கவனிச்சீங்களா.. ஆளுநர் பேசும்போது "அந்த" வார்த்தை.. தமிழக அரசுடன் இணக்கம்.. மாற்றம் ஏன் தெரியுமா?
சென்னை: சமீப காலமாக, மத்திய அரசுடன் திமுக மென்மை போக்கை கடைப்பிடித்து வருவதாக தகவல்கள் கசிந்து வந்த நிலையில், நேற்றைய சட்டமன்ற நிகழ்வில் இது அப்பட்டமாகவே வெளிப்பட்டுவிட்டது..!
திமுகவை பொறுத்தவரை, எதற்காகவும், யாருக்காகவும் தன்னுடைய சித்தாந்தத்தை விட்டுக்கொடுப்பதில்லை.. எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் இருந்தே பாஜகவை சரமாரியாக விமர்சித்து வந்தது..
10 வருடம் கழித்து ஆட்சி அமைந்தபிறகும், அதில் இருந்து மாறுபடவில்லை.. மத்திய அரசு "ஒரே நாடு ஒரே மொழி, ஒரே இனம்" என்கிற கூற்றினை செயல்படுத்த முனைப்பு காட்டியதுமே, திமுக மேலும் தன் பிடிப்பில் உறுதியானது..

திமுக கூட்டணி
திராவிடத்தின் சிந்தனை அதிகமாக உள்ள பகுதி தமிழகம் என்பதால், இங்கு மத்திய அரசுக்கு எதிராக ஒரு அரசு வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் திமுக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை அக்கட்சி மேலிடம் நன்றாகவே உணர்ந்துள்ளது.. அதனால்தான் ஆரம்பம் முதலே மத்திய அரசு என்பதை, "ஒன்றிய அரசு" என்று சொல்லி கொண்டு வருகிறது.. இதே வார்த்தையைதான் திமுகவின் கூட்டணி கட்சிகளும் பயன்படுத்தி வருகிறார்கள்.

விவாதங்கள்
இப்படிப்பட்ட சூழலில் சமீபகாலமாகவே திமுகவின் போக்கில் ஒருசில மாற்றம் தென்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. பிரதமர் மோடியை வரவேற்பது குறித்த விவாதம் இன்றுவரை சோஷியல் மீடியாவில் நடந்து வருகிறது.. கோ பேக் மோடி சொன்ன திமுக, இன்று அவரை வரவேற்பது சரியா? என்ற கேள்வியும் எழுகிறது.. "இங்கு நமக்கு திட்டங்களின் தேவைக்குதான் அரசு இருக்கு. அரசு என்பது வேறு, கருத்தியல் என்பது வேறு. கருத்தியல் ரீதியான முரண்பாடுகள் இருந்தாலும், ஒரு அரசு எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் மக்களுக்கு எது நல்லது என்பதை கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று திமுக எம்பி கனிமொழி தந்த பதிலையும் நாம் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டி உள்ளது.

எதிர்பார்ப்பு
அதன்படியே நேற்றைய தினம் சட்டமன்றத்திலும் சில மாற்றங்களை பார்க்க முடிந்தது.. முதல் சட்டமன்ற கூட்டம் நேற்று கவர்னர் உரையுடன் துவங்கியது... மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கவர்னர் உரையில், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ற எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்தையே ஏற்படுத்தியிருந்ததாக பரவலாக கருத்து கூறப்பட்டது.. அதேபோல ஒன்றிய அரசு என்று ஒரே ஒரு இடத்திலும், வெளியுறவுத்துறை என்று ஒரு இடத்திலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரையில், "ஒன்றிய அரசு" என டெல்லிக்கு எதிராக அழுத்தமாக பதிவு செய்தது திமுக அரசு.

என்ன காரணம்?
ஆனால், நேற்றைய கவர்னர் உரையில் டெல்லியை வலியுறுத்தும் பல விஷயங்களில் மென்மையான போக்கினையே கையாண்டுள்ளனர். கவர்னருக்கு தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்ட ஆங்கில உரையில் கூட "யூனியன் கவர்மெண்ட்" என்று சொல்வதை பெரும்பாலும் தவிர்த்தே இருக்கிறது தமிழக நிதித்துறை. மத்திய அரசோடு மோதல் போக்கினை கடைப்பிடிக்க வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்ட யோசனையின் விளைவாகவே கவர்னர் உரையில் பல விசயங்கள் தவிர்க்கப்பட்டன என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்..

மக்கள் நலன்
ஆயிரம் கருத்து வேறுபாடுகள், கருத்தியல் ரீதியான கொள்கைகள், திராவிட சித்தாந்தங்களில் உறுதிப்பிடிப்பு போன்றவை திமுகவுக்கு இருந்தாலும், தமிழகம் என்று வரும்போது மக்களின் நலன் சார்ந்த விஷயங்களுக்கே முன்னுரிமை தர வேண்டி உள்ளது.. அப்படி யோசித்தால்தான், மக்களுக்கான நலத்திட்டங்களை, மாநிலங்களுக்கான சலுகைகளை மத்தியில் இருந்து பெற முடியும்.. இதற்காக மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கையாளும் நிர்ப்பந்தம் மாநில அரசுக்கு இருக்கவே செய்கிறது..

மாநில வளர்ச்சி
இது நமக்கு மட்டும் இல்லை, கேரளா போன்ற மாநிலங்களிலும் உண்டு.. மத்திய அரசை எந்நேரமும் சரமாரியாக விமர்சித்து கொண்டிருக்கும் கேரள அரசு, தங்கள் மாநில வளர்ச்சிக்கான உதவிகள் தேவையென்றால், நேரிலேயே சென்று, நாசூக்காக மத்திய அரசை கேட்டு வாங்கி வந்துவிடும்.. இதற்காகவே நல்லுறவை தொடர்ந்து பாஜக மேலிடத்துடன் அம்மாநிலம் பேணி வருகிறது.. இது தவறு என்று சொல்லிவிட முடியாது..
Recommended Video

நலன் சார்ந்த விஷயங்கள்
அதுபோலதான் தமிழக அரசும், ஒருவித மென்மையை கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.. மத்திய அரசை ஒரேயடியாக பகைத்து கொண்டால், இங்கே திணற வேண்டியது தமிழக மக்கள்தான் என்பதால், ஓரளவு மென்மை போக்கை கடைப்பிடித்து அதேசமயம், தன்னுடைய கருத்தியலை கொஞ்சமும் மாற்றிக் கொள்ளாமல் திமுக அரசியல் செய்து வருகிறது.. இதன் எதிரொலியாகத்தான் ஆளுநரை உரையில் அந்த மாற்றங்களும் நேற்றைய தினம் அரங்கேறியதாக சொல்லப்படுகிறது..!


Click it and Unblock the Notifications
