"அரை டாக்டரம்மா" அலிஷா அப்துல்லா.. விபத்திற்கு காரணம் யாருனு பாருங்க.. ராஜீவ் காந்தியின் நச் பதிலடி!
சென்னை: சென்னையில் இளம் இன்ஜினியர் சோபனா உயிரிழப்புக்கு சாலைகளில் இருந்த குழியும், பள்ளமுமே காரணம் என்று பாஜகவின் அலிஷா அப்துலா விமர்சித்திருந்தார். இதற்கு திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி, இளம் இன்ஜினியர் உயிரிழந்த சாலை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இதனை செப்பனிடும் பொறுப்பு மத்திய அரசிடம் இருப்பதாகவும், செய்தியை சரியாக படிக்கவும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை போரூரைச் சேர்ந்தவர் சோபனா. 22 வயதாகும் இவர், கூடுவாஞ்சேரியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவரது தம்பி திருவேற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
தம்பிக்கு அதே பள்ளியில் நீட் பயிற்சி வகுப்புகளும் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று பள்ளிக்கு நேரமானதால் தனது தம்பியை சோபனா இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று கொண்டிருந்தார். தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில், மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்தார்.

இளம்பெண் உயிரிழப்பு
அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்த போது, பின்னால் வந்த மணல் லாரி சோபனா மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சோபனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமான உயிரிழந்தார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமான அவரது தம்பி உயிர் தப்பினார். சோபனாவின் உயிரிழப்பிற்கு சாலையில் இருந்த குழிகளே காரணம் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.

யார் காரணம்?
தொடர்ந்து சம்பவ இடம் வந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார், சோபனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் விபத்திற்கு பின் தப்பியோடிய லாரி ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பள்ளிக்கு தாமதமானதால், தம்பியை அழைத்து சென்ற போது சாலை விபத்தில் சிக்கி தம்பி கண்முன்னே அக்கா இறந்தார். சென்னையைச் சேர்ந்த இளம் பெண் சாலையில் இருந்த குழியால் உயிரிழந்த சம்பவம் பலரையும் உலுக்கியது. இதற்கு பாஜகவைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் தமிழக அரசை விமர்சித்தனர்.

அலிஷா அப்துல்லா விமர்சனம்
இதுகுறித்து பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், ஆடம்பரமான கார்கள், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், திரைப்படங்களுக்காக செலவழிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம்.. ஆனால் எங்களுக்கு நல்ல சாலை அமைக்க முடியவில்லை. அரசியல் நாடகங்களை ஒத்தி வைத்துவிட்டு, சாலைகளில் உள்ள குழிகளை சரி செய்யுங்கள். நாங்கள் வரி கட்டுகிறோம், குறைந்தபட்சம் நல்ல சாலைகள் அமைக்க வேண்டும் என்று கேட்கிறோம் என்று பதிவிட்டார்.

ராஜீவ் காந்தி பதிலடி
இதற்கு பதிலடி கொடுத்து திமுகவின் மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி, 'அரை' டாக்டரம்மா, விபத்து நடந்தது NHAI கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில்... இந்த சாலையை செப்பனிடும் பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது. அதற்கு இன்னமும் டெல்லி அனுமதி கொடுக்காமல் வைத்திருக்கிறது. பத்திரிக்கை செய்தியின் கடைசி இரண்டு பாராவை படியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications