ரூ.68,000 சம்பாதிக்கும் "அவங்களுக்கு" இதான் கட்ஆஃப்.. கொடுமை.. கொடுமை.. திமுக ராஜீவ்காந்தி பாய்ச்சல்
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் ஜாதியினருக்கு அறிவிக்கப்பட்ட 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், பழங்குடியினர் மற்றும் காது கேளாத மாற்று திறனாளிகளை விட மயிலாப்பூர் அய்யர் குறைவாக மார்க் எடுத்தால் அரசு வேலைக்கு போய்விடலாம் என திமுகவின் ராஜீவ்காந்தி விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் Staff Selection Commission (SSC) நடத்திய மொழிப்பெயர்ப்பாளர் (இந்தி) தேர்வின் கட்ஆஃப் மதிப்பெண்கள் குறித்த விவரம் வெளியாகியிருந்தது. இதனை குறிப்பிட்டு மேற்குறிப்பிட்ட விமர்சனத்தை ராஜீவ்காந்தி வைத்துள்ளார்.
இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என திமுக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கு
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து அதற்கேற்றாற்போல் அரசியலமைப்பு சட்டத்தின் 103வது பிரிவில் திருத்தத்தையும் மேற்கொண்டது. ஆனால் இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சீராய்வு மனு
தீர்ப்பில், மத்திய அரசு கொண்டு வந்த திருத்தம் செல்லும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. இதற்கு திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தன. இந்நிலையில், நேற்று திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு விசிக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதேபோல நீதிமன்றத்தின் உத்தரவை தமிழ்நாட்டில் ஆணையம் அமைத்து அமல்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. அதிமுக மற்றும் பாஜக ஆகியவை இக்கூட்டத்தை புறக்கணித்தன.

கட்ஆஃப்
இந்நிலையில், சமீபத்தில் Staff Selection Commission (SSC) நடத்திய மொழிப்பெயர்ப்பாளர் (இந்தி) தேர்வின் கட்ஆஃப் மதிப்பெண்கள் குறித்த விவரம் வெளியாகியிருந்தது. இதனை குறிப்பிட்டு திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தி விமர்சனம் செய்துள்ளார். அதாவது, SSC நடத்திய தேர்வில், ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு 82.50 மதிப்பெண்கள் கட்ஆஃபாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல பழங்குடி சமூகத்தினருக்கு 76.50, ஓபிசி பிரிவினருக்கு 110.50, பொதுப் பிரிவினருக்கு 134.24, எலும்பியல் குறைபாடுள்ளவர்களுக்கு (OH) 42.25, காது கேளாத மாற்று திறனாளிகளுக்கு(HH) 64.50, பார்வை திறன் குறைபாடுள்ள மாற்று திறனாளிகளுக்கு 40.75, மற்ற மாற்று திறனாளிகளுக்கு 50.25 என கட்ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன.

விமர்சனம்
ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு மட்டும் 51.25 மதிப்பெண் பெற்றால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டுள்ள ராஜிவ் காந்தி, "கூடலூர் காட்டில் வாழும் STயை விட.. காடுகளில் ஆடு மேய்க்கும் MBCயை விட காது கேட்காத, நடக்க முடியாத, கண் பார்வை இல்லா மாற்றுத்திறனாளி BC,SCயை விட.. மாதம் ரூ .68,000 சம்பாதிக்கும் சென்னை மயிலாபூரில் வாழும் அய்யர் குறைவாக மார்க்கு எடுத்தாலும் அரசு வேலைக்கு போகலாம்! இது தான் மோடி ஆட்சி!" என்று விமர்சித்துள்ளார்.

நிலைப்பாட்டில் மாற்றம்
முன்னதாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்பதாக கூறியிருந்த நிலையில், தனது நிலைப்பாடு குறித்து மீண்டும் பரிசீலிப்பதாக நேற்று கட்சியின் பொதுச் செயலாளர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருந்தார். இதனை வரவேற்பதாக முன்னாள் நிதியமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications