அமைச்சரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்த திமுக ஊராட்சி தலைவர்., காஞ்சிபுரம் கலெக்டர் மீது புகார்
சென்னை: சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியில் ஆதனூர் ஊராட்சி இருக்கிறது. இங்கு 15 ஆயித்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். குன்றத்தூர் ஒன்றியம் மற்றும் ஆதனூர் ஊராட்சி உள்பட சென்னையின் புறநகர் பகுதிகளில் பல காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவை ஆகும்.. இந்நிலையில் காஞ்சிபுரம் கலெக்டர் நெருக்கடி கொடுப்பதாக கூறி ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் அமுதன் தனது ராஜினாமா கடிதத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையின் புறநகர் பகுதிகளாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பகுதிகள் உள்ளன. அங்குள்ள பகுதிகள் எல்லாமே அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்களின் கட்டுப்பாட்டில் தான் வரும். சென்னை ஒன்றை தவிர தமிழ்நாட்டின் அத்தனை மாவட்டங்களிலும் அதிகாரங்கள் முழுமையாக கலெக்டரின் கட்டுப்பாட்டில் தான் வரும்.. கலெக்டரின் உத்தரவுப்படி தான் எல்லாமே நடைபெறும்.. மாவட்ட ஆட்சி தலைவரே அனைத்து துறையின் அதிகாரப்பூர்வமாக தலைவராக இருக்கிறார். இந்த சூழலில் ஊராட்சிகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க மாவட்ட ஆட்சி தலைவர்கள் அடிக்கடி ஆய்வு நடத்துவார்கள்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆதனூர் ஊராட்சியில் கொருக்கந்தாங்கள், பள்ளஞ்சேரி, டி.டி.சி. நகர், பலராமபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகிறார்கள், ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த தமிழ் அமுதன் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அவர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் நெருக்கடியால், ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, தனது ராஜினாமா கடிதத்தை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த ராஜினாமா கடிதத்தில் தமிழ் அமுதன் கூறுகையில், குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்ற நாள் முதல் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன். தற்போது காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர், கடந்த பிப்ரவரி மாதம் எனக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அதில் இணையதளம் வாயிலாக கட்டிட வரைபடம் மனை பிரிவுகளுக்கு 90 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் ஆதனூர் ஊராட்சியில் 15 மனுக்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் நிலுவையில் உள்ளது. இது சம்பந்தமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரின் கடிதத்திற்கு உரிய விளக்கத்தோடு ஊராட்சி மன்ற தலைவர் என்ற முறையில் விளக்கம் அளித்து கடிதம் அனுப்பி இருந்தேன். ஆனால் நான் அனுப்பிய விளக்க கடிதத்துக்கு உரிய பதில் இன்றுவரை கலெக்டர் மூலம் அளிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக கடந்த 22-ந்தேதி மீண்டும் கலெக்டர் 12 குற்றச்சாட்டுகளை கூறி என்னிடம் விளக்கம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார்.
ஏற்கனவே நான் அளித்த விளக்கத்துக்கு பதில் தராமல் மீண்டும் மீண்டும் புதிய குற்றச்சாட்டுகளை எழுப்பி விளக்கம் கேட்கின்றனர். அவர் ஏன் உங்கள் பதவியை பறிக்க கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். எனவே பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவியை தங்கள் அனுமதியுடன் ராஜினாமா கடிதத்தை தங்களிடம் சமர்ப்பிக்கிறேன்" இவ்வாறு அதில் கூறியுள்ளார். ஆதனூர் தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் தனது ராஜினாமா கடிதத்தை, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், அமைச்சருமான அன்பரசனிடம் கொடுத்துள்ள சம்பவம் தி.மு.க.வினர் மற்றும் ஆதனூர் பொதுமக்களிடையே இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications