ஊதியத்தை உபயோகிக்காத திமுக எம்.பி.! ஏழை எளியோரின் மருத்துவ சிகிச்சைக்கு செலவு!
சென்னை: திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்.பி.களுக்கான மாத ஊதியத்தை இதுவரை தனது சொந்தக்காரியங்களுக்கு பயன்படுத்தியது கிடையாதாம்.
மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றது முதல் தனக்கு கொடுக்கப்படும் மாத ஊதியத்தை பொதுக்காரியங்களுக்கு மட்டுமே செலவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய சூழலில் ராஜ்யசபா எம்.பி.களுக்கு மாதம் ஒரு லட்சத்து 89,000 ஊதியம் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்யசபா உறுப்பினர்
திமுக சார்பில் அண்மையில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வானவர் ராஜேஷ்குமார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ள இவர், எம்.பி.க்கான தனது மாத ஊதியத்தை கடந்த மூன்று மாதங்களாக கையில் தொடவில்லையாம். முதல் மாத ஊதியத்தை திமுக இளைஞரணி வளர்ச்சிக்காக கொடுத்த இவர், அடுத்தடுத்த இரண்டு மாத ஊதியத்தை ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் மருத்துவச் செலவுகளை கவனித்துக் கொள்கிறாராம்.

மருத்துவக் கட்டணம்
அறுவைச் சிகிச்சை கட்டணம், ஸ்கேன் கட்டணம் என மருத்துவ சிகிச்சை உதவி கோருபவர்களின் தேவையறிந்து அதற்கேற்ப ஒரு லட்சத்து 89 ஆயிரம் ரூபாயை பிரித்துக் கொடுத்து விடுகிறாராம். ராஜேஷ்குமார் எம்.பி.யின் இந்த நடவடிக்கையை அறிந்த பலரும், இந்த மாதம் இல்லையென்றாலும் பரவாயில்லை அடுத்த மாத ஊதியத்திலாவது மருத்துவ சிகிச்சைக்கு உதவுங்கள் என முன் பதிவே செய்துகொள்ளும் சூழலும் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசு சலுகை
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஏற்கனவே அரசிடம் இருந்து கிடைக்கும் சலுகைகள் காரணமாக, ராஜேஷ்குமார் எம்.பி, தனது மாத ஊதியத்தை முழுமையாக சொந்தக் காரியங்களுக்கு பயன்படுத்த விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே வட்டியில்லா கடன், எரிபொருள் படி, ரயில் விமான டிக்கெட்களில் சலுகைகள் என எம்.பி.க்களுக்கு ஏராளமான வசதிகள் அரசிடம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கட்சி கணக்கு
மதிமுக பொதுச்செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான வைகோ, தனது மாத ஊதியத்தை கட்சிக் கணக்கில் வரவு வைத்து வருவது கவனிக்கத்தக்கது. அவரும் எம்.பி.க்கான தனது மாத ஊதியத்தை சொந்தப் பயன்பாட்டுக்கு பயன்படுத்த விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications