப் போட்டியிட்டுப் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார். இதற்கிடையே 2006இல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 800 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்றார். இருப்பினும், அவர் பாலின சோதனையில் தோல்வி அடைந்த நிலையில், அவரது பதக்கம் பறிக்கப்பட்டது. மேலும், அவர் அதன் பிறகு தடகள போட்டியில் பங்கேற்கவும் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications