Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை, மதுரை மெட்ரோ ரயில் விவகாரத்தில் மோடி தலையிட வேண்டும்! திமுக எம்.பிக்கள் தீர்மானம்- முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடி நேரில் தலையிட்டு கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை அனுமதிக்க வேண்டும் என்றும், கோவை, மதுரை விமான நிலைய விரிவாக்கம், மதுரை பன்னாட்டு விமான நிலையத் திட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி தந்திட வேண்டும் என்றும் திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்" நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

mk stalin dmk delhi

தீர்மானம் : 1

மாநில உரிமைகளை மதிக்காமல் அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்.

திராவிட மாடல் அரசின் மகத்தான சாதனையாக இதுவரை 17 முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, 1016 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உருவாக்கி, 11 லட்சத்து 40 ஆயிரத்து 731 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 34 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி "TN Rising" என்ற உச்சத்தைத் தொட்டிருக்கின்ற தமிழ்நாடு, தொழில் வளர்ச்சியிலும் - சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் - மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி "எல்லாருக்கும் எல்லாம்" என்ற உன்னத நிலையை உருவாக்கி ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி பீடுநடை போட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், நம் மாநிலத்தின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, நிதி ஆணையத்தின் வாயிலாக நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் மற்றும் அந்த ஆணையம் அளித்துள்ள அதிகார பகிர்வுகளை அளிக்க மறுப்பது, மாநிலங்களில் செயல்படுத்தப்படும் ஒன்றிய அரசின் திட்டங்களின் நிதிச்சுமையை இதுவரை இல்லாத அளவிற்கு மாநில அரசின் தலையில் சுமத்துவது, ஒன்றிய அரசு மட்டுமே செஸ் வசூலித்து மாநிலத்திற்கு அறவே அளிக்க மறுப்பது, ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்காமல் நிராகரித்து, மாநிலத்தின் வரிகளை மட்டும் வசூலித்துக் கொள்வது, மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியினை மாநிலத்தில் நடத்துவதற்கு அனைத்து வகையிலும் முட்டுக்கட்டை போடுவது, பா.ஜ.க.வை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதியை வாரி வழங்குவது, சிபிஐ - அமலாக்கத்துறை - வருமானவரித்துறை என அனைத்து தன்னாட்சி அமைப்புகளையும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அதிகார துஷ்பிரயோகம் செய்யத் தூண்டுவது, எல்லாவற்றுக்கும் மேலாக ஆளுநர்களை நியமித்து, பா.ஜ.க. அரசு இல்லாத மாநிலங்களில் அராஜகத்தில் ஈடுபடுவது எனக் கூட்டாட்சிக் கருத்தியலைச் சிதைக்கும் நடவடிக்கைகளைத் தனது அன்றாட "அரசு நடவடிக்கைகளாக" ஆக்கிக் கொண்டுள்ள ஒன்றிய பா.ஜ.க அரசு, திட்டம் போட்டு தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தை தடுத்து, நம் மாநிலத்திற்கான எந்த முத்திரைத் திட்டங்களும் தராமல் மறுத்து, அறிவிக்கப்பட்ட ஒன்றிரண்டு திட்டங்களைக்கூட முடக்கி, "ஒன்றிய - மாநில அரசு நிர்வாக ஒத்துழைப்பில் -!உறவில்" ஓர் கருப்பு அத்தியாயத்தை உருவாக்கியுள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இக்கூட்டம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்து, "ஒன்றிய அரசே! ஒன்றியஅரசே! மக்கள் நலன் காப்பதில் முதல்வரிசையில் நிற்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களை வஞ்சிக்காதே!!" என்ற உரிமைக்குரலை இந்தக் கூட்டம் முன்வைக்கிறது.

தீர்மானம் : 2

ரயில் திட்டங்களிலும் நிதி ஒதுக்கீட்டிலும் தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சகத்திற்குக் கண்டனம்!

"புதிய ரயில் திட்டங்களும் இல்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட பல்வேறு முக்கியமான ரயில் திட்டங்களும் செயல்படுத்தப்படுவதில்லை" என்று தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

"ரயில்வே திட்டங்களில் புதிய வழித்தடத்திற்கு 2024-25-இல் 31 ஆயிரத்து 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு. ஆனால் தெற்கு ரயில்வேக்கு வெறும் 301 கோடி ரூபாய் மட்டும்" என்ற ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாரபட்சமான அணுகுமுறையால் அவலநிலை ஏற்பட்டுள்ளது. கழகத் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் மாண்புமிகு பிரதமர் அவர்களைச் சந்திக்கும் நேரங்களிலெல்லாம் தவறாமல் புதிய ரயில் திட்டங்கள், தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள ரயில் திட்டங்களைப் பற்றிப் பேசுகிறார்; வலியுறுத்துகிறார்; கழகத் தலைவரின் ஆணைக்கிணங்க நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்புகிறோம். ஆனால் திட்டங்களை அறிவிக்கும்போது "தமிழ்நாடு" என்ற மாநிலத்தின் பெயரையே ஒன்றிய பா.ஜ.க. அரசு மறந்து விடுகிறது.

தமிழ்நாட்டிற்கு ரயில்வே திட்டங்களுக்கு நிதியும் ஒதுக்காமல் வெறுக்கிறார்கள். புதிய திட்டங்களையும் அறிவிக்க மறுக்கிறார்கள். ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் நிலையை உடனடியாக கைவிட்டு, மாநிலத்திற்கான ரயில்வே திட்டங்களை நிறைவேற்றிடுக என இக்கூட்டம் ஒன்றிய பா.ஜ.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 3

பிரதமர் நேரில் தலையிட்டு கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை அனுமதிக்க வேண்டும்.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவைக்கும், கோயில் நகரமான மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கழக அரசின் சார்பில் கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இருமுறை நேரில் மாண்புமிகு பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.

கடிதம் வாயிலாகவும் கோரிக்கை விடுத்துள்ளார். மக்கள்தொகை அளவுகோல் காட்டி, தமிழ்நாட்டிற்கு மறுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, அதே அளவுகோல்படி இதே திட்டத்தை ஆக்ரா, இந்தூர், பாட்னா போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் நிறைவேற்றியிருக்க வாய்ப்பில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை மறுப்பதற்குக் கூறப்பட்டுள்ள காரணங்கள் "தமிழ்நாட்டிற்கு என்றே தனிப்பட்ட உருவாக்கம்" என்பதை மிகத் தெளிவாகப் பிரதமருக்கே கடிதம் மூலம் விளக்கி, இத்திட்டம் குறித்த விரிவான திட்ட அறிக்கையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் எனவும், தேவைப்பட்டால் நேரில் வந்து கூட சந்திக்கத் தயார் என்றும் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். இவ்வளவுக்குப் பிறகும், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து ஒன்றிய அரசு வாய் திறக்காமல் இருப்பது தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் விரோதமான செயல் என இக்கூட்டம் தனது கண்டனத்தைப் பதிவுசெய்து, இந்த மெட்ரோ ரயில் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றுவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கிட மாண்புமிகு பிரதமர் அவர்கள் நேரிடையாகத் தலையிட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

மேலும், இந்த மெட்ரோ ரயில்திட்டங்கள் வருவதற்கு அ.தி.மு.க. துளியளவும் துணை நிற்கவில்லை என்றாலும், "கைக்குட்டையும் கையுமாகச் சென்று" பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்துவிட்டு திரும்பிய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு.பழனிசாமி அவர்கள் ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சகத்திற்குத் துணை போக வேண்டாம் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 4

கோவை, மதுரை விமான நிலைய விரிவாக்கம், மதுரை பன்னாட்டு விமான நிலையத் திட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி தந்திடுக!

உட்கட்டமைப்பைப் பெருக்குவது என்பது ஒரு மாநில வளர்ச்சியின் உயிர்மூச்சு. அதனை திராவிட மாடல் அரசு வேகமாக மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களிலும் பரவலாகச் செய்து வருகிறது. மாநிலத்தில் அமையும் உயர்மட்ட மேம்பாலங்கள் - நூலகங்கள் - உயர்தர மருத்துவமனைகள் ஆகியவையே இன்றைக்கு இந்த அரசின் சாதனை அடையாளங்களாகக் காட்சியளிக்கின்றன. அசாத்திய வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் தமிழ்நாட்டு பொருளாதாரத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல, கோவை மற்றும் மதுரை விமான நிலையங்களை விரிவாக்கம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்! மதுரை விமான நிலையத்தைப் பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டியதும் மிகவும் அவசியம்!

கழக அரசின் சார்பில் இந்த இரு கோரிக்கைகளை ஒன்றிய அரசுக்கு முன்வைத்தும், இரண்டு கோரிக்கைகளையுமே நிராகரித்து விட்டு தமிழ்நாட்டு மக்களிடம் வாக்கு கேட்டு வரத் துடிக்கிறார்கள். தமிழில் பேசி நடிக்க முனைகிறார்கள். கோவை, மதுரை விமான நிலைய விரிவாக்கத்தை நிராகரித்துள்ளதற்கோ - கிடப்பில் போடுவதற்கோ ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எவ்வித நியாயமான காரணமும் இல்லை என்பதால், மாநிலத்தின் உட்கட்டமைப்பு மற்றும் முன்னேற்றத்தை மனதில் கொண்டு, கோவை - மதுரை விமான நிலைய விரிவாக்கத் திட்டங்களுக்கும் - மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கும் விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு ஒன்றிய பா.ஜ.க. அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 5

கலைஞர் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவும், ஆளுநருக்குக் கால நிர்ணயம் செய்யவும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்!

கடந்த 24.04.2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 2024-25-ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் கும்பகோணத்தில் விரைவில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. பாமர மக்களின் பள்ளிக்கனவை மட்டுமல்ல, உயர்கல்விக் கனவையும் நனவாக்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரிலான பல்கலைக்கழகத்திற்கு 28.04.2025 அன்று சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, 29.04.2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, 02.05.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை மதிக்கத் தெரியாத மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்கண்ட சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் அளிப்பதற்குப் பதில், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து, திராவிட இயக்கத்தின் கல்வித் தொண்டின் மீது அவருக்கு உள்ள வெறுப்பைக் காட்டியிருக்கிறார். மக்களாட்சித் தத்துவத்தை நிலைநாட்டிட உச்சநீதிமன்றத்தைக் கழக அரசு நாடியுள்ள நிலையில், கலைஞர் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவிற்குக் குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும், சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்யும் சட்டப் போராட்டத்தில் ஓயமாட்டோம் எனவும் கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சபதத்தை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கழக எம்.பி.,க்கள் குரல் கொடுப்பது எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் : 6

செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தில் விவசாயிகளைப் பாதுகாத்திட ஒன்றிய அரசுக்கு மாண்புமிகு முதலமைச்சர் வைத்த கோரிக்கையை உடனடியாக ஏற்றிடுக!

பொது விநியோகத் திட்டம் மற்றும் ஒன்றிய அரசின் பிற நலத்திட்டங்களுக்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கி வரும் நிலையில், FRK கொள்முதலுக்குப் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்தி, அந்த வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு கடைப்பிடித்த நிலையிலும், இத்திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசு பல்வேறு தாமதங்களைச் செய்து வருவதால், தமிழ்நாட்டிற்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நெருக்கடியான சூழலை அகற்றுவதற்குக் கழகத் தலைவரும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் கடந்த 17.11.2025 அன்று பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதி, "FRK 25 கிலோ மூட்டைகளுக்குப் பதிலாக 50 கிலோ மூட்டைகளாக மாற்றம் செய்திடவும்", "மாதிரிகள் எடுக்கும் அளவு 10 மெட்ரிக் டன்னிலிருந்து 25 மெ.டன்னாக மாற்றம் செய்திடவும்", "மாதிரிகளின் முடிவினை அறிவித்திடும் காலத்தினை

12 நாட்களில் இருந்து 7 நாட்களாக குறைத்திடவும்" என கோரிக்கைகள் வைத்தும் இதுநாள் வரை நிறைவேற்றப்படவில்லை என்பதை இக்கூட்டம் மிகுந்த கவலையுடன் பதிவு செய்கிறது. இக்கோரிக்கைகள் இன்னும் ஏற்கப்படாத சூழலில், இதுநாள் வரை 290 மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் மட்டுமே பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் 43,000 மெட்ரிக் டன் மட்டுமே நெல் அரவை செய்து 29,000 மெ.டன் மட்டுமே செறிவூட்டப்பட்ட அரிசியாக உற்பத்தி செய்ய இயலும் நிலை உருவாகி, தமிழ்நாட்டில் நடப்பு கே.எம்.எஸ்

2025-26 பருவத்தில் 25.11.2025 வரை சுமார் 14.50 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, மேற்படி செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் பெறுவதில் ஏற்படும் தாமதத்தினால் நெல் மணிகள் பாதிப்படைந்து தரக்குறைவு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் இக்கூட்டம், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று, பொது விநியோகத் திட்டம் உள்ளிட்ட பிற நலத்திட்டங்களில் பயன்பெறும் மக்களுக்கும் - விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் துணை நிற்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடுமாறு ஒன்றிய அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 7

நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 17 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காடாக உயர்த்திடுக!

தமிழ்நாட்டில் நடப்பு 2025-2026 ஆண்டின் நெல் கொள்முதல் பருவம் 01.09.2025 முதல் தொடங்கி நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை, அதற்கு முன்பாகப் பெய்த கனமழை ஆகியவற்றால் அறுவடை செய்த நெல் மணிகள் அதிக ஈரப்பதத்தில் இருந்ததால், நெல்லினை விவசாயிகளால் உலர வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இதனால் அதிக ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயப் பெருங்குடி மக்களும், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் கோரிக்கை வைத்துள்ள நிலையில், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் 17 விழுக்காடு ஈரப்பதத்தில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை தளர்வு செய்து, 22 விழுக்காடு வரை கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் மத்திய குழுவினர் நான்கு நாட்கள் காவிரி டெல்டா பகுதிகள் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு, கள நிலவரத்தைத் தெரிந்துகொண்ட பிறகும், "ஈரப்பதம் 22 விழுக்காடு அளிக்க வேண்டும்" என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது 18.11.2025 கடிதம் மூலம் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு வைத்த கோரிக்கையை இதுவரை ஒன்றிய அரசு ஏற்கவில்லை.

அக்கோரிக்கையை ஏற்கவில்லை என்பதோடு, "சேதமடைந்த, நிறம் மங்கிய, முளைவிட்ட மற்றும் பூச்சி துளைத்த தானியங்களுக்கு ஈரப்பதத்தை ஒன்றிய அரசு 5 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடாக வரம்பை உயர்த்தியுள்ளது. அதுவும் முளைவிட்ட மற்றும் பூச்சி துளைத்த தானியங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்பு 4 விழுக்காடுக்கு மிகாமல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நிறம் மங்கிய நெல்லிற்கு மட்டும் 2 விழுக்காடு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்திருக்கிறது. இதனால் ஈரப்பத அளவு அதிகரிக்கப்படும் என எதிர்பார்த்த விவசாயிகள் இன்று ஏமாந்து நிற்கிறார்கள். 2024-2025 மற்றும் 2025-2026 ஆகிய இரு கொள்முதல் பருவங்களிலும் ஈரப்பதத்தை அதிகரித்துக் கொடுக்காமல் விவசாயிகளை வஞ்சித்து வரும் ஒன்றிய அரசுக்கு இக்கூட்டம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, உடனடியாக ஈரப்பதத்தின் அளவை அதிகரித்து அனுமதியளிக்குமாறு வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 8

கல்வியில் காவிக் கொள்கையைத் திணிக்கும் பேயாட்டத்தை நிறுத்தி 3548.22 கோடி ரூபாய் சமக்ர சிக்ஷா நிதியை உடனே விடுவித்திடுக!

தமிழ்மொழியை, இந்திய நாட்டிற்கே முன்னோடியாக, அனைத்து மாநிலத்திற்கும் முன்மாதிரியாக விளங்கும் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையைச் சிதைத்திடவும், பேரறிஞர் அண்ணாவால் நிறைவேற்றப்பட்டு, தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க இருமொழிக் கொள்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்திடவும் ஒன்றிய அரசு திணிக்க நினைக்கும் புதிய கல்விக் கொள்கையை ஆணித்தரமாக எதிர்த்து வரும் திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டிற்கு என்று தனிக் கல்விக் கொள்கையை - சமூகநீதி அடிபிறழாமல் வகுத்து வைத்துள்ள நிலையில், கல்விக்காக வழங்கப்படும் நிதியை ஒன்றிய அரசு தொடர்ந்து மறுத்து, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு வஞ்சகம் செய்து வருகிறது. 2024-2025 மற்றும் 2025-2026-ஆம் ஆண்டுகளுக்கான ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு "சமக்ர சிக்ஷா" திட்டத்தின்கீழ் விடுவிக்கப்பட வேண்டிய 3548.22 கோடி ரூபாயை இதுவரை ஒன்றிய அரசு விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. ஒன்றிய அரசினை வழிநடத்தும் ஒரு அரசியல் கட்சி தனது கட்சியின் மதவாத கல்விக் கொள்கையை, சமூகநீதிக்குப் புறம்பான கல்விக் கொள்கையை மற்ற மாநிலங்களின் மீது திணிக்க கூட்டாட்சி நெறிமுறைகளுக்கு மாறாக, ஒன்றிய - மாநில நிர்வாக உறவு மற்றும் நடைமுறைகளுக்கு மாறாக நிதியை நிறுத்தி வைப்பது என்பது இதற்கு முன்பு ஒன்றியத்தில் ஆட்சி செய்த எந்தக் கட்சியும் செய்யாத அவலம் நிறைந்த - அராஜகமான நடவடிக்கையாகும். "பா.ஜ.க.வின் காவிக் கொள்கையை ஏற்காவிடில் ஒன்றிய அரசின் நிதி இல்லை" என்பது ஆட்சிக்கும் - கட்சிக்கும் வேறுபாடு தெரியாமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு நடத்தும் பேயாட்டம் என்பதை இக்கூட்டம் பதிவு செய்து, ஒன்றிய அரசின் தமிழ்நாட்டு மக்கள் விரோதச் செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்து, தமிழ்நாட்டிற்கு உடனடியாக சமக்ர சிக்ஷா நிதியை விடுவித்திட இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 9

ஒன்றிய அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளால் தொழிலாளர்களின் உரிமை பாதிக்கப்படக்கூடாது!

தொழிலாளர்களின் உரிமைகளை - அவர்களின் நலன்களைப் பாதிக்கும் வகையில் "நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை" கொண்டு வந்துள்ளதையும், நாட்டிலேயே மிகச்சிறந்த தொழிலாளர் நலன் காக்கும் அமைப்புசாரா நலவாரியங்களை உருவாக்கியுள்ள தமிழ்நாட்டின் தொழிலாளர் நலத் திட்டங்களை முடக்கும் வகையில் அமைந்துள்ளதையும், நம் மாநிலத்தில் உள்ள அமைப்பு சாரா நலச் சட்டமே தொழிலாளர் நலன்களை பாதுகாக்கும் என்ற நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் எடுத்துவைத்த கருத்துகளை ஏற்று இதுவரை விலக்கு அளிக்காமலும் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இக்கூட்டம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. ஒத்திசைவுப் பட்டியலில் இருந்தாலும், தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்புகள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளை, நலன்களைப் பாதிக்கக் கூடாது என்று இக்கூட்டம் ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 10

இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விரைவாக விடுவிப்பதற்கும் நிரந்தரத் தீர்வு அவசியம்.

தமிழ்நாடு 1076 கி.மீ நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது. இங்கு மீன் பிடித்தலை வாழ்வாதாரமாகக் கொண்ட ஏராளமான கடலோர சமூகங்கள் உள்ளனர். சமீப காலங்களில், இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களைப் பறிமுதல் செய்வதும் கடும் வேதனையான வழக்கமாகியுள்ளது. இந்த இடையறாத கைது நிகழ்வுகளால் மாநிலத்தில் உள்ள ஏழை மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளை விடுவிப்பது தொடர்பாக மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு 11 கடிதங்களும், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 74 கடிதங்களும் எழுதியும் இலங்கை அரசால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது மற்றும் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர்வது தமிழ்நாட்டு மீனவச் சமூகத்தினரிடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நாள்வரை 247 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டும், 96 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டும் இலங்கை அரசின் சிறைக் காவலில் உள்ளதால் அந்த குடும்பங்கள் எல்லாம் துயரமிகு நாட்களில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்நாள்வரை பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை நாட்டுடைமையாக்கும் இலங்கை அரசின் சமீபத்திய அதீத கொள்கை என்பது, தமிழ்நாட்டில் உள்ள இலட்சக்கணக்கான மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் பாதிக்கும் நடவடிக்கையாகும். கடுமையான அபராதம் விதிப்பதையும், கைது செய்யப்பட்ட படகுகளை நாட்டுடைமையாக்குவதையும் தடுக்க ஒன்றிய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை ஆழ்ந்த கவலையுடன் பதிவு செய்யும் இக்கூட்டம், இப்பிரச்சனையில் மாண்புமிகு பிரதமர் அவர்கள் நேரடியாகக் கவனம் செலுத்தி நிரந்தரத் தீர்வு காணவும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி உபகரணங்களுடன் கூடிய படகுகளையும் உடனடியாக விடுவிக்க முயற்சிகள் எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 11

பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களின் பணி மற்றும் பதவி உயர்வினை ஒன்றிய அரசு பாதுகாத்திடுக.

'23-08-2010ஆம் தேதிக்கு முன்னர் பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியராகப் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும் என்றும், தவறினால் ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்படுவர்' என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், ஆசியர்களிடையே ஏற்பட்டுள்ள அச்ச உணர்வினை போக்கும் வகையில், தமிழ்நாட்டில் பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மாண்புமிகு முதலமைச்சரிடம் தொடர்ந்து வைத்த கோரிக்கையினை ஏற்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், "இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம்-2009 (RTE Act 2009) மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் சட்டம்-1993 (NCTE Act 1993) ஆகியவற்றில் உரிய சட்டத் திருத்தம் கொண்டு வந்து, தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் பணி மற்றும் பதவி உயர்வினை ஒன்றிய அரசு பாதுகாக்க வேண்டும்" என்று கடந்த 25.11.2025 அன்று இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

எனவே, இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம்-2009 (RTE Act 2009) மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் சட்டம்-1993 (NCTE Act 1993)ஆகியவற்றில் உரிய சட்டத் திருத்தம் கொண்டு வந்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் 23.8.2010 முன்பு பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் பணி மற்றும் பதவி உயர்வினை ஒன்றிய அரசு பாதுகாக்க வேண்டும் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் : 12

கிராமப் புற ஏழை மக்களுக்கு முக்கியமான திட்டமாக இருக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியை உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்கிடுக!

கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் முக்கியத் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து ஒவ்வொரு முறையும் தாமதப்படுத்தி - இந்த திட்டத்தினை முடக்குவதிலேயே ஒன்றிய அரசு கவனம் செலுத்தி வருவதற்கு இக்கூட்டம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு பொருட்கூறு செலவினம் தொடர்பாக மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய 1290 கோடி ரூபாயை உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும்; இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 30 கோடி மனித நாட்களுக்கு வழங்கப்பட்ட பணிகளுக்கான உத்தரவினை நடப்பாண்டில் 12 கோடி மனித நாட்களாகக் குறைத்துள்ளதை உடனடியாக உயர்த்தி இந்த ஆண்டும் 30 கோடி மனித நாட்களுக்கு அனுமதி ஆணை வழங்கிட வேண்டும் எனவும் இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+