திமுக அமைதிப் பேரணி.. சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க
சென்னை: அறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக சார்பில் அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் நாளை (பிப்ரவரி 3) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அமைதிப் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேரணியில், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் திமுகவினர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அண்ணா சிலை அருகில் இருந்து இந்தப் பேரணி தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், அமைதிப் பேரணி நடைபெறவுள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வரும் 03.02.2025 அன்று காலை 08.00 மணியளவில் அறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் வாலாஜா சாலை அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடம் வரை மவுன ஊர்வலம் செல்ல உள்ளார்கள்.
இது தொடர்பாக விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாகனங்கள் எளிதாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
1. போர் நினைவு சின்னத்தில் இருந்து நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் சாலை செல்ல அனுமதிக்காமல் கொடி மரச் சாலை வழியாக திருப்பி விடப்படும்.
2. கலங்கரை விளக்கத்தில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் காந்தி சிலை வரை அனுமதிக்கப்பட்டு இராதா கிருஷ்ணன் சாலை வழியாக திருப்பி விடப்படும்.
3. பெல்ஸ் சாலை மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை செல்ல அனுமதிக்கப்படாது வாலாஜா சாலை X பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை X திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு அண்ணா சிலை வழியாக செல்லலாம்.
4. மவுன ஊர்வலம் வாலாஜாயில் வரும் போது வாகனங்கள் அண்ணாசிலையில் இருந்து பெரியார் சிலை நோக்கி திருப்பி விடப்படும்.
அதனால் காலை நேரத்தில் அண்ணாசாலை, வாலாஜா சாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் பயணத்தைத் திட்டமிடலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஏற்ப வாகன ஓட்டிகள் தங்களுடைய பயணங்களை தயார்படுத்திக் கொள்ளலாம் என்றும், வாகன ஒட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications