இளையராஜா விவகாரம்..தேவையில்லாமல் திமுகவை வம்பிழுக்க வேண்டாம்! எல் முருகனுக்கு ஆர் எஸ் பாரதி காட்டம்
சென்னை: தேவையில்லாமல் மத்திய அமைச்சர் எல் முருகன் எங்களை வம்புக்கு இழுக்க வேண்டாம் என திமுக முதன்மை செயலாளரும் எம்பியுமான ஆர். எஸ். பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜாவின் கருத்துக்கு திமுக கூட்டணிக் கட்சியினர் காட்டமாக விமர்சனம் செய்திருந்தனர்.
இந்த நிலையில் இளையராஜாவுக்கு எதிர்ப்புகளும் ஆதரவும் குவிந்து வருகிறது. அந்த வகையில் மத்திய இணையமைச்சரும் தமிழக பாஜக முன்னாள் தலைவருமான எல் முருகன் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.

என்ன குற்றம் செய்தார்?
அவர் கூறுகையில் இளையராஜா என்ன குற்றம் செய்தார்? திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பிடிக்காத ஒரு கருத்தை இளையராஜா சொன்னது ஒரு குற்றமா? கருத்து சுதந்திரம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. ஆனால் அத்தகைய கருத்து சுதந்திரம் எதற்காக இளையராஜாவுக்கு மறுக்கப்படுகிறது.

திமுக எதிர்ப்பு
திமுக தலித் சமூகத்தினருக்கு எதிராகவும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான மனநிலையில் உள்ளதையே அவர்களது எதிர்ப்பு காட்டுகிறது என எல் முருகன் கூறியிருந்தார். இந்த நிலையில் இவரது கருத்திற்கு திமுக முதன்மை செயலாளர் ஆர் எஸ் பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

எல் முருகன் கருத்து
அவர் கூறுகையில், மத்திய அமைச்சர் எல் முருகன் தேவையில்லாமல் எங்களை (திமுகவை) வம்புக்கு இழுக்க வேண்டாம். பிரதமர் மோடி குறித்து இளையராஜா கூறியது குறித்து திமுக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கும் போது எங்களை வம்புக்கு இழுப்பது ஏன்?

மீண்டும் ஒரு வழக்கு தொடரணுமா?
முரசொலி நாளிதழ் தொடர்பாக எல் முருகனுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. அப்படியிருக்கும் போது இளையராஜா விவகாரத்தில் நாங்கள் கருத்தே சொல்லாமல் இருக்கும் போது எங்களை வம்புக்கு இழுத்து மீண்டும் ஒரு வழக்கை தொடர வழிகோலிட வேண்டாம்.
Recommended Video

இளையராஜாவுக்கு மட்டும்தான் கருத்து சுதந்திரமா?
எல் முருகன் தனது போக்கை திருத்திக் கொள்ளவிட்டால் சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். கருத்து சுதந்திரம் என்பது இளையராஜாவுக்கு மட்டும்தானா? இளையராஜாவின் கருத்தை விமர்சனம் செய்வதற்கும் சுதந்திரம் இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம் என ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications