ஜெ. ஸ்டைல்.. சீட்டுக்களை கலைத்துப் போடும் மு.க.ஸ்டாலின்! சீனியர்களுக்கு சீக்ரெட்டாய் போட்ட ஸ்கெட்ச்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது திமுக. கடந்த காலங்களில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா செய்தது போல கட்சியில் பல அதிரடி மாற்றங்களை செய்ய இருக்கிறார். குறிப்பாக தேர்தலில் சீனியர்களை ஓரம் கட்ட முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்டவற்றில் சிக்கிய அமைச்சர்களை கழட்டிவிட திட்டமிட்டு இருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் மூத்த அமைச்சர்கள் பதற்றத்தில் உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
திமுக தலைவராக முதன்முறையாக தான் சந்தித்த சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று முதல்முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து அவரது தலைமையில் திமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வென்றுள்ளது.

குறிப்பாக 2021 சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது. அதற்கு முன்னர் அதாவது 2011, 2016 தேர்தல்களில் திமுக தோல்வியை சந்தித்தது. 2006 சட்டசபை தேர்தலில் பெரும்பான்மைக்கும் குறைவான இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் கேஎன் நேரு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
கூட்டணி தொடர்பான பேச்சு, வேட்பாளர்கள் தேர்வு, ஆலோசனை என அந்த தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் ஜெயலலிதா போல சில அதிரடி முடிவுகளை எடுக்க இருக்கிறார் ஸ்டாலின். 2021 சட்டமன்ற தேர்தலில் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோர் பல மாவட்டங்களில் சில நிர்வாகிகள் தங்களைத் தவிர மற்றவர்கள் வளர்ந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக தலைமைக்கு புகார் அளித்தார். இதனால் பி.கே.வுக்கு எதிராக சில சீனியர்கள் திரும்பினர் .
தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிரசாந்த் கிஷோரின் வியூகங்களும் காரணம் என்பதை ஸ்டாலின் உணர்ந்திருந்தார். இந்த முறை பிகே இல்லாவிட்டாலும், வியூகத்திற்காகவே ஒரு குழுவை ஆரம்பித்து தேர்தல் வியூகங்களை வகுத்து தமிழ்நாடு முழுவதும் சர்வே நடத்தியது ஒரு 'பேனா' நிறுவனம். அதில் ஏற்கனவே பிகே சொன்ன கருத்து உண்மைதான் என்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக புகார் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், அமைச்சர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டது. அதற்கு பிறகு அவர்களது செயல்பாடுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக திருவள்ளூர், விழுப்புரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களின் பேச்சு கட்சிக்குள்ளும் பொது வெளியிலும் பெரிய கெட்ட பெயரை ஆட்சிக்கு பெற்று தந்தது. தொடர்ந்து சர்ச்சையாகவே அவர்கள் பேசி வந்த நிலையில் அமைச்சரவை மாற்றத்தால் சற்று அவர்களை அதட்டி வைத்தது திமுக தலைமை.
இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் திமுக தலைவர் ஸ்டாலின், ஜெயலலிதா போல சில அதிரடி மாற்றங்களை செய்ய இருக்கிறார். அதாவது திமுகவின் அமைச்சர்கள் குறுநில மன்னர்கள் போலவே செயல்பட்டு வரும் நிலையில் இந்த முறை அவர்களை ஓரம் கட்டி விட்டு கட்சியில் உழைத்தவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலினின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் எனவும் அவரது ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
காரணம் கட்சியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் நிச்சயம் இளைஞர்கள் தேவை. கலைஞர் இருந்தபோது எப்படி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தினாரோ, ஸ்டாலின் எப்படி உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தினாரோ, அதேபோல அந்தந்த மாவட்டங்களில் மூத்த அமைச்சர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து இளைஞர்களையும் கட்சியில் வளர விட வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறார். ஏற்கனவே அதிமுக, தவெக, பாஜக என திமுகவுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் கடும் சவால் காத்திருக்கும் நிலையில் உள்ளூர் சீனியர்களின் உள்ளடி வேலைகளால் தேர்தல் வேலைகளில் பின்னடைவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில மூத்த சீனியர்களை ஓரம் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் எட்டு மூத்த அமைச்சர்களுக்கு வரும் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாது என்கின்றனர் திமுகவினர்.












Click it and Unblock the Notifications