இனி எல்லாம் "அவரை" சுத்திதான்.. உதயநிதிக்கு இருக்கும் பெரிய டாஸ்க்.. புட்டு புட்டு வைத்த எக்ஸ்பர்ட்!
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இணைக்கப்பட்டது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமி சுப்ரமணியன் ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
ஒன்றரை வருடங்கள்.. சரியாக 19 மாதங்கள் கழித்து தமிழ்நாடு அமைச்சரவை நேற்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நேற்று தமிழ்நாடு அமைச்சராக பதவி ஏற்று உள்ளார். இவருக்கு விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் சிறப்பு செயல்திட்ட செயலாக்க துறையும் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
மொத்தம் முதல்வர் ஸ்டாலினையும் சேர்த்து நேற்று 11 அமைச்சர்களின் இலாக்காக்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இணைக்கப்பட்டது குறித்து மூத்த பத்த்ரிக்கையாளர் லட்சுமி சுப்ரமணியன் ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவரின் பேட்டி பின்வருமாறு..

பேட்டி
கேள்வி: உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: எதிர்க்கட்சிகள் இதை எதிர்ப்பது சரியான ஒன்றுதான். திமுகவை எதிர்க்கட்சிகள் எதிர்க்க ஒரு முக்கிய காரணம் வாரிசு அரசியல். இப்போது திமுகவே எதிர்க்கட்சிகளுக்கு தீனி போட்டுள்ளனர். திமுக கொஞ்சம் பொறுத்து இருக்கலாம். இனி இதை வைத்துதான் வாதம் செய்வார்கள். திமுக செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்கிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது. 2007ல் கனிமொழி அரசியலுக்குள் வந்து, எம்பி ஆனார். அப்போதும் அது பெரிய சர்ச்சையானது. அந்த 5 ஆண்டுகளில் திமுகவிற்கு பெரிய அளவில் இறக்கங்கள் ஏற்பட்டது. அதன்பின் 2ஜி வழக்கில் கனிமொழி பெயர் அடிபட்டது. இது எல்லாம் வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை ஏற்படுத்தியது. திமுக மீண்டும் மீண்டும் இதே தவறை செய்கிறதோ என்று தோன்றுகிறது.

உட்கட்சியினர் ஏற்பு
ஆனால் திமுக உட்கட்சியினர் இதை ஏற்றுக்கொண்டுவிட்டனர். இப்போது இல்லை என்றால் எப்போது உதயநிதிக்கு பதவி கொடுக்க முடியும் என்று திமுகவினர் கேட்கின்றனர். கட்சிக்குள் அவர் தகுதி வாய்ந்த தலைவராக பார்க்கப்படுகிறார். ஏனென்றால் அவரின் பிரச்சாரங்கள், பேசிய விதங்கள் சிறப்பாக இருந்தது. முக்கியமாக அவர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் செயல்பட்ட விதமும் கவனம் பெற்றது. அவர் ஒரு தகுதி வாய்ந்த நபராகவே காட்ட படுகிறார். அதற்கு ஏற்றபடி அவர் செயல்படுவாரா என்பதை பொருத்து இருந்தான் பார்க்க வேண்டும்.

விமர்சனம் இல்லை
கேள்வி: ஒன்றரை வருட திமுக ஆட்சி மீது பெரிதாக விமர்சனங்கள் இல்லை.. அப்படி இருக்கும் போது உதயநிதி அமைச்சர் ஆனது விமர்சனங்களை ஏற்படுத்துமா?
பதில்: திமுக மீது பெரிதாக விமர்சனங்கள் இல்லை. ஆதார் கார்ட் - இபி இணைப்பு, சொத்து வரி உயர்வு ஆகியவை மக்கள் இடையே விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. மேல் மட்ட தலைவர்களுக்கு இது தெரியுமா? தெரியாதா? என்பது தெரியவில்லை. இது கண்டிப்பாக தேர்தல் நேரத்தில் மக்கள் இடையே பிரச்சனையாக எதிரொலிக்கும். ஆதார் கார்டை மின் அட்டையுடன் இணைந்தால், இணைக்கப்படும் எல்லா கணக்கிற்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்குமா? அல்லது ஒரு இணைப்பிற்கு மட்டும்தான் இலவச மின்சாரமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது எத்தனை முறை விளக்கம் அளித்தாலும் மக்கள் இடையே குழப்பம் நிலவுகிறது. மக்கள் மத்தியில் இதற்கு அதிருப்தி உள்ளது.

தேர்தல்
இன்னும் தேர்தலுக்கு ஒன்றரை வருடம்தான் இருக்கிறது. மக்களவை தேர்தல் வேறு, மாநில தேர்தல் வேறு என்றுதான் இந்த முடிவை எடுத்துள்ளனர். அதாவது மக்களவை தேர்தலை உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி பாதிக்காது என்றுதான் இதை பார்க்கிறேன். ஆனால் இன்னும் ஒரு டேர்ம் தள்ளிப்போய் பதவியை கொடுத்து இருக்கலாம். ரொம்ப சீக்கிரமாக அமைச்சர் பதவி கொடுத்துவிட்டனர். ஆனால் இந்த விமர்சனங்கள் எல்லாம் உதயநிதியை சுற்றித்தான் நகர போகிறது.

வாரிசு அரசியல்
கேள்வி: ஸ்டாலினுக்கு பதவி தந்த போது வாரிசு அரசியல் விமர்சனத்தை கருணாநிதி சிறப்பாக கையாண்டார்.. அதேபோல் ஸ்டாலினும் வாரிசு அரசியல் விமர்சனத்தை சமாளிப்பாரா?
பதில்: இது தேவையற்ற ஒரு கேள்வி என்று நினைக்கிறேன். அப்படி ஒப்பிட்டு பார்க்க முடியாது. அவரால் சமாளிக்க முடியாது என்றால் உதயநிதிக்கு பதவியே கொடுத்திருக்க மாட்டார். தன்னுடைய மகனின் படம் எப்படி இருக்கிறது என்று அமைச்சரிடம் கேட்கிறார் முதல்வர். தனது மகனின் படத்தை கூட கவனிக்கும் முதல்வர் அவரின் அமைச்சரவை செயல்பாடுகளையும் கண்டிப்பாக கவனிப்பார். அவரின் செயல்பாட்டை பொறுத்து இருந்துதான் பார்க்கக் வேண்டும், என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications