ஹேக்கர்ஸ் பிடியில் முரசொலி ஃபேஸ்புக் பேஜ்-ஆபாச படங்களுடன் அட்டூழியம்- பணம் கேட்டு மிரட்டல் என புகார்
சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு ஆபாச படங்கள் பதிவிடப்படுவதாகவும் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் சென்னை போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சிகளின் ஃபேஸ்புக் பக்கங்களை ஹேக்கர்கள் குறி வைத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழுவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம், ஹேக்கர்கள் பிடியில் சில நாட்களாக இருந்தது. இதனையடுத்து சிபிஎம் பேஸ்புக் பக்கத்திலேயே ஹேக்கர்ஸால் ஊடுருவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது சிபிஎம் ஃபேஸ்புக் பக்கம் ஒருவழியாக மீட்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து முரசொலி நாளிதழின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்துள்ளனர் மர்ம நபர்கள். அத்துடன் இல்லாமல் அப்பக்கத்தில் ஆபாச படங்கள், வீடியோக்களையும் பதிவேற்றி அட்டூழியம் செய்து வருகின்றனர்.
இதனிடையே முரசொலி ஃபேஸ்புக் பக்கத்தை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் எனில் பிட்காயின் மூலம் பணம் கொடுக்க வேண்டும் எனவும் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்தும் இருக்கின்றனர். இது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசில் முரசொலி நிர்வாகம் தரப்பில் புகார் தரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த உண்மைத்தன்மை தெரியாமல், முரசொலியின் ஃபேஸ்புக் பக்கங்களில் ஆபாச படங்கள் பதிவேற்றப்படுவதாக எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு முன்னர் முரசொலியில் அதிகாரப்பூர்வ வெப்சைட் முடக்கப்பட்டு மீட்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முரசொலி பத்திரிகை வரலாறு: முரசொலி நாளிதழின் இணையப் பக்கத்தில், கருணாநிதி பெற்ற முதற்குழந்தை முரசொலி. அதற்கு அவர் தந்தையும் தாயுமானார். கருணாநிதியின் அத்தனை போர்க்குணங்களும் முரசொலிக்கு உண்டு. ஏனெனில் கருணாநிதியின் மற்றொரு வடிவமே முரசொலி. அவரின் எல்லா மெய்ப்பாடுகளையும் முரசொலி காலந்தோறும் எதிரொலித்தே வந்து கொண்டிருக்கிறது. முரசொலி அரசியல் மேடையாக, சமுதாய அரங்கமாக, இலக்கியப் பூஞ்சோலையாக இரண்டாம் உலகப் போரின் போது (1939-45) பிறந்த ஏடாகும். இவ்வேடு முதலில் துண்டறிக்கைகளாகவே வெளியிடப்பட்டு வந்தது. கருணாநிதியின்18-ஆம் வயதில் முரசொலி (10-8-1942) முதன் முதலில் வெளியாயிற்று. அப்போது போர்க் காலமாதலால் அந்த துண்டறிக்கையை நல்ல தாளில் கூட அச்சடிக்க முடியவில்லை. கிடைத்த தாள்களில் அச்சிடப்பட்டு வெளிவந்து கொண்டிருந்தது. கிராப்ட் தாள்களில் கூட அச்சிடப்பட்டன. முரசொலி துண்டறிக்கைகள் என்பது இதழுக்குரிய (Periodical) பாங்குடன் வெளியிடப்படவில்லை. இவ்விதழ் கூட 1942 முதல்1944 வரை தான் வெளிவந்தது என விவரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications