அமைச்சர் செந்தில் பாலாஜி நிகழ்ச்சியை ’பூமி பூஜை’ என்பதா? திமுக எம்.பி. செந்தில்குமார் எதிர்ப்பு!
சென்னை: தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பூமி பூஜை என தலைப்பிட்டு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளதற்கு திமுக எம்.பி. செந்தில்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே ஆலாபுரம் ஏரியை சீரமைக்கும் பணிகள் சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் இந்தநிகழ்ச்சி நடைபெற்றது. அதில், அர்ச்சகரை வைத்து இந்து மத முறைப்படி பூஜை செய்ய முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுகவின் தருமபுரி எம்பி செந்தில்குமார், அரசு நிகழ்ச்சிகளில் மத ரீதியான பூஜைகள் நடத்தக்கூடாது என்று அறிவிப்பு கொடுத்த பின்னரும் பூஜை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார். அத்துடன் இந்து மதத்திற்கான பூஜை செய்யும் இடமில்லை இது. கிறிஸ்டியன் பாதர் எங்கே? இஸ்லாம் இமாம் எங்கே? திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் எங்கே? முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இப்படி நடைபெறுவதில்லை. இது திராவிட மாடல் ஆட்சி. இதுபோன்ற நிகழ்வுகள் நடத்த வேண்டும் என்றால், அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களை கொண்டு நடத்துங்கள். ஒரு மதத்தை மட்டும் வைத்து நடத்தக்கூடாது எனவும் சீறினார் செந்தில்குமார்.
திமுக எம்.பி.செந்தில்குமாரின் இந்த நடவடிக்கை பெரும் விவாதத்துக்குரியதானது. செந்தில்குமார் எம்.பி.யின் இந்த நடவடிக்கையை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராட்டினார். இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், அரசு கட்டடங்களுக்கு கால்கோள் விழா நடத்தும்போது 'பூமி பூஜை' என்ற சடங்கு, அதற்குப் பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து வந்து, வடமொழி மந்திரம் ஓதச் சொல்வது, அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட அதற்கு வழிபாடு நடத்துவதுபோன்ற தோற்றம் - இவையெல்லாம் அரசமைப்புச் சட்டத்தின் 'செக்யூலர்' (Secular) என்ற மதச்சார்பின்மை தத்துவத்திற்கும், பகுத்தறிவுக்கும் முரணானவையே! அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் காலத்தில், தி.மு.க. ஆட்சியில் இப்படி ஏதும் நடக்க அவர்கள் அனுமதித்தது கிடையாது. 'மதச்சார்பற்ற' என்றால், ''அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லுதல்'' என்ற ஒரு தவறான வியாக்கியானம் நமது அரசியல்வாதிகளிடையே புழக்கத்திற்கு விடப்பட்டதே - அடிப்படையில் அது நியாயமல்ல - திரிபுவாத விளக்கம் ஆகும்!
இதன்படி பார்த்தால்கூட, அரசு அடிக்கல் நாட்டுவிழாவில், அனைத்து மதத்தினர், மற்றவர் அனைவரையும்தானே அழைத்திருக்கவேண்டும்; வெறும் ஒரு மத (ஹிந்து சனாதன)ச் சடங்கு - அதுவும் நடத்தப்படவேண்டிய அவசியம் என்ன என்று தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் அவர்கள் கேள்வி எழுப்பியது மிகவும் சரியானது மட்டுமல்ல; நியாயமும், தேவையானதும் சட்டப்படியானதுமாகும். காரணம், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிரமாணம் எடுத்துள்ள நிலையில், அதனடிப்படையே ''மதச்சார்பற்ற சமதர்ம ஜனநாயகக் குடியரசு'' என்பதாலும், அதனைக் காப்பாற்றுவதற்கே அப்பதவி என்பதுதானே உறுதிமொழியின் தத்துவம்? என கூறியிருந்தார்.
இந்த பின்னணியில் கரூரில் செயற்கை நீரூற்று உள்ளிட்டவை அமைப்பதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்க இருந்தார். இந்த அழைப்பிதழை சுட்டிக்காட்டி- "கரூர் மாநகராட்சி பார்வைக்கு- இந்தியா ஓர் #மதச்சார்பற்ற_நாடு என்று நமது அரசியல் அமைப்பு சட்டம் உள்ள காரணத்தினால் கரூர் இந்தியாவில் அமைந்துள்ள ஓர் மாநகராட்சி என்ற அடிப்படையில் அந்த நிகழ்ச்சிக்கு பெயர் #அடிகல்_நாட்டு_விழா அல்லது பணிகள் துவங்கும் விழா Ground breaking ceremony" என தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications